தலையங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

தலையங்கம்

புத்தி வந்தால் பக்தி போகும்

‘‘ராமன் கோவிலுக்கு – தேர்தல் முடிவிற்கு முன்பிருந்த காலம் வரை ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் பேர் வருகை தந்தனர்.
தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. இருப்பினும் கோவில் அறக்கட்டளை சார்பாக நிழற்கூரைகள் மற்றும் குடிநீர் தொடர்பான வசதிகளைச் செய்து தருகிறோம்.

வெயில் மற்றும் கோவிலின் அடுத்த நிலைப் பணிகள் நடந்துகொண்டு இருப்ப தால் கூட்டம் குறைந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன் – இருப்பினும் மீண்டும் கூட்டம் வரும்; அதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம்’’
இவ்வாறு கோவில் அறக்கட்டளைக்குழு உறுப்பினர் அனில் மிஸ்ரா 06.06.2024 அன்று பேட்டி அளித்துள்ளார்.
கடவுளை நம்பியோர் கைவிடப்படார் என்பார்கள். இது உண்மையல்ல என்று படார் என்று வெடித்துச் சிதறி விட்டது.

உருவமற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் சிவன் என்றும், பிரம்மா என்றும், விஷ்ணு என்றும், விஷ்ணு அவதாரங்கள் பத்து என்று கூறுவதும், இந்தக் கடவுள்களுக்கு மனைவிகள் உண்டு – பிள்ளைக் குட்டிகள் உண்டு என்றும் கூறி, அவர்களுக்கெல்லாம் உருவங்களை களி மண்ணாலும், சிமெண்டாலும் உலோகங்களாலும் செதுக்கி, அவர்கள் குடியிருக்க பிரமாண்டமான கோயில்களைக் கட்டுவதும், அவற்றுக்கு ஆறு கால பூஜை, படையல் என்பதும், அந்தக் கடவுள்களுக்கும் பக்தர்களுக்குமிடையே தரகர்கள் பூதேவர்களான பார்ப்பனர்கள் என்பதும் எவ்வளவுப் பெரிய மோசடியும், அறிவுக் கேடும், சுரண்டலும் ஆகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இந்த உண்மையான நிலைகளை மக்களிடம் விளக்கினால், அய்யய்யோ கடவுளை மறுக்கும் நாத்திகர்கள் என்றும் கூச்சல் போடுவது, வழக்குப் போடுவது எல்லாம் எந்த வகையில் சரியானதும், நியாயமானதும் ஆகும்?

தேர்தலுக்காக அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டி, அதில் ‘பால ராமன்’ உருவத்தை வைத்து ‘ஜால வித்தை’ காட்டி, மக்களின் பாமரத்தனமான பக்தி உணர்வை தேர்தலில் வாக்குகளாக மாற்றிடத் திட்டமிடப்பட்டது.
அந்தோ பரிதாபம், இராமன் கை கொடுக்கவில்லை – பக்தர்களும் கை கொடுக்கவில்லை.

விளைவு, அயோத்தி கோயில் உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியிலேயே பி.ஜே.பி. வெற்றி பெறவில்லை.
ஆரம்பத்தில் ராமன் கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைந்து விட்டது.
பக்தர்கள் வருகைக்காக அயோத்தி யில் புதிய விமான நிலையம் உருவாக்கப் பட்டதுதான் மிச்சம். பயணிகள் வராமையால் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்குப் பிறகாவது புத்தி வந்தால் சரி! ‘‘பக்தி வந்தால் புத்தி போகும் – புத்தி வந்தால் பக்தி போகும்’’ என்ற தந்தை பெரியாரின் கருத்தை எண்ணிப் பார்ப்பார்களாக!

No comments:

Post a Comment