‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா – சந்தா வழங்கும் விழா!
‘விடுதலை’யால் தாழ்ந்தவர் எவரும் இல்லை! ‘விடுதலை’யால் வாழ்ந்தவர் உண்டு!
‘விடுதலை’ வாழ்ந்தால் யாரே தாழ்வர்?
‘விடுதலை’ வீழ்ந்தால், யாரே வாழ்வர்?
சென்னை, ஜூன் 7 ‘விடுதலை’யால் தாழ்ந்தவர் எவரும் இல்லை! ‘விடுதலை’யால் வாழ்ந்தவர் உண்டு. எனவே, ‘விடுதலை’ வாழ்ந்தால் யாரே தாழ்வர்? ‘விடுதலை’ வீழ்ந்தால், யாரே வாழ்வர்? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 1.6.2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
என்ன அந்த லட்சிய வெற்றி தெரியுமா?
மோடி என்பவர், மதவெறியைக் கொண்டு, ஜாதி வெறியைக் கொண்டு தன்னை உயர்த்திக்கொண்ட ஒரு பிம்பத்தை தொடர்ந்து ஒரு 10 ஆண்டுகாலமாக உருவாக்கிக் கொண்டே வந்தார்.
முதலில் ‘ச்சாய்வாலா’ என்று ஆரம்பித்து, பிறகு ‘சவுக் கிதார்’ என்று சொல்லி, கடைசியில் ‘கடவுள் அவதார மாகவே’ ஆகிவிட்டார்.
பொதுமக்களும் கேலி செய்யக்கூடிய
அளவிற்கு வந்திருக்கிறது!
இன்றைக்கு எல்லா பக்கமும், எல்லா தலைவர்களும் ஒன்று சேர்ந்து, பொதுமக்களும் கேலி செய்யக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில், ‘கடவுள் அவதாரம் எடுத்தால், இதுபோன்ற வேலைகளையெல்லாம் கடவுளர்கள் செய்வார்களா?’ என்று கேட்கிறார்கள்.
அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்று சொன்னால், ‘நான் எதுவும் செய்யவில்லை; கடவுள்தான் உத்தரவு கொடுத்தார்’ என்று சொல்வதற்காகத்தான்.
ஒரு பக்கம் ராகுல் காந்தி, மற்றொரு பக்கம் அகிலேஷ் யாதவ், இன்னொரு பக்கம் தேஜஸ்வி போன்றவர்கள், மற்ற தலைவர்கள் எல்லாம்கூட ‘மோடியின் கடவுள் அவதாரம்’பற்றி பேசினார்கள்.
இந்தியாவில் உள்ளவர்களும்
பேச ஆரம்பித்துவிட்டார்கள்!
இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுளைப்பற்றி பேசுவது, திராவிடர் கழகத்துக்காரர்கள் மட்டும்தான், ‘விடுதலை’ நாளேடு மட்டும்தான், தமிழ்நாடு மட்டும் தான் என்று போய், இன்றைக்கு இந்தியாவில் உள்ள பகுதிகளிலும், எல்லா கட்சிகளும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிக்காரர்கள் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஸநாதனம் என்று பேசியதை வைத்து, வீழ்த்திவிடலாம் என்று நினைத்தார்கள் முதலில்.
பெரியார் வெற்றி பெற்றார்!
‘விடுதலை’ வெற்றி பெற்றது!
இப்பொழுது, மோடி அவர்கள் ‘கடவுள் அவதாரம்’ என்று தன்னை சொல்லிக் கொண்டவுடன், அவர் ‘கடவுள் அவதாரமா?’ என்று கேள்வி கேட்கிறார்கள் பாருங்கள், அந்தக் கேள்வி கேட்டாலே, பெரியார் வெற்றி பெற்றார்! ‘விடுதலை’ வெற்றி பெற்றது!
சுயமரியாதை, எதை எதை கேள்வி கேட்க வேண்டும் என்று சொன்னதோ, அந்தக் கேள்விக் கேட்கும் தன்மை வந்துவிட்டது. அந்த பிம்பம் உடைக்கப்பட்டது.
இன்றைக்கு இராமர் கோவில் மூலமாக வாக்கு வங்கியைச் சேர்க்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால், இராமர் கோவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை செய்தியாளர்கள் கணிப்பில் சொல்கிறார்கள்.
ஆகவேதான் நண்பர்களே, ‘விடுதலை’யின் பணி என்பது எங்கோ ஒரு மூலையில் மிகச் சாதார ணமானதாகத் தோன்றும். ஆனால், அதனுடைய விளைவுகள் என்பது மிகப்பெரியதாகும்.
சோனியா காந்தி அம்மையாரின் கடிதம்!
நேற்றுகூட, சோனியா காந்தி அம்மையார் அவர்கள், ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழில் வெளிவருகின்ற கட்டுரைகளையெல்லாம் படித்துவிட்டு, கடிதம் எழுதியுள்ளார்!
அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
அன்புள்ள திரு. கி. வீரமணி அவர்களுக்கு,
என் அன்பு வணக்கம். இந்தக் கடிதம் தங்களைச் சென்றடையும் போது சீரான உடல்நலத்துடன் தாங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தங்களது இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டு வரும் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ (The Modern Rationalist) மாத இதழின் தேர்தல் சிறப்பிதழ் கிடைக்கப்பெற்றேன், நன்றி!
கடந்த பத்து ஆண்டுகளில் ஜனநாயகத்தின் அவல நிலை வேதனைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. இதைப் பற்றிய கட்டுரைகளை, செய்திகளை இந்தச் சிறப்பிதழில் கண்டேன். உன்னிப்பாகப் படித்து உணரும் படியான பல கட்டுரைகளை எழுதியவர்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள். ஆசிரியர் குழுவிற்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகம் குறித்து நாடு தழுவிய அளவில் அனைவரும் விவாதிக்க வேண்டியது தற்போது அவசியம் மட்டுமல்ல – அவசரமும் கூட. கூட்டாட்சித் தத்துவம் குறித்தும் விவாதம் நடைபெறவேண்டும். இந்தியாவின் உண்மைப் பொருள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படவேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் விவாதத்திற்குரிய பிரச்சினைகள் பல உள்ளன. ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழ் அவை சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடட்டும். மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து பிரசுரிக்கட்டும். தன் சீரிய பணியை ஆசிரியர் குழு தொடர்ந்து செய்யும் என்று நம்புகிறேன்.
மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலம் சிறந்து விளங்க தங்களை வாழ்த்துகிறேன்!”
மேற்கண்டவாறு அந்தக் கடிதத்தில் சோனியா அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் நமக்கு நட்டம்தான்; லட்சிய வெற்றியில், நமக்கு மிகப்பெரிய லாபம்!
ஜனநாயகத்திற்குப் பாதுகாப்புத் தேட நம்முடைய இதழ்கள் எல்லாம் மிகவும் தேவைதான். பொருளாதாரத்தில் நமக்கு நட்டம்தான்; ஆனால், லட்சிய வெற்றியில், நமக்கு மிகப்பெரிய லாபமாகும்.
அதற்கெல்லாம் காரணம் விடுதலைத் தேனீக்களாக இருக்கக்கூடிய உங்களுக்கு, ‘விடுதலை’ நாளேட்டுக்கு சந்தாக்களைச் சேர்த்துக் கொடுக்கக்கூடிய உங்களுக்கு எங்களுடைய கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நட்டத்தை தன் சொந்தப் பணத்தைக் கொடுத்து சரி செய்வார் தந்தை பெரியார்!
நட்டத்தில்தான் நம்முடைய இதழ்கள் நடக்கின்றன. நட்டத்தோடு எப்படி தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று கேட்டால், அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய பொருளை வைத்து, ஓர் அறக்கட்டளை அமைத்தார். ஒவ்வொரு முறையும் வருகின்ற நட்டத்தை, தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய பணத்தை – தன்னுடைய அறக்கட்டளைப் பணத்தை எடுத்துக் கொடுப்பார்.
இதனை அழிப்பதற்காக எத்தனையோ முயற்சிகள் நடந்தன; அவையெல்லாம் தோல்வியுற்றன; தோற்கடிக்கப்பட்டன. ஆகவே, அவற்றையெல்லாம் தாண்டி, இந்தக் கட்டத்திற்கு வந்து, உங்களுடைய ஒத்துழைப்பினால், சிறப்பாக இருக்கிறது.
இப்பொழுது வெளிவருகின்ற ‘விடுதலை’யைப் படிக்கின்ற வாய்ப்புதான் நமக்கெல்லாம் கிடைக்கிறது; அதற்கு முன் வெளிவந்த ‘விடுதலை’யையும் நாம் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.
நாம் என்றென்றைக்கும் போராடுவதற்கு
இது ஓர் அறிவாயுதம்!
இங்கே வெளியிடப்பட்ட விடுதலைக் களஞ்சியத் தொகுப்புகளை நீங்கள் எல்லாம் வாங்கியிருக்கிறீர்கள். இதுவரை மூன்று தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அதில் இருப்பது ஏதோ பழைய செய்திகள் என்ற நீங்கள் தள்ளிவிட முடியாது. இது ஒரு பெரிய அறிவாயுதம். நாம் இன்றைக்குப் போராடுவதற்கும், நாளைக்கும் போராடு வதற்கும் ஒரு வரலாற்றுக் களஞ்சியத்திலிருந்து ஒரு பழைய ஆயுதத்தை எடுத்து, புதிதாக மெருகூட்டிப் பயன்படக் கூடிய அளவிற்குக் கொடுத்திருக்கின்றோம்.
அன்றைக்கு நடந்ததுதானே, பழைய புராணத்தைப் படிப்பதுபோன்றோ, பழைய நிகழ்வைப் படிப்பது போன்றோ தயவு செய்து நீங்கள் நினைக்கக் கூடாது.
இங்கே வெளியிடப்பட்ட விடுதலைக் களஞ்சியம் இரண்டாவது தொகுதியில் ஒரு கட்டுரை வெளி யிடப்பட்டு இருக்கிறது.
‘‘திரு.சவுந்திரபாண்டியன் அவர்களுடைய தியாகம்!’’
‘‘திரு.சவுந்திரபாண்டியன் அவர்களுடைய தியாகம்” என்கிற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டு இருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி, இப்பொழுது நாம் நூற்றாண்டு நிறைவு விழாவினை நடத்தவிருக்கின்றோம். அன்றைக்கு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு செங்கற் பட்டில் 1929 ஆம் ஆண்டு நடைபெற்றது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட்சிகரமான தீர்மானங்களையெல்லாம் விளக்கி, கலைஞர் நூற்றாண்டு விழாவில், கலைஞரைப் பாராட்டும்பொழுதுகூட, பெண்களுக்குச் சொத்துரிமை, ஜாதி ஒழிப்பு, சமத்துவபுரம் இவற்றையெல்லாம்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம்.
பெயர்களுக்குப் பின் இருக்கின்ற
ஜாதிப் பட்டங்களை நீக்க தீர்மானம்!
அந்த சுயமரியாதை இயக்கத்தில், அந்தக் காலகட்டத் தில் ஜாதி ஒழிப்பிற்காக திட்டம் போட்டு, பெயர்களுக்குப் பின் இருக்கின்ற ஜாதிப் பட்டங்களை நீக்குவது என்று தீர்மானம் போட்டனர்.
அதற்குமுன்பு வரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று சொன்னால்தான் மரியாதை. சவுந்திரபாண்டியன் நாடார் என்று சொன்னால்தான் மரியாதை. ராமச்சந்திரன் சேர்வை என்று சொன்னால்தான் மரியாதை என்று இருந்தது.
அதற்குப் பிறகுதான் பெயருக்குப் பின்னால் இருக் கின்ற ஜாதிப் பட்டங்களைத் துடைத்தெறிந்தனர்.
டாக்டர் டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியன் அவர்கள், திண்டுக்கல் பக்கத்தில் இருக்கக்கூடிய பட்டிவீரன்பட்டி யில், அந்தக் காலத்திலேயே ஆங்கில அறிவு கொண்ட பெரிய வியாபாரியாவார். இவர், தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டவர்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய சிறப்பு-
தந்தை பெரியாருடைய தன்னடக்கம்!
சுயமரியாதை இயக்கத்தினுடைய சிறப்பும், தந்தை பெரியாருடைய தன்னடக்கத்தையும் பாருங்கள்; அவர்களுக்குக் கொள்கைதான் முக்கியமே தவிர, தங்களுக்குத் தனிப்பட்ட புகழோ, பெருமையோ கிடையாது. இதைத் தலைவர்கள், கொள்கையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்; பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு அடையாளமாக – சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்பொழுது, தன்னைத் தலைவராக ஆக்கிக் கொள்ளாமல், அச்சம் அகற்றிய அண்ணல் என்று அழைக்கக்கூடிய டபுள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாரைத்தான் தலைவராக நியமித்தார். தந்தை பெரியார் அவர்கள் துணைத் தலைவராக இருந்தார்.
பேருந்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றாமல் போனால், அந்தப் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது என்று உத்தர விட ஜில்லா போர்டுக்கு அந்த அதிகாரம் இருந்தது.
ஜாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்தினார்கள். பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டத்தை நீக்கினார்கள்.
காவிகள், சில கூலிகளைப் பிடித்து,
எழுத வைத்து கேட்கிறார்கள்!
‘தீண்டத்தகாதவர்’ என்று சொல்லி, தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்களை பேருந்தில் ஏறக்கூடாது இருந்த முறையை மாற்றியது நீதிக்கட்சி.
திராவிடர் இயக்கம் என்ன செய்தது? என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள். அதுவும் காவிகள், சில கூலி களைப் பிடித்து, எழுத வைத்து கேட்கிறார்கள்.
நீதிக்கட்சி என்பது முதலியார் கட்சி – முன்னேறிய வர்களுக்கான கட்சி அது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு, இதுபோன்ற களஞ்சியங்கள்தான் ஆதாரப்பூர்வமான சான்றாவணங்களாகும்.
இதில், பழைய வரலாற்றைத் தெரிந்துகொள்வதோடு, இன்றைய பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கக்கூடிய அளவிற்கு, அன்றைக்கே வழிகாட்டிகளாக இருந்திருக் கிறார்கள்.
காரணம், இந்தக் கொள்கை என்பது நேர்மையான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள், அப்படி அந்த இயக்கத்தை அமைத்திருக் கிறார்கள்.
சொல் ஒன்று, செயல் ஒன்று என்று இல்லை என்ப தற்கு அடையாளம் – இங்கே நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லுகிறேன்.
பெண்களுக்காக குங்கும நிறப் பெட்டி!
இன்றைய இளைஞர்களுக்குப் பழைய தேர்தல் முறையைப்பற்றி தெரியாது. இப்பொழுது உள்ளதுபோன்று பட்டனை அழுத்தினால் வாக்குப் பதிவாகிறது அல்லவா, அதுபோன்ற அன்றைக்குக் கிடையாது.
காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் பெட்டி
சுவஸ்திக்குக்குப் பச்சைப் பெட்டி
நீதிக்கட்சிக்கு சிவப்புப் ெபட்டி
அலமேலு மங்கை தாயாரம்மாள்பற்றி இங்கே சொன்னாரே நம்முடைய ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள், அந்த அம்மையார் தேர்தலில் நிற்கும்பொழுது, பெண்களுக்காக குங்கும நிறப் பெட்டி.
பொதுத் தொகுதிக்கும், ரிசர்வ் தொகுதிக்கும் சேர்த்து தான் தேர்தல் நடைபெறும் 1952 ஆம் ஆண்டுவரையில்.
ஒவ்வொரு கட்சிக்கும் இரண்டு, இரண்டு வேட்பாளர்கள் இருப்பார்கள். இரண்டு வாக்குச் சீட்டுகளை வாக்காளர்களுக்குக் கொடுப்பார்கள்.
வட்டப்பாறை வெங்கட்ராம அய்யர்!
பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் போன்ற பகுதி களில் தேர்தலில் நிற்கும்பொழுது, பழனி தொகுதியின் சார்பாக, வட்டப்பாறை வெங்கட்ராம அய்யர் என்பவர் நின்றார். இவர்மீது கொலை வழக்கு இருந்தது. ராஜகோபாலாச்சாரியார் ஆட்சிக்கு வந்ததும்தான், அந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.
வட்டப்பாறை வெங்கட்ராம அய்யர் என்பவரும், பால கிருஷ்ணன் என்ற ஒரு நண்பரும் – இவர் ஷெட்யூல்டு காஸ்ட் என்பதால், ரிசர்வ் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டார்.
தனி வேட்பாளர் எம்.சிவராஜ்
அதேநேரத்தில், நீதிக்கட்சியின் சார்பாக, சுயமரியாதை உணர்வு படைத்த, சுயமரியாதை இயக்கத் தலைவராக இருந்த டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியன் பொது வேட்பாளர்; தனி வேட்பாளர் எம்.சிவராஜ் அவர்கள்.
அன்றைக்குப் பார்ப்பனர்கள் மிகத் தந்திரமாக என்ன செய்தார்கள் என்றால், இரண்டு வாக்குச் சீட்டுகளை, ஒரே பெட்டியில் போட்டார்கள்.
டபிள்யு.பி.ஏ.சவுந்தரபாண்டியனுக்குச் செல்வாக்கு அதிகம். அவர்தான் வெற்றி பெறவேண்டும்; தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிவராஜ் தோல்வி அடையவேண்டும் என்று பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தனர்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின்
ஒப்பற்ற தலைவராக விளங்கினார்!
ஆனால், இதை அறிந்துகொண்ட டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் என்ன செய்தார் என்றால், ‘‘நான் தேர்தல் போட்டியிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். இரண்டு ஓட்டுகளையும் சிவராஜூக்கே போட்டால், சிவராஜியினுடைய வெற்றி உறுதியாகும். ஆகவே, நான் அவருக்காக விட்டுக் கொடுக்கிறேன்” என்று சொன்னார்.
அந்தப் பெருந்தகையாளர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார். அம்பேத்கர் அவர்கள், அவரைத்தான், ஷெட்யூல்டு காஸ்ட் சம்மேளனத்திற்குத் தலைவராக நியமித்தார், அகில இந்திய அளவில்.
ஆகவேதான், யாருக்காக விட்டுக் கொடுத்தார்கள்; சிவராஜூக்காக விட்டுக் கொடுத்தார்கள்.
திராவிடர் கழகம் யாருக்காகப் பாடுபட்டது?
ஒடுக்கப்பட்டோருக்கு அவர்கள் பாடுபடவில்லையா?
விடுதலை களஞ்சியத்தில்
பதிவாகியிருக்கிறது
தேர்தலில் வேட்பாளராக நிற்கக்கூடியவர்கள், வெற்றி உறுதி என்று தெரிந்தும், அந்தத் தேர்தலில் நிற்காமல், வாபஸ் வாங்கி, சிவராஜ் அவர்களே வெற்றி பெறவேண்டும் என்று சொல்லி, அவரே பெருவெற்றி பெற்றார்; காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
இந்தச் செய்திகள் எல்லாம் இப்பொழுது யாருக்கும் தெரியாது. இந்தத் தகவல்கள் எதில் இருக்கிறது? விடுதலை களஞ்சியத்தில் பதிவாகியிருக்கிறது.
இது எவ்வளவு பெரிய பயனுள்ள செய்தி.
இன்றைக்குச் சில கூலிகளைப் பிடித்துக் கேள்வி கேட்கிறார்கள்; நீதிக்கட்சி என்ன செய்தது? திராவிடர் இயக்கம் என்ன செய்தது? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்கள் எதுவுமே செய்யவில்லை. செய்ததாக சும்மா சொல்கிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.
நீதிபதி வரதராசன் அவர்களை நியமித்தது, நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள்தான்!
உயர்நீதிமன்ற முதல் நீதிபதி வருவதற்குக் காரணம், தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியில், நீதிபதி வரதராசன் அவர்களை நியமித்தது, நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுதுதான். அவரே, பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
விடுதலைக் களஞ்சியம் என்பது, ஓர் அறிவுப் புதையல் – வரலாற்றுப் பெட்டகம்!
ஆகவேதான், விடுதலைக் களஞ்சியம் என்பது, ஒரு புதையல் – அறிவுப் புதையல் – வரலாற்றுப் பெட்டகமாகும். அந்தக் காலத்தில், காலப்பெட்டகத்தைப் புதைத்து வைத்திருப்பார்கள். அதுபோன்று இன்றைக்கு கருத்துக் காலப் பெட்டமாக இந்தப் பெட்டகம் அமைந்திருக்கிறது.
இன்னொரு செய்தியை சொல்லி, என்னுரையை முடிக்கின்றேன்.
‘‘தமிழர்களின் மானம் காக்கவேண்டாமா?’’
திருவத்திபுரம், செய்யாறு பகுதிகளில் உள்ள தோழர்கள் – ‘‘தமிழர்களின் மானம் காக்கவேண்டாமா?” என்ற தலைப்பில் ‘விடுதலை’யில் செய்தி வந்திருக்கிறது.
ஒரு சத்திரம் கட்டியிருக்கிறார்கள். அதற்குப் பெயர் ‘‘கார்னேஷன் சத்திரம்.” அந்த சத்திரத்தை இரண்டு பக்கமாக பிரித்து, ஒன்று ‘பிராமணர்’களுக்கு; இன்னொன்று ‘சூத்திராள்’ தங்குவதற்கு என்று பெயர்ப் பலகை வைத்திருக்கின்ற செய்தியை ‘‘தமிழர்களின் மானம் காக்கவேண்டாமா?’’ என்ற தலைப்பில், இதைப் பொறுத்துக் கொண்டிருக்கலாமா? உடனடியாக அதனை மாற்றுவதற்குப் போராடவேண்டாமா? என்று எழுதி, அதற்காகப் போராட வைத்து, மாற்றிய இயக்கம், மாற்றிய ஏடு எதுவென்றால், ‘விடுதலை’ நாளேடுதான், 1937 ஆம் ஆண்டில்.
அதுபோன்று, பெண்கள் – விதவைகள், மறுமணம், ஜாதி மறுப்புத் திருமணத்தைப்பற்றியெல்லாம் பேசும்பொழுது, எந்தக் காலத்தில் எழுதியிருக்கிறார்கள்?அப்பொழுது என்னென்ன நிகழ்வுகள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன? என்ற செய்திகளையெல்லாம் பார்க்கும்பொழுது, நம்முடைய பேச்சாளர்கள் முதற்கொண்டு, இதைப் பாட புத்தகமாகக் கருதவேண்டும்.
என்னைப் பொருத்தவரையில், பழைய ‘விடுதலை’யை ஒவ்வொரு நாளும் படிக்கவேண்டும் என்று நினைப்பேன். ஆனால், அதற்குரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், இங்கே வெளியிடப்பட்ட விடுதலைக் களஞ்சியம் தொகுப்புகள்மூலமாக நல்ல அளவிற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெரியாருடைய வாழ்நாள் மாணவன்!
எனவே, ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராக மட்டும் நான் இல்லை; இதனைத் தொகுப்பதின்மூலமாக மாணவனாகவும் மாறியிருக்கிறேன். பெரியாருடைய வாழ்நாள் மாணவன் நான். அந்த வாய்ப்பு இன்றைக்கு எனக்குக் கிடைத்திருக்கிறது.
‘விடுதலை’யால் தாழ்ந்தவர் எவரும் இல்லை!
‘‘எனவே, யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ‘விடுதலை’ இன்பம் இருக்கிறதே, அது மிக முக்கியமானது.
எனவே, ‘விடுதலை’யால் தாழ்ந்தவர் எவரும் இல்லை!
‘விடுதலை’யால் வாழ்ந்தவர் உண்டு.
எனவே, ‘விடுதலை’ வாழ்ந்தால் யாரே தாழ்வர்?
‘விடுதலை’ வீழ்ந்தால், யாரே வாழ்வர்?
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment