வீழ்ச்சியைத் தடுத்து, சூழ்ச்சியைப் புரிந்து எச்சரிக்கையாக வாழ்ந்தால், வெற்றி நமதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

வீழ்ச்சியைத் தடுத்து, சூழ்ச்சியைப் புரிந்து எச்சரிக்கையாக வாழ்ந்தால், வெற்றி நமதே!

featured image

➡ தமிழ்நாடு மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய கலங்கரை வெளிச்சமாக – ஜனநாயகப் பாதுகாப்பு அரணாக இருக்கும்!
➡ வீழ்ச்சிக்கும் – சூழ்ச்சிக்குமிடையில் ஒரு போர் நடந்துகொண்டிருக்கின்றது; எச்சரிக்கையாகவும், விழிப்போடும் இருக்கவேண்டும்!

வீழ்ச்சியைத் தடுத்து, சூழ்ச்சியைப் புரிந்து
எச்சரிக்கையாக வாழ்ந்தால், வெற்றி நமதே!

மேலும் வெற்றிக்கு நம்முடைய பயணங்கள் தொடரவேண்டும் – பயணங்கள் முடிவதில்லை – ஜனநாயகம் தோற்பதில்லை!

சென்னை சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 

சென்னை, ஜூன் 14 கொள்கை அடிப்படையில் பிரச்சினைகளை அணுகுகிறபொழுது வெற்றி வரும். அதற்குத் தமிழ்நாடு மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய கலங்கரை வெளிச்சமாக – ஜனநாயகப் பாதுகாப்பு அரணாக இருக்கும். வீழ்ச்சிக்கும் – சூழ்ச்சிக்குமிடையில் ஒரு போர் நடந்துகொண்டிருக்கின்றது. எச்சரிக்கையாகவும், விழிப்போடும் இருக்கவேண்டும். வீழ்ச்சியைத் தடுத்து, சூழ்ச்சியைப் புரிந்து எச்சரிக்கையாக வாழ்ந்தால், வெற்றி நமதே! மேலும் வெற்றிக்கு நம்முடைய பயணங்கள் தொடரவேண்டும் – பயணங்கள் முடிவதில்லை! ஜனநாயகம் தோற்பதில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்’’ சிறப்புக்கூட்டம்!
கடந்த 11.6.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நீண்ட நாள்களுக்கு முன்பே தந்தை பெரியார் சொன்னார்!

நீண்ட நாள்களுக்கு முன்பே தந்தை பெரியார்தான் சொன்னார், ‘‘ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நிலையான ஆட்சி ஒருபக்கத்தில் இருந்தாலும், அதைவிட நீதியான ஆட்சி வரவேண்டும்‘’ என்று சொன்னார்.

அந்த நீதியான ஆட்சி இந்த நாட்டில் நடைபெற வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியது.

நூற்றாண்டு நிறைவு விழா முடிந்து 101 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்தபொழுது, சில பைத்தியக்காரர்கள் சொன்னார்கள், ‘‘தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது” என்று. அன்று இதே மேடையில்தான் திராவிடர் கழகம் சொன்னது, ‘‘தமிழ்நாட்டைப்பற்றி புரியாதவர்கள் நீங்கள்; நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்; ஒருபோதும் தமிழ்நாடு வெற்றிடமாகாது; இது மற்றவர்களுக்குக் கற்றிடமாகும்” என்று.

இன்றைக்குத் தமிழ்நாட்டிற்கு வந்துதான் எல்லோரும் கற்றுக்கொண்டு போகிறார்கள்.

தமிழ்நாடு – புதுவையில் 40-க்கு 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி – இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது!
மக்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்த தின் காரணமாக, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளுக்காக – நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில்,
தமிழ்நாடு மற்றும் புதுவையும் சேர்த்து 40-க்கு 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி – இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத்தான் தனிப் பெருமை. கூட்டணிக் கட்சித் தோழர்களுக்குப் பெருமை. உழைத்தவர்களுக்குப் பெருமை.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது வாக்களித்த பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடவில்லை
தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி என்றார்கள்; போதைப் பொருள்கள் தலைவிரித்தாடுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அந்தப் பொய்ப் பிரச்சாரம் எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை.

இன்னுங்கேட்டால், தேர்தலில் தோற்றுப் போனவர்க ளையே ஒன்றிய அமைச்சர்களாக ஆக்கியிருக்கிறார்கள்.

ஜனநாயகம், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு வந்திருக்கிறது என்று நான் ஏற்கெனவே உதாரணம் சொன்னேன் பாருங்கள், அதை சாதாரணமாக நினைக்காதீர்கள்.

தேர்தலில் தோற்றவர்களுக்கு
ஒன்றிய அமைச்சர் பதவி!

உதாரணமாக, அவர்களுடைய அகராதியில் வெற்றி என்றால் தோல்வி; தோல்வி என்றால் வெற்றி என்பதுதான்.

தேர்தலில் தோற்றுப் போனவர்களை அழைத்து, அமைச்சர் பதவியைக் கொடுப்பார் மோடி. தமிழ்நாட்டிற்கு நாங்கள் அமைச்சர் பதவியைக் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லி எல்.முருகனைக் காட்டுகிறார்கள்.

இளைஞர்கள் ‘‘வேலை கொடு, வேலை கொடு” என்று கேட்டால், அவர் ‘வேல்’ கொடுக்கிறார்.

நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் அவர்கள், தேர்தல் முடிவு வருவதற்கு முதல் நாள்கூட, ‘‘நாங்கள்தான் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவோம்!” என்று சொன்னார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் என்ன சொல்லியிருக்கவேண்டும்? ‘‘நான் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டேன்; அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன். வெற்றி பெற்றுதான் அமைச்சர் பதவிக்கு வருவேன்” என்று சொல்லவேண்டும் அல்லவா!

ஒன்றிய அமைச்சர்களில் பலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா?
எல்.முருகன் அவர்களுக்கு கூடுதல் தகுதி என்னவென்றால், சட்டமன்றத் தேர்தலிலும் தோற்றார்; நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்றார். ஆனால், ஒன்றிய அமைச்சரானார்.

எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒருவர், எம்.பி., யாகவேண்டும் என்று நினைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் நின்றார். தேர்தலில் தோற்றுப் போன பிறகு, அந்தப் பதவியில் நீடிக்கலாமா?

அதேபோன்று பா.ஜ.க.வில் ஒன்றிய அமைச்சர்களாக ஆகியிருப்பவர்கள் எல்லோரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா?

எனவே, ஜனநாயகம் இன்னும் முழுமையாக மருத்துவமனையிலிருந்து வெளியே வரவில்லை. சில கோளாறுகள் இருக்கின்றன. அதையெல்லாம் கண்காணிக்கவேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது.

இந்தியா கூட்டணியினர் மேலும் பலமாக அவர்கள் தங்களுடைய பணிகளைச் செய்கிறார்கள்.

உச்ச, உயர்நீதிமன்றங்கள் கேள்வி!

திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கை யைப்பற்றி இங்கே கவிஞர் அவர்களும், மற்ற தோழர்களும் சொன்னார்கள். அத்தேர்தல் அறிக்கையில், சமூகநீதி, ஜாதிவாரிக் கணக்கெடுப்புபற்றி வற்புறுத்தப்பட்டு உள்ளது. வழக்கு என்று வரும்பொழுது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘‘ஜாதி வாரியாக எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் கணக்கெடுக்கப்பட்டு இருக்கின்றதா?” என்று கேட்கிறார்கள்.

இன்னொரு விசித்திரமான சூழல் நம்முடைய நாட்டில். ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறவர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஜாதியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கின்றவர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்கிறார்கள்.

காரணம் என்னவென்றால், மக்கள் படித்துவிடக் கூடாது; மக்களுக்கு உத்தியோகம் சமூகநீதிப்படி கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல்கிறார்களே தவிர, வேறு கிடையாது.

சமூகநீதி என்பது ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அடிப்படை!
ஆகவே, சமூகநீதி என்பது ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அடிப்படையாகும். ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்காக சட்டமன்றத்திலேயே தீர்மானம் போட்டு, அதற்காக எதிர்க்கட்சியாக இருக்கின்ற பி.ஜே.பி.யையும் அரவணைத்துக்கொண்டு, எல்லோரையும் சேர்த்து, பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தவர்தான் இன்றைக்கு என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கக்கூடிய பீகார் முதலமைச்சரான நிதிஷ்குமார். இதை அவர் இல்லை என்று மறுக்க முடியாது.

இப்பொழுது ஜாதிவாரிக் கணக்கெடுப்பைப்பற்றி உங்கள் கருத்து என்ன? என்று அவரிடம் கேட்டால், என்ன சொல்வார்?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று தி.மு.க. சொல்லியிருக்கிறது; இந்தியா கூட்டணியினர் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொல்வார்களா?

ஆகவேதான், இதுபோன்ற ஒவ்வொரு பிரச்சி னைகளும் வரக்கூடிய சூழல்கள் இருக்கின்றன.

மோடியினுடைய சுபாவத்திற்கு கூட்டணி கட்சியினருடன் ஒத்துப் போவாரா?
பல கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், ‘தினமலர்’ நாளிதழில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால், ‘‘வாஜ்பேயினுடைய அணுகுமுறை போல இருந்தால்தான் இந்தக் கூட்டணி நீடிக்கும். மோடியினுடைய சுபா வத்திற்கு அவர் கூட்டணி கட்சியினருடன் ஒத்துப் போவாரா?” என்று எழுதியிருக்கிறார்கள்.

பதவிக்காக மோடி அவர்கள் எதையும் செய்வார். ஏனென்றால், இராமனைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் வேறொரு கடவுளை கையிலெடுத்திருக்கிறார் என்றால், யாரையும் அவர் கைவிடுவார். ஆர்.எஸ்.எஸ்.சையே அவர் கைவிட்டிருக்கிறார். அவர்களுக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன.

இந்த வெற்றியிலிருந்து நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். இரண்டு மூன்று வித்தைகள் வரும்.

கட்சி உடைப்பு என்பது அவர்களுக்குச் சாதாரணம்!
வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கு வது. ஆயாராம் – காயாரம் பேரங்கள் நடக்கும். அதுபோன்று கட்சி உடைப்பு என்பது அவர்களுக்குச் சாதாரணமானதாகும்.

இன்றைக்கு சபாநாயகர் பதவி எங்களுக்கு வேண்டும்; எங்களுக்கு வேண்டும் என்று பா.ஜ.க. கூட்டணியில் ஏன் கேட்கிறார்கள் என்றால், சபாநாயகர் சொல்வதுதான் மிகவும் முக்கியம் என்பதினால்தான்.

ஜனநாயகத்திற்கு, ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கிடவில்லை!
எனவேதான், ஜனநாயகத்திற்கு ஆபத்து என்பது இருக்கிறதே, அது முழுமையாக நீங்கிவிடவில்லை. எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

எப்பொழுதும், eternal vigilance is the price forever freedom – நம்முடைய சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டுமானால், எப்பொழுதும், எந்நேரமும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

நோயால் பாதிக்கப்பட்டவர் எந்த நேரமும் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும்; அதேபோல, நண்பர்களே! கவனச்சிதறல்கள் இல்லாமல் இருக்கவேண்டும்.
தேர்தல்தான் முடிந்து போய்விட்டதே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. தேர்தலில் வெற்றி – தோல்வி என்பது ஒரு பக்கம். கொள்கை ரீதியான ஆபத்துகள் இன்றைக்கு நீங்கி இருக்கின்றன என்பது மகிழ்ச்சியானதுதான். ஆனால், முழுமையாக நீங்கிவிட்டதா? என்ற கேள்விக்கு, முழுமையான பதில் கிடையாது. அது செயல்முறையில் இருக்கவேண்டும்.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஜனநாயகப் பாதுகாவலர்களாக மாறவேண்டும்!
எனவேதான், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஜனநாயகப் பாதுகாவலர்களாக மாறவேண்டும். அந்தப் பணியை முன்னின்று செய்வதற்குத்தான் இந்தியா கூட்டணி இருக்கிறது. அதில், தமிழ்நாடு, நம்முடைய முதலமைச்சரின் இமாலய வெற்றியின் காரணமாக, மற்றவர்களுக்கெல்லாம், ‘‘நாம் நினைத்தால் செய்துகாட்ட முடியும்” என்று நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. அரசியலில் எதிர்க்கட்சிகள் அமைத்த கூட்டணி என்பது வெறும் பதவிக் கூட்டணி. வேறு சில கூட்டணிகளில், எங்கள் கட்சிக்கு இத்தனை இடங்கள் கொடுக்கவில்லை என்றால், வேறு கூட்டணிக்குச் செல்வேன் என்கின்ற நிலை இருக்கும். ஆனால், தி.மு.க. கூட்டணி – இந்தியா கூட்டணியில் அதுபோன்ற நிலை இல்லை.

தமிழ்நாடு, ஜனநாயகப் பாதுகாப்பு அரணாக இருக்கும்!
ஆகவேதான், கொள்கை அடிப்படையில் பிரச்சி னைகளை அணுகுகிறபொழுது வெற்றி வரும். அதற்குத் தமிழ்நாடு மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய கலங்கரை வெளிச்சமாக – ஜனநாயகப் பாதுகாப்பு அரணாக இருக்கும். அதை நாம் தொடர்ந்து பாதுகாப்போம்.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் அணுகுமுறை எப்படிப் போகிறது என்பதைப் பார்க்கின்ற நேரத்தில், எந்நேரமும் தயாராக இருப்போம். எந்த விலைக் கொடுத்தும் ஜனநாய கத்தைக் காப்பாற்றுவோம் – அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவோம் – சமதர்மத்தைக் காப்பாற்றுவோம் – சமூகநீதியைக் காப்பாற்றுவோம்!

‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான் சமூகநீதி. அதில் சிறுபான்மை சமுதாயத்தினரைக் காப்பாற்றுவோம்.

ஒரு முஸ்லிம்கூட இல்லாமல், ஒன்றிய அமைச்சரவை அமைந்திருக்கின்றது என்றால், இது என்ன ஜனநாயகம்?

வீழ்ச்சியைத் தடுத்து, சூழ்ச்சியைப் புரிந்து எச்சரிக்கையாக இருப்போம்!

முஸ்லிம் சமுதாய மக்களின் வாக்கு வங்கியைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கக்கூடியவர்கள் – இன்றைக்குத் துணிந்து சிறுபான்மையினருக்கு எதிராக சிலவற்றைச் செய்கிறார்கள் என்றால், ஒரு பக்கத்தில் வீழ்ச்சி- இன்னொரு பக்கம் சூழ்ச்சி.

வீழ்ச்சிக்கும் – சூழ்ச்சிக்குமிடையில் ஒரு போர் நடந்து கொண்டிருக்கின்றது.

எனவேதான், எச்சரிக்கையாகவும், விழிப்போடும் இருக்கவேண்டும்.

வீழ்ச்சியைத் தடுத்து, சூழ்ச்சியைப் புரிந்து எச்சரிக்கை யாக வாழ்ந்தால், வெற்றி நமதே!

மேலும் வெற்றிக்கு நம்முடைய பயணங்கள் தொடரவேண்டும் – பயணங்கள் முடிவதில்லை!

ஜனநாயகம் தோற்பதில்லை!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment