மூன்றாம் பாலினத்தவரை சிறப்புப் பிரிவினராகக் கருத வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 16, 2024

மூன்றாம் பாலினத்தவரை சிறப்புப் பிரிவினராகக் கருத வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை, ஜூன் 16- மூன்றாம் பாலினத்தவர்களை சமூக,கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் எனக்கருதி கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இட ஒதுக்கீடுகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2014-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவரை சிறப்புப் பிரிவினராகக் கருதி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்திய குரூப் -2 தேர்வில் கலந்துகொண்ட மூன்றாம் பாலினத்தவரான அனுசிறீ, 121.5 கட் – ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தார். இந்நிலையில், அவரை சிறப்புப் பிரிவில் சேர்க்காமல், அவர் சார்ந்த சமூகத்தின் பெண்கள் பிரிவுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 222 எடுக்கவில்லை என அவருக்கு பணி வழங்க மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுசிறீ வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கோரி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில்,” நாங்கள் அரசுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யும் குறிப்பிட்ட அதிகாரங்கள் கொண்ட முகமை மட்டுமே. மற்றபடி யாரை யும் குறிப்பிட்ட பிரிவுக்குள் ஒரு வரை சேர்க்கவோ விலக்கவோ அர சுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

திருநங்கைகளை சிறப்புப் பிரிவின் கீழ் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாக எந்தவித அரசு வழிகாட்டுதலும் இல்லாத காரணத்தால், சம்பந்தப்பட்ட நபர் அவர் சார்ந்த சமூகத்தின் பெண்கள் பிரிவுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், “மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் எனக்கருதி கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இட ஒதுக்கீட்டு சலுகைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2014ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்த போதும், இது தொடர்பாக ஒன்றிய அரசோ, மாநில அரசோ விதிகளை வகுக்க வில்லை.

மூன்றாம் பாலினத்தவர்க ளுக்கான உரிய இட ஒதுக்கீடு மறுக்கப்படும்போது அவர்கள் சமூகத்தில் உள்ள அசாதாரணமான வாழ்க்கைக்கே தள்ளப்படுவார்கள். எனவே, கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்குப் போதுமான வாய்ப்பை வழங்கி, தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, மூன்றாம் பாலினத்த வர்களை சிறப்புப் பிரிவினராகக் கருத வேண்டும்” என்று உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும், மூன்றாம் பாலினத்த வர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு தொடர்பாக பிரத்யேக விதிகளை வகுக்க வேண்டும். எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை ஆண்கள் அல்லது பெண்கள் பிரிவில் சேர்க்கக்கூடாது எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment