சிவகங்கை, ஜூன் 5- 26-5-2024 அன்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணிவரை சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பாகனேரி அருகே சொக்கநாதபுரம் ” நாச்சியார் கலை ஆலயம் ” அரங்கில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் திருப்புவனம் இராசாங்கம் தலைமை வகித்தார்.சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா .புகழேந்தி ,சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சு. செல்லமுத்து,பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ‘திராவிட முழக்கம்’ மாத இதழ் பொறுப்பாசிரியர் குமரன் தாஸ்,பத்திரிக்கையாளர் வெள்ளஞ்சம்பட்டி இரா. நடராசன், சேது அய்ராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கவிஞர் இராம.இந்திரா ,சித்த மருத்துவர் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ‘பாரதிதாசன் என்றொரு பகுத்தறிவுச் சூரியன்’எனும் தலைப்பில் கவிஞர். இராம,இந்திரா கவிதை வாசித்தார் . “மா ணவர், பெண்களின் அறிவியல் அணுகுமுறை -பாரதிதாசன் காலமும் இன்றும் ” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தை சமூக ஆர்வலர் சொக்கநாதபுரம் இராதா கணேசன், பார்வதி, சிவகாமி மாணிக்கம் ,வளர்மதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
முன்னிலை வகித்துப் பேசிய சிவகங்கை மாவட்ட கழக தலைவர் இரா.புகழேந்தி பேசுகையில் பகுத்தறிவாளர் கழகத்தின் இந்த விழா நகரங்களைத்தாண்டி இது மாதிரி கிராமங்களில் நடப்பது நல்ல முன்னுதாரணம் .இப்படி அடித்தட்டு மக்களிடம் நமது அறிவியல் பகுத்தறிவு கருத்துகளை கொண்டு சேர்ப்பதுதான் தந்தை பெரியாரின் கனவு என்று குறிப்பிட்டார் .நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரவேற்புரை நிகழ்த்திய சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கவிஞர் சொக்கநாதபுரம் இரா. கணேசன், “இப்போது விழா நடக்கிற இடத்திற்கு எதிர் வீட்டில் இருந்து – வாழ்ந்து மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுராமன் அவர்களின் தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியாரின் கருத்துகளை எழுச்சிமிகு உரையாகத் தந்த இடம் இந்த மேடையின் எதிர்புறம் – ஆயிரம் அடி தூரத்தில் .ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தில் தான் அண்ணா வருகைக்காக இரவு முழுக்க காத்திருந்து காலை 5 மணிக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி அண்ணாவின் உரையைக் கேட்டார்கள் .பாரதிதாசனுக்கு விழா எடுக்கிற இந்த இடம் இதனால் வரலாற்று சிறப்புமிக்க இடம் ஆகும் .எனவே இந்த பகுத்தறிவாளர் கழக நிகழ்வு பகுத்தறிவுப் பாதையில் ஒரு நாற்றங்காலாக அமையும்” என்றார்.
திராவிட முழக்கம் மாத இதழ் பொறுப்பாசிரியர் குமரன் தாஸ் பேசும் போது, கவிதையை இலக்கு நோக்கிய எரியீட்டியாக பயன்படுத்தியவர் பாரதிதாசன் என்று குறிப்பிட்டார்.சிறப்பு கருத்துரை வழங்கிய பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் ,முனைவர்.மு.சு கண்மணி, பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலை மேற்கோள்காட்டி நீட்டாண்மைக்காரி என்ற சொல்லாட்சியை பாரதிதாசன் பயன்படுத்திய விதத்தை வியந்து விளக்கினார்.
இராமனுக்கும் சீதைக்கும் உள்ள உறவை யார் வேண்டுமானாலும் சொல்லும் அளவுக்கு உள்ளது. ஆனால் நாயகனை விட நாயகி உயர்ந்த இலட்சியங்களும் அறிவாற்றலும் உள்ள பாரதிதாசனின் சஞ்சீவி பர்வத நாயகன் -நாயகி இவர்கள் பெயர் நம்மில் பலருக்கும் தெரியாமல் உள்ளது .இந்த சமூகம் எதை மறைக்கப் பார்க்கிறது, உயர்த்திப் பிடிக்கிறது என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இது. இந்த நிலையை மாற்றுவதில் நமக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.
இப்பகுதியில் அதிகபட்சமாக பத்தாம் வகுப்பில் 494 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் ரோகன் கண்ணாவுக்கு சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக ரூபாய் 3000 பரிசாக வழங்கப்பட்டது . பெரியார் பற்றாளர் பாகனேரி கனி நன்றி கூறினார்.முடிவில் சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கவிஞர் சொக்கநாதபுரம் இரா.கணேசன் இல்லத்தில் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.உணவு வேளைக்குப் பின்னர் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளை கிராமப்புறங்களில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment