பிற இதழிலிருந்து...நம்புங்கள், இது தினமலர் தலையங்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 10, 2024

பிற இதழிலிருந்து...நம்புங்கள், இது தினமலர் தலையங்கம்!

வாஜ்பாய் பாணிக்கு மாறும் கட்டாயத்தில் பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில், பா.ஜ., 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது, பெரும்பான்மைக்கு. 32 இடங்கள் குறைவாகும். கூட்டணி கட்சிகள் பெற்றுள்ள இடங்களையும் சேர்த்தால், 292 இடங் களை பிடித்துள்ளது. இதனால், தே.ஜ., கூட்டணி யின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு. மீண்டும் பிரதமராக பதவியேற்று உள்ளார்.

ஆயினும், கூட்டணியில் அதிக இடங்களை பிடித்துள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ், குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் கட்சி களைச் சார்ந்தே, மோடி 3.0 அரசு இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி, 234 இடங்களை பிடித்து வலுவான எதிரணியாக உருவெடுத்துள்ளது. உ.பி., மாநிலத்தில் சமாஜவாதி கட்சியுடன் கூட் டணி அமைத்ததால், காங்கிரஸ் எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது உபி.யில் மட்டும், காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணி 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த, 2019 மக்களவை தேர்தலில், இந்த மாநிலத்தில், 69 இடங்களைப் பிடித்த பா.ஜ., இம் முறை, 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள் ளது. இதுவே, பா.ஜ., பெரும்பான்மை பெற முடி யாமல் போனதற்கு முக்கிய காரணம். அதேபோல. மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலும், பா.ஜ., பின்னடைவை சந்தித்துள்ளது.

தற்போதைய தேர்தல் முடிவுகள் வாயிலாக, தேசிய அரசியலில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி அரசு அமைந்துள்ளது. காங் கிரஸ் கட்சியும், 2014க்கு பிறகு, ‘கேபினட் அந்தஸ்தில்’ எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
கடந்த, 26 ஆண்டுகளுக்கு முன், 1998இல் வாஜ்பாய் தலைமையில் உருவான தேசிய ஜனநாயக கூட்டணி தான், முதல் முறையாக பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சியாக அமைந்தது. 1998 முதல் 2004 வரை அவரின் அரசு நீடித்தது. அதன்பின், பா.ஜ., தலைமையில், தற்போது தான் கூட்டணி அரசு அமைகிறது. அதுவும், அரசியலில் பேரம் பேசி காரியம் சாதிப்பதிலும், அணி மாறுவதிலும் கெட்டிக்காரர்களான, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் ஆதரவுடன் அரசு அமைந்துள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது. கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளித்த, அரசியல் சட்டத்தின், 370ஆவது பிரிவை ரத்து செய்வது. நாடு முழுதும் ஒரே சிவில் சட்டத்தை அமல்படுத்துவது ஆகிய மூன்று முக்கிய பிரச்சினைகளில் எந்த முடிவும் எடுக்காமல், அவை ஓரம் கட்டப்பட்டிருந்தன.

ஆனால், 10 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த மோடி, கூட்டணி கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், எந்த முடிவையும் எடுத்ததில்லை. அவரும், அமித் ஷாவும் சேர்ந்து எடுத்த முடிவுகள் தான் அமலுக்கு வந்தன. அதற்கு காரணம், மக்களவையில் பா.ஜ., பெரும்பான்மை பலம் பெற்றிருந்ததே. இந்த பலத்தால் தான்.
ராமர் கோவில் கட்டுமானம், அரசியல் சட்டத்தின. 370ஆவது பிரிவு ரத்து போன்றவற்றின் திடமான முடிவுகளை எடுக்க நேரிட்டது.
ஆனால், இம்முறை, அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் தான், முக்கியமான முடிவுகளை மோடி எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. அதாவது, வாஜ்பாய் பாணியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு மோடி ஆளாகியுள்ளார்.

குறிப்பாக, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம், ஜாதி வாரி கணக்கெடுப்பு, அக்னீவீர் திட்டம் போன்றவற்றில், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதில் மிகவும் மென்மையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.
அத்துடன், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் பலமான எதிரணியாக மக்களவையில் அமர்வதால், ஒவ்வொரு பிரச்சினையிலும், மோடி அரசு கடும் சவால்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் கூட்டணி அரசை மோடி வழிநடத்திச் செல்வது, முள்மேல் அமர்ந்திருக்கும் கதையாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இது ஒருபுறமிருக்க, தற்போதைய அரசியல் சூழ்நிலையால், பா.ஜ., கட்சியிலும், அதன் செயல் பாடுகளிலும் மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளன.

நன்றி: ‘தினமலர்’, 10.6.2024

No comments:

Post a Comment