ஒரு பெண் பெயரை மாற்றிக் கொள்ள கணவன் அனுமதி வேண்டுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

ஒரு பெண் பெயரை மாற்றிக் கொள்ள கணவன் அனுமதி வேண்டுமா?

பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளின் போதெல்லாம் அரணாக சட்டங்கள் கைகொடுத்துக் காப்பாற்றும். ஆனால், அந்தச் சட்டமே பெண்ணுக்கு எதிராக மாற்றப்பட்டால்..? திவ்யா மோடி என்பவர் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தேதி குறிப்பிடாமல் வெளியிட்ட ஓர் அறிவிப்பை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
திருமணமான பெண் தனது குடும்பப் பெயரை (Surname) மாற்ற விரும்பினால் `விவாகரத்து ஆணையின் நகல், கணவரிடம் இருந்து அனுமதிக் கடிதம் ஆகிய இரண்டில் ஏதாவது ஓர் ஆவணம் தேவை’ என்று அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது. இதனால் திருமணத்துக்குப் பிறகு திவ்யா மோடி டோங்யா என மாற்றிக்கொண்ட தனது பெயரை திவ்யா மோடி எனப் பழையபடி மாற்றுவதில் இவருக்கு சிக்கல் வந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், ஒன்றிய அரசின் பதிலை நீதிமன்றம் கேட்டுள்ளது.

பெயர் என்பது தனிமனித அடை யாளம். ஆனால், பெண்களுக்கு மட்டும் திருமணத்துக்குப் பிறகு இந்த அடையாளம் மாறுகிறது. சிலர் விரும்பியோ விரும்பாமலோ கணவரின் பெயரை தங்கள் பெயரோடு சேர்த்துக் கொண்டிருக்கலாம். அந்தத் திருமண உறவே இல்லை என்றானபின் பெண்களை மீண்டும் கணவரிடம் சென்று ‘ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ்’ [NOC] கேட்டு நிற்க வைப்பது எந்த வகையில் நியாயம்?
நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் அரசின் பதிலை ஏன் கேட்கிறது என்று தெரியவில்லை. ஒரு பெயரை அதிகாரப் பூர்வமாக கெசட்டில் மாற்றிக் கொள்ள வழி இருக்கிறது.
அப்படியிருக்கும் பொழுது தன் பெயரை மாற்றிக் கொள்ள முந்தைய கணவனின் அனுமதி தேவை என்பது எந்த ஊர் நியாயம்? இதுவே ஓர் ஆண் தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் விவாகரத்து பெற்ற மனைவியின் அனுமதி தேவை என்று சொல்லுவார்களா?

பொதுவாக பிஜேபி ஆட்சி என்பது மனுதர்மக் கொள்கையைப் பின்பற்றுவதால் – பெண்களுக்கென்று உள்ள உரிமைகள் கேள்விக்குறியாகி விட்டது. பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்பூஷன்சிங் பிஜேபி என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு – சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களின் தொகையின் அடிப்படையில் 50 விழுக்காடு இடங்கள் அளிக்கப்பட வேண்டும். 33 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பதே வெறும் மசோதாவாகத்தானே இருக்கிறது. மயிலே மயிலே என்றால் இறகு போடாது. பெண்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அப்பொழுதுதான் இதற்கொரு விடிவு கிடைக்கும்.

No comments:

Post a Comment