மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பின்னடைவுக்கு விவசாயிகளின் கோபமும் ஒரு காரணம் என்று வேளாண் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான பி.சாய்நாத் கூறினார். கேரள அரசு அதிகாரிகள் சங்கத்தின் (கேஜிஓஏ) மாநில மாநாட்டை 9.6.2024 அன்று அவர் தொடங்கி வைத்து பேசியதாவது:
மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. விவசாயிகள் போராட்டத்தின் மய்யப் பகுதிகளான பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மகாராட்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 60 இடங்களின் முடிவு களின்படி விவசாயிகளின் கோபத்தால் பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீரர்களை அவமதித்ததும், அக்னிவீர் திட்டமும் பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
நீதிக்காக அமைதியாகவும் ஜனநாயக இயக்கமாகவும் உலகில் நடந்த மாபெரும் இயக்கம் விவசாயிகளால் நடத்தப்பட்டது. ஆனால், மோடி அரசு இதை தடியடி மற்றும் தண்ணீர் பீரங்கி மூலம் எதிர்கொண்டது. தனது சொந்த விவசாயிகளுக்கு எதிராக ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 1991இல், நாட்டில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்தி ருந்தவர்களில் (கோடீஸ்வரர்கள்-பில்லியனர்) எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.
இன்று 200 பேர் உள்ளனர். ரஷ்யாவின் பில்லியனர்களில் பாதி பேர் ஒவ்வொரு அய்ந்து ஆண்டுகளுக்கும் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால், இங்கே நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். 2004இல் 32 சதவிகிதம் பேர் தங்களை கோடீஸ்வரர்களாக அறிவித்து நாடாளுமன்றத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்தனர். 2009இல் 53 சதவிகிதமாகவும், 2014இல் 82 சதவிகிதமாகவும், 2019இல் 88 சதவிகிதமாகவும் இருந்தது. இம் முறை 93 சதவிகிதமாகி உள்ளது. 93 சதவிகித பெரும் பணக்காரர்களைக் கொண்ட நாடாளுமன்றம் எப்படி இந்தியாவின் சாதாரண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இவ்வாறு சாய்நாத் பேசினார்.
No comments:
Post a Comment