ஒளிப்படத் துறையில், ஆண் கலைஞர்களுக்கு ஈடாக பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், மலைவாழ் பெண் ஒருவர், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், போட்டோகிராபியின் மீது ஆர்வம் கொண்டு, சொற்ப வருமானம் கிடைத்தாலும் `இதுதான் நான் விரும்பும் தொழில்’ என்று அதை மிகவும் மகிழ்வோடு செய்து வருகிறார்.
‘‘உறவினர்களோடு கூடி சந்தோஷமாக இருக்கும் தருணங்களை நான் ஒளிப்படம் எடுத்து, அவர்களிடம் தருகிறேன். ஒளிப்படம் கொடுத்தவுடன் அவர்களின் முகத்தில் பூரிப்போடு ஒருவித மகிழ்ச்சி தெரியும் பாருங்கள்..! அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை’’ என்கிறார், மலைவாழ் இளம் பெண்ணான கீர்த்தி.
‘‘திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் இருக்கின்ற பூலத்தூர் கிராமத்தில் வசிக்கும் பாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி இணையருக்கு மகளாக பிறந்தேன். பத்தாம் வகுப்பு வரைக்கும் இந்த கிராமத்தில்தான் படித்தேன். +1 மற்றும் +2 பக்கத்து ஊரான வத்தலக்குண்டில் படித்தேன். அதன் பிறகு கோவையில் கல்லூரி. அங்கு படிக்கும் போதுதான் எனக்கு போட்டோகிராபி மேல் ஆர்வம் வந்தது.
கேமரா வாங்கினேன். ஆனால், அதன் பயன்பாடு எனக்கு தெரியவில்லை. எதேச்சையாக, `தமிழ்நாடு கேமரா டெக்னிக் கிளப்’ என்கிற ஒரு குரூப்பை முக நூலில் பார்த்து, இணைத்துக் கொண்டேன்.
பெரும்பாலான கிராமங்களில் பெண்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதை உடைத்து எறிய வேண்டுமென்று நினைத்தேன். அதற்கு என்னுடைய கேமராவை பயன் படுத்தினேன். என் கிராமத்திலேயே நான்தான் முதல் போட்டோகிராபர். அதுவும், ஒரு பெண் என்பது எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்’’ என்று சொன்ன பூரிப்பு, அவரின் முகத்தில் தெரிந்தது.
“ஒரு சில கிராமத்தில், பேருந்து வசதிகூட இருக்காது. இரு சக்கர வாகனம், காரில்தான் போக வேண்டும். இன்னும் சில கிராமத்தில், சாலையே இருக்காது. பாதி தூரம் இரு சக்கர வாகனத்தில் போய்விட்டு, மீதி நடந்துதான் போக வேண்டும். அப்படி உள்ள கிராமங்களில் எங்களின் கேமரா உபகரணங்களை சுமந்து கொண்டு ேபாவது சுலபம் கிடையாது. போகும் போது குடிக்க தண்ணீர்கூட கிடைக்காது.
நான் எடுக்கும் ஒளிப் படங்களை தமிழ்நாடு கேமரா டெக்னிக்கல் கிளப் குழுவில் தரவேற்றம் (அப்லோட்) செய்வது வழக்கம். அவர்கள் சிறந்த ஒளிப்படத்திற்கு விருது தருவார்கள்.
ஒருமுறை, பழங்களை வைத்து ஒளிப்பட உருவாக்கம் செய்தேன் (கிரியேட்டிவ் ஷாட்). அந்த ஒளிப்படத்திற்கு எனக்கு விருது கிடைத்தது. அதுதான் நான் பெற்ற முதல் விருது. பெண்கள் என்றாலே அவர்கள் நினைத்ததைப் போன்று வாழ்க்கை முறைத் தொழிலாக அமைத்துக் கொள்வதில் சற்று கடினம்தான். அதுவும், மலைவாழ் பெண்ணென்றால்..? கீர்த்தி சொன்னதை வைத்து நன்கு புரிந்தது. முயன்று கொண்டேயிருந்தால் வெற்றி நிச்சம் அல்லவா?
No comments:
Post a Comment