அர்ச்சகர்களின் யோக்கியதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

அர்ச்சகர்களின் யோக்கியதை!

featured image

கோயில் பூசாரியால் 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட் டுள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டு சான்றுகள் கொடுத்ததால் அர்ச்சகப் பார்ப்பனர் பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் அர்ச்சகப் பார்ப்பனரான கார்த்திக் முனுசாமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக, சாலிக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கடந்த மே 28 அன்று கார்த்திக் முனுசாமியைக் கைது செய்தனர்.

இந்நிலையில், தனக்குப் பிணை கோரி கார்த்தி்க் முனுசாமி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நடந்தது. அப்போது காவல்துறையினர் தரப்பில் மாநகர அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் ஜி.தேவராஜன், மனுதாரரின் வீட்டுக்கு வந்த முக்கிய பிரமுகருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்ளச் சொல்லி அர்ச்சகப் பார்ப்பனர் கட்டாயப்படுத்தி, புகார் அளித்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். அதற்குப் புகார்தாரர் மறுத்துள்ளார். இதனால் பெரிய அளவில் பணம் கிடைப்பது தடைப்பட்டு விட்டது எனக் கூறி புகார்தாரரான இளம்பெண்ணை சித்திரவதை செய்துள்ளார்.

அர்ச்சகப் பார்ப்பனர் பல முறை பாலியல் ரீதியில் மனுதாரரைச் சித்திரவதை செய்து வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அவர் கருவுற்றபோது கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். மனுதாரரின் கைப்பேசியை புகார்தாரர் ஆராய்ந்தபோது தன்னைப் போல 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் அர்ச்சகப் பார்ப்பனர் கூடிக் குலவி இருந்த ஆபாச காட்சிப் பதிவுகள், படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதன்பிறகே புகார் அளித்துள்ளார். பல பெண்களி்ன் ஆபாசப் படங்களை பல முக்கிய பிரமுகர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். எனவே இந்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்கக்கூடாது.

கோயில் பூசாரியான அவருக்கு வெளிநாடுகள் மற்றும் வட இந்தியாவில் பல மடங்கள் ஆதரவு தருகின்றன. ஆகையால் இவருக்குப் பிணை வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடுவார் என கடுமையாக ஆட் சேபம் தெரிவித்தார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கோயில் பூசாரியான மனுதாரர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் ஒன்றும் அப்பாவி அல்ல, கோயில்களுக்கு மன நிம்மதி தேடிச் செல்லும் இளம்பெண்களை இவர் வேறு மோசமான கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளார். பொதுவாக, பொதுமக்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக கோயிலில் பூஜை, புனஸ்காரங்களை மேற்கொள்ளும் குருக்கள் மற்றும் பூசாரிகள் மீதுதான் அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை இவர் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்.

தனது தீய நோக்கத்துக்கு புகார்தாரரைப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் கோயிலில் தான் செய்து வந்த புனிதமான பணிக்கும், கோயிலுக்கும் மனுதாரர் களங்கம் ஏற்படுத்தியுள்ளார். இவரின் அற்பத்தனமான நடவடிக்கையால் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறுவதால், அவருக்குப் பிணை வழங்க முடியாது’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயிலில் தேவநாதன் என்ற பார்ப்பன அர்ச்சகர் கோயில் கருவறைக்குள்ளேயே கோயிலுக்கு வந்த பெண்களிடம் உடலுறவு கொண்டு, அதைக் கைப்பேசியில் படம் எடுத்து, அதனைக் காட்டி அச்சுறுத்தி மீண்டும் மீண்டும் பெண்களைத் தன் வெறிக்கு பலியாக்கிய செய்தி சிரிப்பாய் சிரித்தது. அதேபோல திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோயிலில் பத்ரிநாத் என்ற பார்ப்பனர் செய்த கேவலமான நடவடிக்கையும் ஊடகங்களில் வெளிவந்து ஊரே நாற்றம் எடுத்தது.

கோயில் கருவறையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகச் சென்று பணியாற்றினால் தீட்டுப்பட்டு விடும், சாமி செத்துப் போய் விடும் என்று உச்சநீதிமன்றப் படிகள் ஏறி, விவாதம் செய்யும் பார்ப்பன அர்ச்சகர்களின் யோக்கியதை எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கடவுள் நம்பிக்கையுள்ள – பக்தி செலுத்துகின்றவர்கள் சிந்திப்பார்களாக!

No comments:

Post a Comment