மும்பை, ஜூன் 5 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர் வெளி நாடு செல்வதற்கான முன் அனுமதி பெறுவதற்கு பிணை நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் மே 29 ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை இயக்கு நரகம் (இ.டி.) வியோமேஷ் ஷாவின் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெகுல் சோக்சி போன்றோரின் நிலைமைக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த வாதத்தை நிராகரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே கூறியதாவது: விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றவர்கள் மில்லியன் டாலர் மோசடியில் ஈடு பட்ட தொழிலதிபர்கள். அவர்கள் நாட்டை விட்டு தப்பியோட அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளின் மெத்தனப் போக்கே மிக முக்கிய காரணம். உரிய நேரத்தில் கைது செய்ய புலனாய்வு அமைப்புகள் தவறியதால்தான் அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர். இதனை அமலாக்கத் துறை நன்கு கவனத்தில் கொள்ளவேண்டும். மாறாக அழைப்பாணைக்குப் பதிலளித்துள்ள வியோமேஷ் ஷா நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்று, வெளிநாடு செல்ல பலமுறை விண்ணப்பித்தார். எனவே ஷாவின் வழக்கை நீரவ் மோடி, மல்லையா, மெகுல் சோக்சி போன்றவர்களின் வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்து சிறையிலும் மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆன்டிகுவாவிலும் உள்ளனர். இங்கிலாந்தில் உள்ள மல்லை யாவின் ரூ.900 கோடி கடன் மோசடி வழக்கை ஒன்றிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது.
No comments:
Post a Comment