குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்

featured image

சென்னை, ஜூன் 12- ‘குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே, தமிழ்நாட்டுக்கு பொற்காலம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் ஜூன் 12ஆம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி ‘குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கல்வி, ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தைப் பருவத்தில், தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்டநேரம் உழைப்பது மிகவும் கொடுமையானதாகும். இது அவர்களது எதிர்காலம், ஆரோக்கியம், உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு ஊறுவிளைவிப்பதாகும்.

நல்ல குடிமக்களாக உருவாக வேண்டிய குழந்தைகள், குழந்தைபருவத்திலேயே தொழிலாளர்களாக மாறுவதால் ஒரு நாடு தனதுசமூக வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், அமைதி, சமூகத்தின் சமச்சீர் தன்மை மற்றும் ஆற்றல்மிக்க மனித வளத்தையும் இழக்க நேரிடுகிறது. பிஞ்சுக் குழந்தைகளை, ‘குழந்தைத் தொழிலாளர் முறை’ என்ற கொடுமையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவம், முறையான கல்வியை அளித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே தமிழ்நாடு அரசின் அடிப்படை நோக்கமாகும்.
பல்வேறு நலத்திட்டங்கள்: பெற்றோருக்கு போதிய வருவாய் இல்லாதது, குடும்பச் சூழல்களால் குழந்தை தொழிலாளர்களாக மாறிய குழந்தைகளை மீட்டு,தரமான கல்வி அளிக்கவும், பெற்றோரின் சுமையைக் குறைக்கவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை மீட்டு, சிறப்புப் பயிற்சி மய்யங்களில் சேர்த்து கல்வி அளித்து குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் நாட்டிலேயே தமிழகம்தான் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

சட்ட அமலாக்கம்: குழந்தைத்தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான மாநில செயல் திட்டம், நிலையான இயக்க நடைமுறைகள் ஆகியவற்றையும் தீவிரமாகச்செயல்படுத்தி, தமிழகத்தை 2025ஆம்ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லா மாநிலமாக மாற்ற தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு கூட்டு முயற்சிகளால் மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கை 2025ஆம்ஆண்டுக்குள் அடைவோம் என்பது உறுதி. எனவே, 14 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என அனைத்துபெற்றோரும், பணியில் அமர்த்தமாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதிபூண்டு, நாட்டை வளமிக்கதாக மாற்றுவோம். குழந்தைத்தொழிலாளர் இல்லாத எதிர்காலம், அதுவே தமிழ்நாட்டுக்கு பொற்காலம். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதி மாற்றம்
ஜூன் 20இல் தொடங்குகிறது

திருநெல்வேலி, ஜுன் 12- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால் பேரவைக் கூட்டத் தொடர் 20ஆம் தேதியே தொடங்குவதாக சட்டமன்றத் தலைவர் மு.அப்பாவு தற்போது அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தலைவர் மு.அப்பாவு நேற்று (11.6.2024) நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேரவை கூட்டுத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி தொடங்கும். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற தாரகை கத்பர்ட் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்கிறார். பேரவை அலுவலகத்தில் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தை பொறுத்தவரை தொழிலாளர்களின் நலன் குறித்து இந்த அரசு நல்ல முடிவை எடுக்கும். தொழிலாளர்களின் ஊதிய விவகாரம் தொடர்பாக திமுக போராட்டத்தில் பங்கேற்றது. ஆனால் தற்போது ஊதியம் பிரச்சினை இல்லை. பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த வனப்பகுதியில் நமது தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே வனத்திற்கும் நல்லது நமக்கும் நல்லது. கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்ததாக தகவல் வந்தது. ஆகையால் தொழிலாளர்கள் அங்கு இருப்பது தான் நமக்கும் நல்லது, இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவாக தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்த முடிவெடுக்க வேண்டும்.

முழுமையாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்துப் பகுதிகளை வனத்துறையிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது. அந்த வனப்பகுதி தமிழ்நாடு அரசின் கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும். தொழிலாளர்கள் அங்கே தொடர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பை வழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாஞ்சோலை விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன். அங்கு தொழிலாளர்களுக்கு குடிநீர் மின்சாரம் இணைப்பை துண்டிக்க முடியாது. அப்படி துண்டித்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்நாடு அரசு சாமானிய மக்களுக்கு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் அதை நிவர்த்தி செய்யும் ஒன்றிய அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்க்காமல் தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்வதற்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் பக்தர்கள் செல்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது” என்றார்.

No comments:

Post a Comment