குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு மருத்துவ உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர் உரிய ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு மருத்துவ உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர் உரிய ஏற்பாடு

featured image

சென்னை, ஜூன் 13– தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், நேற்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவிற்குள்
+91 1800 309 3793
வெளிநாடு
+91 80 6900 9900,
+91 80 6900 9901
-இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முதலமைச்சர் இரங்கல்
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்த ளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கி யிருந்த கட்டடத்தில் நேற்று (12.6.2024) ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment