நரேந்திரர் விவேகானந்தரின் இயற்பெயர். 1934 ஆம் ஆண்டில் பிறந்த எனது மூத்த அண்ணனுக்கு நரேந்திரன் எனப் பெயரிட்டார் எனது தந்தை. அக்காலக்கட்டத்தில் தஞ்சை மண்ணில் பல குடும்பங்கள் நரேந்திரன் பெயரைச் சூட்டினார்கள். தமிழர்கள் காலம்தோறும் முற்போக்குச் சிந்தனை யாளர்களை இனம் , மொழி கடந்து போற்றி வந்துள்ளனர் .
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பூங்குன்றன் கருத்தியலைத் தமிழர்கள் தங்களின் வாழ்வியல் ஆகப் போற்றி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் காட்டிய பெருந்தன்மையை மற்ற மாநிலத்தவர்கள் பின்பற்றினரா என்ற கேள்வி இன்றும் தொடர்கிறது.ஒடிசா மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி உயர் அலுவலராக மக்களுக்குச் சிறந்த முறையில் திட்டங்களை நிறைவேற்றியதற்காக, தமிழரான பாண்டியனை அம்மக்கள் பாராட்டுகின்றனர் .
அவருக்கு மக்களிடம் செல்வாக்குப் பெருகி வருவதைச் சகித்துக் கொள்ளாமல் நரேந்திரர் ஏசுவதும் அமீத் ஷா அலறுவதும் அசாம் பாஜக முதலமைச்சர் ஜூன் நான்காம் நாளுக்குப் பிறகு பாண்டியனை ஒடிசா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வானூர்தியில் அனுப்பி வைப்போம் என்று பேசுவதும் இந்தியா ஒரு நாடாக இருப்பதை பா.ஜ.க தலைமை விரும்பவில்லை என்பதுமே இக்கூற்றுகளில் இருந்து தெரிய வருகிறது.
அறிஞர் அண்ணா நாடாளுமன்ற மேலவையில் 1962ஆம் ஆண்டில் உரையாற்றும் போது, தமிழ் நாட்டின் பெரும் தலைவர்களில் ஒருவர் பெயரைக் கூட புதுடில்லியில் சாலைகளில் காண முடியவில்லை என்று கூறினார்.
காந்தியார், ஜவகர்லால், சுபாஷ் சந்திரர், வல்லபாய் படேல் போன்ற தலைவர்களின் பெயர்களைத் தமிழ்நாட்டில் பூங்காக்களில் சாலைகளில் காணமுடியும் என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்டார்.
விவேகானந்தருக்குச் சென்னையில் சிலை, அவர் பெயரில் கல்லூரி போன்ற பல அடையாளங்களைத் தமிழ்நாட்டில் காணமுடியும். இருப்பினும் படித்த ஜாதி வெறி பிடித்த ஸநாதன விரும்பிகள், விவேகானந்தரைத் தங்களின் நலனுக்காக அன்றும் பயன்படுத்தினர். இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். மயிலையில் இயங்கும் விவேகானந்தர் கல்லூரி மாநில அரசு உதவி பெறும் கல்லூரி. 1986ஆம் ஆண்டில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்ற காரணத்தால் பதவி ஆணையை வழங்கவில்லை. கடவுள் வாழ்த்தில் ஜாதி ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கும் பாடலும் இசைக்கப்பட்டது. இதை ஆசிரியர் சங்கம் எதிர்த்துக் களம் கண்டது. கல்லூரி தொடங்கி 40 ஆண்டு விழாவை முன்னிட்டு அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களை நிர்வாகத்தினர் அழைத்து இருந்தார்கள்.
பேராசிரியர்.கருணானந்தன், எங்களின் சமூக நீதிக் கொள்கையை ஏற்காததால், கல்லூரி விழாவிற்கு அமைச்சர் வரக் கூடாது என்று என்னிடம் ஆசிரியர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்தார். பண்ருட்டியார் ஒரு பெரியாரிஸ்ட் – அவரோடு உள்ள நீண்ட நாள் தொடர்பின் காரணமாக ஆசிரியர் சங்கம் அளித்த கோரிக்கையை அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களிடம் தெரிவித்தேன். ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் விழாவிற்கு வரமாட்டேன் என்று அமைச்சர் தெரிவித்த பிறகு தாழ்த்தப்பட்ட சமூக ஆசிரியரை நியமனம் செய்தார்கள்.
ஸநாதனத்தைக் கற்பிக்கும் பாடலை நீக்கினார்கள். விவேகானந்தர் முற்றும் துறந்த துறவியாக வாழ்ந்தாரா என்பதைப் பற்றிய பல கருத்துக்கள் பல கட்டுரைகளில் நிரம்பிக் கிடக்கின்றன. கொல்கத்தா நகரில் ஸ்காட்டிஷ் தேவாலயக் கல்லூரியில் தான் விவேகானந்தர் தனது பட்டப்படிப்பை முடித்தார். செறிவான ஆங்கில மொழியில் சிறந்த உரையாளராக விளங்கியவர். பல மதக் கோட்பாடுகளைத் தனது உரையில் அழகான முறையில் குறிப்பிட்டதால் அவருக்கு வெளிநாடுகளிலும் வெள்ளைக்காரச் சீடர்கள் இருந்தனர்.
இங்கிலாந்து நாட்டிற்கு விவேகானந்தரை அழைத்துப் போற்றிய எட்வர்ட் ஸ்டர்டி (Edward Sturdy) – அளவிற்கு அதிகமாக விவேகானந்தர் புகைப்பிடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மற்றொரு பெண் புரவலர் ஹென்ரிட்டா முல்லர் (Henrietta Muller). இந்த அம்மையார் இராமகிருஷ்ண மடத்தின் தீவிர ஆதரவாளர். “விவேகானந்தர் தனது குடும்பச் சொத்துப் பிரச்சினைகளில் அதிக அக்கறை காட்டியது அவருக்குப் பிடிக்கவில்லை.” “மேலும் பெண் சீடர் நிவேதிதாவுடன் விவேகானந்தர் பழகிய முறையும் அந்த அம்மையாருக்குப் பிடிக்கவில்லை.” இதன் காரணமாகவே ஹென்ரிட்டா முல்லர் இவரிடமிருந்து விலகி மீண்டும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்.
விவேகானந்தருக்கு நீரழிவு நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரால் மாமிச உணவைத் துறக்க முடியவில்லை. புகைப்பிடிக்கும் பழக்கமும் தொடர்ந்தது. மருத்துவர்கள் ஆலோசனையை ஏற்கவில்லை. இதன் காரணமாகத் தனது 39ஆவது வயதில் இறந்தார்.
விவேகானந்தர் ஹிந்து மதத்தில் பின்பற்றப்படுகிற பல மூடநம்பிக்கைகளை, பிராமணர்களின் ஜாதிய ஆணவத்தைத் தனது உரைகளில் எதிர்த்தார். ஆனால் இவரின் பல சீர்திருத்தக் கருத்துக்களைப் புறந்தள்ளி ஒரு சார்பு நிலையில் விவேகானந்தரை இந்து மதத் துறவியாக ஹிந்துத்வா கும்பல் மாற்றி அவரைச் சாமியாராக ஆக்கித் தனது மத அரசியலுக்குச் சங்கிகள் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் இவருக்கு முன் 1823 இல் பிறந்த இராமலிங்க வள்ளலார் 1874 இல் இறந்தார்.
இராமலிங்கர்,
“மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது”
என்று தெளிவாக உரைத்து, ஸநாதனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனால் தான் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சமயம் கடவுள் சார்ந்த விவேகானந்தரின் கருத்துகளை கடும் விமர்சனம் செய்தார். அறிவியல், பகுத்தறிவுக்குப் பொருந்தாத விவேகானந்தரின் மதச் சார்பு கருத்துக்கள் மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பல் எப்போதும் உண்மை களை காந்தியாரைச் சுட்டது போன்று எரித்துச் சாம்பலாக்கிவிடும்.
புகழ் பெறும் தலைவர்களைத் தங்களின் காவி வண்ணம் பூசித் தத்தெடுத்துக் கொள்ளும். அப்படித்தான் பல கருத்து மாறுபாடுகள் இடையிலும் நரேந்திர தத்தாவைத் தத்து எடுத்துக் கொண்டது ஆர்.எஸ்.எஸ்.
விவேகானந்தருக்குக் கன்னியாகுமரியில் கடற்கரைக்குள் அமைக்கப்பட்ட மண்டபமும் ஆர்.எஸ்.எஸின் திருவிளையாடலே!
30-5-2024 தமிழ் இந்து நாளிதழில் “அன்று நரேந்திர தத்தா..! இன்று நரேந்திர மோடி” என்ற தலைப்பில் சிறீதர் சுவாமிநாதன் எழுதிய கட்டுரையில் இக்கருத்து பட்டும் படாமலும் வெளிப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் மறைந்த பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது கடலுக்குள் சிலைவைக்கும் திட்டம் ஆர்.எஸ்எஸ் தலைவரால் முன் மொழியப்பட்டது. இதைத் தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். கொடுத்த அழுத்தத்தால் ஒன்றிய அரசு விருப்பத்திற்கு இணங்க இறுதியில் கடலில் விவேகானந்தர் மண்டபம் உருவாயிற்று.
கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்த பல கல்வியாளர்களிடம் விவேகானந்தர் கடலில் உள்ள பாறையில் தியானம் செய்தாரா என்று கேட்டுள்ளேன்.
இதற்கான உறுதியான சான்றுகள் இல்லை என்றே குறிப்பிட்டனர்.
ஆழமும் அலைகள் சீற்றமும் உள்ள முக்கடல் சங்கமத்தில் நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் நீந்திச் செல்வதே கடினமானது. முன் பின் கடல் ஆழம் தெரியாத, பல நோய்களால் தாக்கப்பட்ட விவே கானந்தர் கடலில் நீந்திச் சென்று தவம் செய்தார் என்பதும் கற்பனையே!
ஒன்றிய அரசிற்கு அழுத்தம் அளித்து கன்னி யாகுமரியில் பாறையில் மண்டபம் கட்டிவிட்டார்கள்.
இது போன்ற ஆர்.எஸ்.எஸ். மதவெறி ஆட்டங்களை உணர்ந்த முதலமைச்சர் கலைஞர், இதற்குத் தக்க விடையாக இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மானுடத்திற்குப் பொது நெறியைப் படைத்த வள்ளுவருக்குச் சிலையை உருவாக்கிக் கடல் பாறையில் ஓங்கி உயர்ந்து ஒளிரும் சிலையை அமைத்தார். 2000 ஆம் ஆண்டில் பெரும் விழா எடுத்தார். இப்போது நமக்குத் தெரிகிறது கலைஞரின் தொலைநோக்குப் பார்வை!
வள்ளுவர் கூறும் தவம் பற்றிய
இலக்கணம் தான் என்ன?
“தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு”
குறள் ( 266)
நாவலர் விளக்கவுரை
(தவ நெறியைக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே தமக்குரிய கடமைகளைச் செய்யும் வல்லமை படைத்தவர் ஆவார்கள். மற்றவர்கள் எல்லாம் ஆசை வலையில் சிக்குண்டு, பயனில்லாத செயல்களைச் செய்பவர் ஆவார்கள்”)
மைசூரில் இருநாள் சொகுசு விடுதியில் தங்கி ஆடம்பரக் கும்மாளம் போட்டு 80 இலட்சம் ரூபாய் செலவு செய்த நரேந்திரர் செய்தது தவமா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை.
No comments:
Post a Comment