இராமனை வென்ற சம்பூகன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

இராமனை வென்ற சம்பூகன்!

1971ஆம் ஆண்டு ஜனவரி 23இல் திராவிடர் கழகத்தின் சார்பில் சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடும், ஊர்வலமும் வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது.
ஜனசங்கத்துக்காரர்கள் தந்தை பெரியார் பவனி வந்த வாகனத்தை நோக்கி செருப்பை வீசினர். ராமன் படம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தை (அதில் ராமனைப்பற்றி இராமாயணத்தில் கூறப்பட்டிருந்த உண்மைத் தகவல்கள் பொறிக்கப்பட்டு இருந்தன) நோக்கி செருப்பு வந்த நிலையில் வாகனத்தில் இருந்த கருஞ்சட்டைத் தோழர்கள் – எங்கள் தலைவர் இராமசாமி மீதா செருப்பு? இதோ உங்கள் தலைவன் இராமனுக்குச் செருப்பு – என்று இராமன் படத்தை அடித்தனர்.

நடந்தது இதுதான். அப்பொழுது தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நெருக்கத்தில் வரும் நிலையில் ராமனை செருப்பால் அடித்த திராவிடர் கழகம் ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று மிகப் பெரிய பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். (அந்தத் தேர்தலில் ஜென்மப் பகைவர்களான காமராசரும் ராஜகோபாலச்சாரியாரும் கூட்டணி).
இராமன்தான் தேர்தல் கதாநாயகனோ என்று பேசும் அளவுக்கு நடைபெற்ற தேர்தல் அது. முடிவு என்ன தெரியுமா? 1967 தேர்தலில் 138 இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற தி.மு.க. 1971 தேர்தலில் 184 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றி வாகை சூடியது. இதுவரை நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் 184 இடங்களைத் தனித்த முறையில் ஒரு கட்சி அதிக எண்ணிக்கையில் பெற்றது என்றால் அந்த 1971இல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றிதான்.

‘கல்கி’ இதழில் ஆச்சாரியாரே (ராஜாஜி) கையொப்பமிட்டு எழுதினார்.
“தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம் சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் ஆசியும் ‘அனுக்கிரகமும்’ பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரி சபை.

‘தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்: தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்று பாடி வைத்ததை நினைவு கொண்டு தர்மம் நிச்சயமாக வெல்லத் தான் போகிறது என்று உறுதி பெறுவோம். நம்முடைய பண்டைய பாவங்களுக்காக இன்று கூலி தருகிறோம் என்ற உணர்வுடன் இறைவனை உளம் நெகிழ்ந்து பிரார்த்தித்து அவரவர் கடமையைச் செய்து வந்தால் இறைவன் நிச்சயம் செவிசாய்ப்பான். தமிழகத்தின் பொல்லாத சாபத் தீட்டு நீங்கி இங்கு தெய்வீகம் மீண்டும் பொலியும். இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்துவிட்டது – இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறி விட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர் – புனிதத் தமிழ் மண்ணுக்கு இந்த இழுக்கும் அழுக்கும் நீங்கும் வண்ணம் நாம் அனைவரும் உறுதியான பக்தி செலுத்தி இறைவன் உள்ளத்தை உருக்கி அவனருள் பெற்று. இந்த நாட்டைத் தர்ம பூமியாக்க வேண்டும்.

ஸ்ரீராம நவமி வருகிறது. சத்திய, தர்மமூர்த்தியாக வந்த பரமனே ஸ்ரீராமன், அந்த ராமனை முன் வைத்தே – அந்த ராமனை உள்ளத்தில் உறைவித்தே – காந்தியடிகள் சுதந்திரம் பெற்றுத் தந்தார். ராமராஜ்யமாக சுயராஜ்ய இந்தியா திகழ வேண்டும் என்பதே மகாத்மாவின் கனவாக இருந்தது. அந்தக் கனவு பகற்கனவாகி விடக்கூடாது’ நூற்றுக்கு நூறு மெய்யாக வேண்டும். அந்த அளவுக்கு நாம் உண்மை ஆஸ்திகர்களாவதற்குத் தர்மமூர்த்தியான ராமனைச் சரண்புக வேண்டும். இந்த ராமநவமியன்று இந்த திவ்ய விரதத்தைத் தொடங்குவோம்.” (‘கல்கி”4.4.1971).
1971இல் எப்படி இராமனை முன்னிறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நடந்ததோ, அதேபோல 2024இல் இப்பொழுது நடைபெற்று முடிந்த 18ஆவது மக்களவைத் தேர்தலும் ராமனை முன்னிறுத்தி (அயோத்தியில் சங்பரிவார் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, பிரதமர் முன்னின்று கட்டப்பட்ட இராமன் கோயில்) நடத்தப்பட்டது.

பிரதமரா – கோயில் பூசாரியா என்று கருதும் அளவுக்கு நரேந்திர மோடி அவர்கள் பல நாள் விரதமிருந்து, (குடியரசு தலைவருக்கு மரியாதைக்காகக் கூட ஓர் அழைப்புக் கொடுக்கப்படவில்லை). பாலராமன் கோயிலைப் பிரதிஷ்டை செய்த காட்சி சாதாரணமானதல்ல; இலட்சோப லட்ச மக்கள் கூட்டப் பெற்றனர்.
மக்கள் மத்தியில் குடி கொண்டிருக்கும் பாமரத்தனமான பக்திப் போதையை பிஜேபியின் வாக்கு வங்கியாக பண்ட மாற்றுச் செய்து கொள்ளலாம் என்று பிரதமர் போட்ட வேடம் – இப்பொழுது நினைத்தாலும் ஒரு பக்கம் நகைச்சுவையாகவும், இன்னொரு பக்கம் பரிதாபகரமானதாகவும் இருந்தது.
இன்னொரு பக்கம் குமரி முனையில் விவேகானந்தர் சிலையருகே தியான மண்டபத்தில் பிரதமர் மோடி மூன்று நாட்கள் தியானமிருந்தார் – கடைசி கட்ட தேர்தலுக்கு முன்பு.

மதச் சார்பற்ற அரசின் ஆட்சித் தலைவர் குறிப்பிட்ட ஒரு மதத்தின் தலைமைப் பிரச்சாரகராக மாறி விட்டார்.
10 ஆண்டு காலத்தில் ஆட்சியில் இருந்தபோது, இன்னின்ன செயல்களைச் சாதித்தோம் என்று மார்தட்டி சொல்ல வக்குஇல்லாமல் (56 அங்குல மார்புடையவர்) பாமர மக்களின் பக்தியைப் பகடைக் காயாக்கி அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையை குழி தோண்டிப் புதைத்தவருக்குப் பெயர்தான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி.
ஆனால் நடந்தது என்ன? ராமன் கோயில் கட்டப்பட்ட அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பிஜேபி வேட்பாளர் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதுதான் மிச்சம்! மகா விஷ்ணுவின் அவதாரம் என்று கூறிக் கொள்ளும் ராமன் கை கொடுக்கவில்லையே!

இதில் அழுத்தமாகக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதி என்பது பொதுத் தொகுதி – அதில் வெற்றி பெற்றவரோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்.
அதாவது சம்பூகன் ராமனை வென்றான் என்பதுதான் இந்த மக்களவைத் தேர்தலின் புது அம்சம்.
சுருக்கமாகச் சொன்னால் தந்தை பெரியார் வென்றார். 2019 தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்தபோது ‘தந்தை பெரியார் வாழ்க!’ என்று முழக்கமிட்டதன் பொருளை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்பது மிகச் சரியாக இருக்கும்.
பிஜேபி தானே ஆட்சி அமைக்கப் போகிறது என்று கேட்கலாம். பிஜேபி தனித்துப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை. ராமனுக்கும், தியானத்துக்கும் சக்தி இருந்தால் தனிப் பெரும்பான்மையுடன் அல்லவா வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்க வேண்டும்!

No comments:

Post a Comment