சிறப்பு திருமண சட்டம் செல்லுமா?
இரு உயர்நீதிமன்றங்கள் மாறுபட்ட உத்தரவு?
ஜபல்பூர், ஜூன் 2 ஹிந்து – முஸ்லிம் மதத்தினர் இடையே நடந்த திருமணம், சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டாலும், இஸ்லாமிய தனிச்சட்டத்தின் கீழ் அது செல்லாது என்ற தீர்ப்பை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.
மாற்று மதங்களைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் மதம் மாறாமல் திருமணம் செய்து கொள்ள, சிறப்பு திருமண சட்டம் இடம் அளிக்கிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சபி கான் – சரிகா சென் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்கள் மதம் மாறாமல் திருமணம் செய்ய முடிவு செய்ததால், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய விண்ணப்பித்தனர். இந்த திருமணத்துக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, காதலர்களை பிரிக்க அவர்கள் திட்டமிட்டனர். திருமண பதிவு முடியும் வரை தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிடும்படி, சபி – சரிகா ம.பி., உயர் நீதிமன்றத்தை நாடினர். அவர்கள் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜி.எஸ்.அலுவாலியா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், அந்த பெண் வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும், வேற்று மத திருமணம் தங்களை சமூக புறக்கணிப்புக்கு ஆளாக்கும் என்றும் முறையிட்டனர்.இதை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆணுக்கும், உருவ வழிபாடு செய்யும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் இஸ்லாமிய சட்டப்படி முறையற்றதாகக் கருதப்படுகிறது. இஸ்லாமிய தனிச்சட்டம் இதை ஏற்றுக் கொள்ளாது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்தத் திருமணம் செல்லுபடியாகாது. முறையற்ற திருமணமாகவே கருதப்படும். எனவே, மனுதாரர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
உ.பி.,யில் நேர்மாறான தீர்ப்பு!
ம.பி., உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நேர்மாறான தீர்ப்பை உத்தரப்பிரதேச உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து – முஸ்லிம் இணை ஒன்று, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர்; குடும்பத்தினரிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதும், பாதுகாப்பு கோரி உ.பி., உயர் நீதிமன்றத்தை நாடினர். மனுவை விசாரித்த நீதிபதி ஜோத்ஸ்னா சர்மா, மனுதாரர்களை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு திருமணத்துக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தினார். சட்டப்படியான திருமணத்தை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்த அவர், பதிவு திருமணம் முடியும் வரை மனுதாரர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். பதிவு திருமணம் முடிந்ததும், ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment