‘நீட்’ தேர்வு முறைகேடு: குஜராத்தில் அய்ந்து பேர் கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

‘நீட்’ தேர்வு முறைகேடு: குஜராத்தில் அய்ந்து பேர் கைது!

கோத்ரா, ஜூன் 15- மருத்துவ படிப்பு களுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். நீட் தேர்வு நடைபெற்ற நாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.
ஆனாலும், நீட் தேர்வு முடிவு வெளி யானபோது அரியானா மாநிலத்தில் ஒரே மய்யத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவர்களுக்கு 23ஆம் தேதி மறு தேர்வு நடத்துவதாகவும் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இந்தநிலையில் நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மய்யத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 27 பேரின் தேர்வுத்தாள்களில பதில் எழுதி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் இருந்து தலா ரூ.10 லட்சம் பேரம் பேசி, அதற்காக ரூ.2 கோடியே 30 லட்சத்துக்கான காசோலையும் கைமாறியதாகவும் அந்த மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விசாரணை நடத்த கோத்ரா தாலுகா காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். விசாரணையில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக தேர்வு மய்யமாக இருந்த பள்ளி முதல்வர் புருஷோத்தம் சர்மா, தேர்வு மய்ய துணை கண்காணிப்பாளர் துஷார்பட், வதோராவை சேர்ந்த கல்வி ஆலோசகர் பரசுராம் ராய், அவரது உதவியாளர் விபோர் ஆனந்த் மற்றும் இடைத்தரகர் ஆரிப் வோரா ஆகிய 5 பேரை கோத்ரா தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட துஷார் பட்டிடம் இருந்து ரூ.7 ல ட்சத்தையும் காவல்துறையினர் மீட்டனர்.

No comments:

Post a Comment