நாகர்கோவில், ஜூன் 5- விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விஜயதரணி வெற்றிபெற்றார்.
அதன்பின், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் தலைமையை விஜயதரணி அணுகினார். ஆனால், அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் சேர்ந்தார்.
இதனால், நடப்பு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் பெண்களையே வேட்பாளர்களாக அறிவித்தன. கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அரசியல் தலைவர்கள் அனைவருமே, விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை சந்தித்த ஒரே தொகுதி என்பதால், விளவங்கோடு இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன.
இத்தொகுதியில் 2,37,382 வாக்குகள் உள்ளநிலையில், 1,57,776 வாக்குகள் பதிவாயின. வாக்குஎண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலையில் இருந்தார். 22 சுற்றுகள் நடந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
No comments:
Post a Comment