எம்மை வார்த்தெடுத்த “விடுதலை” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

எம்மை வார்த்தெடுத்த “விடுதலை”

featured image

தமிழர்களின் கைவாளாக விளங்கிக் கொண்டிருக்கும் “விடுதலை” நாளிதழ் தற்போது 90 ஆண்டுகளைக் கடந்துள்ளது என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். விடுதலை இதழும் நானும் என்னும் குறுங் கட்டுரையின் மூலம் என் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

90 ஆண்டுகளைக் கடந்த விடுதலை இதழ் 69 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனது. அப்போது திருச்சி வரகனேரியில் என் மாமா ஓ. வேலு வீட்டில் இருந்து தொடக்கப்பள்ளிப் படிப்பைத் த.செவந்தலிங்கம் முத்திரியர் பள்ளியில் படித்து வந்தேன். என் மாமா பெரியார் தொண்டர். அதனால் வீட்டில் தினத்தந்தியும் விடுதலையும் இருக்கும். 1965இல் ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நான் தினத்தந்தியைத்தான் பார்ப்பேன். தலைப்பு எழுத்துகளைக் கூட்டிப் படித்துக்கொண்டிருப்பேன். விடுதலையில் உள்ள சீர்திருத்த எழுத்துகள் என்னைக் குழப்பவே விடுதலையைத் தொடுவதில்லை.

2ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2 நாள் திராவிடர் கழக மாநாட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். என் அக்கா சண்பகவல்லியும் உடன் வந்திருந்தார். என் அக்காவும் மாமாவும் 1955இல் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். மாமா ஓ.வேலும் 1982இல் இரயில்வே பணிஓய்வுக்குப்பின் திருச்சி நகரக் கழகத் துணைத் தலைவராக இருந்தார். 1992ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இறந்துபோனார். “கருஞ்சிறுத்தை ஓ.வேலு காலமானார்” என்று விடுதலையில் செய்தி வந்திருந்தது.

மதுரையில் தந்தை பெரியார் பேச்சுக்கு ஒரு பெரிய கூட்டம் கூடியது எனக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது. தந்தை பெரியார் பேசியது எதுவும் புரியவில்லை. அவர் அருகே அமர்ந்திருந்த நாய்களின் மீதே என் கவனம் இருந்தது. பின் திருச்சி திரும்பியவுடன் மதுரையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை விடுதலையில் இருந்தது. கேட்ட உரையைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக அய்யாவின் உரையைக் கடினப்பட்டு, வார்த்தை வார்த்தையாக வேகமாகப் படித்தேன். கடவுள் புராணம் குறித்த செய்திகள் மட்டும் கொஞ்சம் புரிந்தது. இப்படித்தான் விடுதலையை வாசிக்கத் தொடங்கினேன். 3ஆம் வகுப்பில் எழுத்துச் சீர்திருத்தம் எந்தெந்த எழுத்துக்கு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொண்டு படித்தேன்.

1969இல் நான்காம் வகுப்பில் காலாண்டு தேர்வைக் கருப்பு மையிலும், பெரியார் சீர்திருத்த எழுத்து முறையிலும் எழுதினேன். இப்படி எழுதுவது எனக்குப் பிடித்தும் இருந்தது. தேர்வு தொடங்கும்போது என் நண்பர்கள் உ சிவமயம் என்று எழுதுவார்கள். நான் கடவுள் இல்லை என்று எழுதிவிட்டுத்தான் விடைத்தாளை எழுதத் தொடங்கினேன். விடைத்தாள் திருத்தம் செய்து ஆசிரியர் இராஜகோபால் மதிப்பெண்களை அறிவித்துவிட்டார்.

விடைத்தாளைத் தலைமையாசிரியர் சிவராமன் அவர்களிடம் பெற்றுக்கொள்ளக் கூறினார். 3,4,5 ஆகிய வகுப்புகளுக்குத் தலைமையாசிரியர் விடைத்தாளைக் கொடுத்துவிட்டு 60 மதிப்பெண் மாணவர்களைப் பிரம்பால் அடிக்கவில்லை. மற்றவர்கள் வாங்கிய மதிப்பெண்ணுக்கு ஏற்ப அடி கிடைத்தது. எங்கள் முறை வந்தது. நான் எல்லாப் பாடங்களிலும் 60 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருந்தேன். 5 பாடங்களின் விடைத் தாளைக் கொடுத்துவிட்டு, விடைத்தாளில் கடவுள் இல்லை என்று எழுதக்கூடாது என்று கடுமையாக எச்சரித்தார். மேலும் கருப்பு மையில் தேர்வு எழுதக்கூடாது என்றும் பெரியார் சீர்திருத்த எழுத்திலும் தேர்வு எழுதக்கூடாது என்று கூறி என்னைப் பிரம்பால் அடித்தார்.

அடியை வாங்கிக் கொண்ட நான், “பெரியார் சீர்திருத்த எழுத்தில் எழுதுவது ஈஸியாக இருக்கிறது. அதில் என்ன தப்பு? விடுதலை நாளிதழ் இப்படியான எழுத்துமுறையில்தானே வருகின்றது” என்று கொஞ்சம் வாய்த்துடுக்காகப் பதில் பேசிவிட்டேன். அந்தப் பார்ப்பனச் சமுதாயம் சார்ந்த சிவராமன் கோபத்துடன், “சொன்னா கேட்கமாட்ட… போய்க் காந்தி சிலையில் முட்டிப்போடு” என்றார். முட்டிப்போட்டு இருந்தேன். என் சக மாணவர்களுக்கு எனக்கு வழங்கப்பட்ட தண்டனை ஏன் என்பது புரியவில்லை. மதிய உணவுக்குப் பின்னும் காந்தி சிலையின் முன் முட்டிப் போட்டிருந்தேன். பின் மாலை 4.15மணிக்கு வீட்டுக்குப் போகும் பெல் அடித்தபோதுதான் என் தண்டனை நிறைவுற்றது.

திராவிட இயக்க உணர்வுடைய என் வகுப்பு ஆசிரியர் இராஜகோபால் எனக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு விடுதலையைத் தொடர்ந்து படித்தாலும் 5ஆம் வகுப்பு வரை பெரியார் சீர்திருத்த எழுத்தில் தேர்வுகளை எழுதுவதில்லை. 6ஆம் வகுப்பு உயர்நிலை பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தபோது, அங்கே பெரியார் சீர்திருத்த எழுத்தில் காலாண்டு தேர்வை எழுதியபோது தமிழ் ஆசிரியர் செல்லையா என்பவர் “இப்படி அதிகப்பிரசங்கியா எழுதக்கூடாது” என்ற காதைத் திருகினார். காரணம் அப்போது தமிழ்நாடு அரசு தந்தை பெரியார் சீர்திருத்த எழுத்துக்கு ஏற்பு வழங்காமையால்தான் உன்னை எழுதக்கூடாது என்று கூறுகின்றனர் என்று மாமா விளக்கம் தந்தார்.

1981இல் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, அதன் வகுப்புகள் 1982இல் தொடங்கப் பட்டது. அப்போது முதுகலை தமிழ் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அய்யாவின் நூற்றாண்டு விழாவை அப்போதைய தமிழக அரசின் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் கொண்டாடினார். அதன் ஒருபகுதியாகப் பெரியார் சீர்திருத்த எழுத்துகள் தமிழ் உரைகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் முதல் பருவத் தேர்வைப் பழைய தமிழ் எழுத்து முறையிலும் பெரியார் சீர்திருத்த எழுத்திலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நான் முதுகலைத் தமிழ் முதல் பருவத் தேர்வில் 4 பாடங்களையும் முழுக்கமுழுக்கப் பெரியார் சீர்திருத்த எழுத்தில் எழுதியிருந்தேன்.

முதுகலைத் தமிழ் விடைத்தாள் திருத்த மய்யம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் அமைக்கப்பட்டுத் தமிழ் பாட விடைத்தாள்களில் இக்கால இலக்கியம் என்னும் பாடம் சார்ந்த விடைத்தாள்களைப் பேராசிரியர்கள் திருத்திக் கொண்டிருந்தார்கள். மய்யத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு பேராசிரியர் ஒருவர்,“எல்லாரும் ஒரு நிமிடம் கவனியுங்கள். முதுகலைத் தமிழ் மாணவர் ஒருவர் முழுக்கமுழுக்கப் பெரியார் சீர்திருத்த முறையில் எழுதியிருக்கிறார். ஆச்சரியமாக உள்ளது” என்றவுடன், விடைத்தாள் திருத்தும் மய்யத்தில் இருந்த ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சி.நயினார் முகமது (தமிழகப் புலவர் குழு உறுப்பினர்களில் ஒருவர்) அதற்குப் பதில் அளிக்கும் விதத்தில்,“அந்த விடைத்தாள் கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளதா? விடைத்தாளின் முகப்பில் கடவுள் இல்லை என்று எழுதப்பட்டுள்ளதா?” என்று கேட்க, அந்த ஆசிரியர் “ஆம்” என்று சொன்னவுடன், நயினார் முகமது,“அது என் மாணாக்கர் நெடுஞ்செழியன்தான். அவர் ஒரு பெரியார் பற்றாளர்” என்றவுடன் மய்யத்தில் மீண்டும் அமைதி திரும்பியது. தேர்வு முடிந்து 2ஆம் பருவத்திற்கு வகுப்பு தொடங்கியபோது என்னை அழைத்துப் பாராட்டி இந்தச் செய்தியைப் பெருமையோடு சொல்லிக் கைகுலுக்கிப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

திருச்சி பொன்மலையை அடுத்த மேலகல்கண்டார் கோட்டையில் இயங்கி வந்த முருகன் தட்டெழுத்துப் பயிலகத்தில் தட்டச்சு பயின்றேன். 1982 மே மாதம் ஆங்கிலத் தட்டச்சில் இளநிலையில் தேர்ச்சி பெற்றேன். பின்னர் 1983 மே மாதம் ஆங்கிலத்தில் உயர்நிலையில் தேர்ச்சி பெற்றேன். பின்னர் 1983இல் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தமிழ்த் தட்டச்சு தேர்வில் உயர்நிலையிலும் தேர்ச்சி பெற்றேன். நிமிடத்திற்கு 45 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவேண்டும் 15 நிமிடத்தில் என்பது வரையறை. நான் பெரியார் சீர்திருத்த எழுத்தில் அதிகபட்சம் 13 நிமிடத்தில் தட்டச்சு செய்துவிடுவேன். என் நண்பர்கள் பழைய எழுத்துமுறையில் சரியாக 15 நிமிடமும் தட்டச்சு செய்துகொண்டிருப்பார்கள். அப்போது தட்டச்சு நிறுவனத்தை நடத்தி வந்த முருகபூசணம், “நெடுஞ்செழியன் தமிழ்த் தட்டச்சில் பெரியார் சீர்திருத்த எழுத்து முறையைப் பயன்படுத்துகிறார். நேரமும் குறைகின்றது. பிழைகள் இல்லாமல் தட்டச்சு செய்ய முடிகின்றது என்றால் நீங்களும் பின்பற்றலாமே” என்று அறிவுரை வழங்கினார்.

பழைய எழுத்துமுறை மனத்தில் படிந்துவிட்ட என் சக மாணவர்கள் என்னிடம் இது எப்படிச் சாத்தியம்? என்றார்கள். நான்,“2ஆம் வகுப்பிலிருந்து விடுதலையை எழுத்துக்கூட்டிப் படித்தேன். பெரியார் சீர்திருத்த எழுத்தில் எழுதியதற்கு 4ஆம் வகுப்பில் தண்டனை பெற்றேன். முதுகலைத் தேர்வுகளையும் சீர்திருத்தத்தில் எழுதியதற்குப் பாராட்டுப் பெற்றேன். இப்போது தட்டச்சில் பெரியார் சீர்திருத்த எழுத்து எனக்கு நேரத்தைக் குறைத்தது. பிழைகளையும் குறைத்தது” என்றவுடன் என்னை வியப்பாகப் பார்த்தார்கள்.

தந்தை பெரியாரின் விடுதலை என்னைச் சிறுவயதில் வழிநடத்தியது. பெரியாரிய உணர்வுடன் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் நான், முதுகலைத் தமிழ், எம்.பில். முனைவர் பட்டங்களைப் பெற்று 1997 – 2012ஆம் ஆண்டு வரை மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியின் தமிழ்த்துறையிலும், 2012-2018ஆம் ஆண்டு பணிமாறுதல் பெற்று, திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத் துறையிலும் பணியாற்றி 2018இல் ஓய்வு பெற்றேன்.

பின்னர்ச் சுவடு என்ற இதழில் “பெரியார் பக்கம் என்று ஓராண்டுகள் கட்டுரைகள் எழுதினேன். அக் கட்டுரைகளைத் தொகுத்துச் சுவடு பதிப்பக நிறுவனர் நல்லு இரா. லிங்கம் அவர்கள் “பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்னும் தலைப்பில் புத்தக ஆக்கம் செய்து வெளியிட்டார். தந்தை பெரியார், “சமுதாயத்தின் எல்லா நிலை மக்களுக்கும் அவர் கொள்கைகள் பேருதவியாக இருந்தது” என்பார்கள். உண்மைதான். மாணவர்கள் வாழ்விலும் பெரியார் உதவியாக இருக்கிறார். அதுவும் தற்போது 90 ஆண்டுகளைக் கடந்த விடுதலையின் வழியாகவும் உதவியாக இருந்திருக்கிறார் என்று எண்ணும்போது நெஞ்சம் பெருமிதத்தால் விரிகின்றது.

No comments:

Post a Comment