நினத்தது ஒன்று நடந்தது வேறொன்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

நினத்தது ஒன்று நடந்தது வேறொன்று

தேர்தல் துவங்குவதற்கு முன்பாக கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும் சாமியாரிணியுமான நிரஞ்சனா என்பவரிடம் பாஜக சார்பு ஊடகவியலாளர் அடுத்த முறை யார் யார் வெற்றி பெற்று வந்தால் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று கேட்டார்.
அவரோ யார் வரக்கூடாது என்று பட்டியலிட்டார்!
அதில் தமிழ்நாட்டைச்சேர்ந்த இருவர் – ஒருவர் கனிமொழி – மற்றொருவர் ஆண்டிமுத்து ராசா. அதன் பிறகு சுப்ரியா சுலே, மகுவா மொயித்ரா, சசி தரூர், அசாதுதீன் ஓவைசி, ராகுல் காந்தி, சத்ருகன் சின்கா என்று பட்டியலிட்டார்.
தேர்தல் முடிவுகள் என்ன கூறுகின்றன?
மகுவா மொய்த்ரா 56,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சசிதரூர் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை 17 ஆயிரம் வாக்குகளில் தோல்வி அடையச் செய்தார்.
சுப்பிரியா சுலே தனது சகோதரரின் மனைவியை தோற்கடித்தார்.
சத்ருகன் சின்கா தன் மீது பாலியல் பழியைச் சுமத்தி போலியாக வதந்தி பரப்பிய பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.
ஆண்டி முத்து ராசா நீலகிரியில் ஒன்றிய அமைச்சர் எல். முருகனை 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடையச்செய்தார்

அசாதுதீன் ஓவைசி தன்னை எதிர்த்து போட்டியிட்ட – மனநோயாளிபோல் பாசாங்கு செய்து தேர்தல் பரப்புரை செய்த மாதவி லதா என்ற பாஜக வேட்பாளரை 3.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தூத்துக்குடியில் கனிமொழி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனை வரையுமே வைப்புத் ்தொகையை இழக்கச் செய்தார்.
அமேதியில் ஸ்மிருதி இரானியால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட – கிசோரிலால் சர்மா 1.67 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ராகுல் காந்தி தான் போட்டியிட்ட ராய்பரேலியிலும் மற்றும் வயநாட்டிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் யார் வரக்கூடாது என்று பட்டியலிட்டவரான சாமியாரிணி நிரஞ்சனா ஜோதி பதேபூர் தொகுதியில் புதுமுக வேட்பாளரான சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த நரேஷ் உத்தம் என்ற இளைஞரிடம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பி.ஜே.பியைச் சேர்ந்த ஒருவர் பிஜேபியை எதிர்த்து நிற்கும் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சொன் னால் அதனைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் பொருளின் பின்னணி என்ன?

மதவெறிக் கண்ணோட்டத்துடன்தான் இதனைக் கூறியிருக்க முடியும். இவர் சொன்ன அத்தனைப் பேரும் பெரு வெற்றி பெற்றுள்ளனரே – முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வார்?
இதில் என்ன வேடிக்கை என்றால், சில பேர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பிஜேபி மேனாள் ஒன்றிய இணை அமைச்சரான சாமியாரிணி நிரஞ்சனா ஜோதி நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியுற்றார் என்பதுதான்.
பிஜேபியைப் பொறுத்த வரையில் அவர்களின் கணிப்புகள் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய் விட்டன.

No comments:

Post a Comment