‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்க!

featured image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 8- கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:

முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்

சமீபத்திய நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட மய்யங்களில் இருந்து மொத்த மாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வை யில்நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளிவழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பின் குறைபாடுகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில், மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறோம். நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழைமாணவர்களுக்கு எதிரானவை. சமூகநீதிக்கு எதிரானவை. நீட் எனும் பிணியை அழித்தொழிக்க கரம் கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.

மா.சுப்பிரமணியன்
மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர்

நீட் தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு தேசிய தேர்வுமுகமை கருணை மதிப்பெண்கள் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு எழுதிய 23,33,297 பேரில்எத்தனை பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறாமல் இருப்பதும் நியாயமில்லை. இதனால் இந்த ஆண்டு650 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்.

பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர்


தேர்வு மய்யங்களில் ஏற்பட்ட காலதாமத்துக்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறும் நிலையில், இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையின் விளக்கம் வெளிப்படைத்தன்மை கொண்ட தாக இல்லை. வடமாநிலங்களில் தேர்வு மய்யம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் கூட சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட்தேர்வை ரத்து செய்து பழையபடி 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்யும்படி புதிதாக அமையவுள்ள ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்

ஹரியானாவில் ஒரு மய்யத்தில் நீட் தேர்வு எழுதிய 8 பேர் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். இதில் 6 பேர் அடுத்தடுத்த வரிசை எண்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்பதும், தவறான பதிலுக்கு 4 மதிப்பெண் குறைவதோடு கூடுதலாக ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என்கிற நிலையில் 2ஆம், 3ஆம் இடம் பெற்றவர்கள் 719, 718 என மதிப்பெண் பெற்றிருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

இழக்கப்பட்ட நேரத்துக்கான கருணை மதிப்பெண்கள் இது என தேசிய தேர்வு முகமை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

‘நீட்’ தேர்வு முறைகேடு

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை
காங்கிரஸ் தலைவர் கார்கே கோரிக்கை

புதுடில்லி,ஜூன் 8- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது?
வினாத்தாள் கசிவு, முறை கேடு, ஊழல் ஆகியவை நீட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளின் ஒரு அங்கமாக மாறி விட்டது. இதற்கு மோடி அரசுதான் நேரடி பொறுப்பேற்க வேண்டும். தேர்வு எழுதி, முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் எதிர்காலத்துடன் மோடி அரசு விளையாடுகிறது. அவர்களை ஏமாற்றிவிட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம். அதன்மூலம் நீட் உள்ளிட்ட தேர்வுகளை எழுதும் மாணவர்கள் நீதி பெறுவார்கள்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment