சடங்குகள் மற்றும் செலவினங்களைத் தவிர்த்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி ஏற்று மணம் முடித்த இணையர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

சடங்குகள் மற்றும் செலவினங்களைத் தவிர்த்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி ஏற்று மணம் முடித்த இணையர்

featured image

தமிழில்: வீ.குமரேசன்

திருமண நிகழ்வு என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் நினைவில் வைத்திருக்கின்ற நெகிழ்ச்சி நிறைந்தது. இந்நாளில் அத்தகைய நிகழ்வுகளுக்கு இளம் இணையர்கள் தனித்துவத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மராட்டிய மாநிலம், பண்டாரா மாவட்டம் லக்னி எனும்ஊரில் வித்தியாசமான முறையில் திருமணம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தேறியது.
மணமக்கள் இருவரும் ‘புனித நூலின்’ மீது உறுதிமொழி எடுப்பதற்குப் பதிலாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழியினை ஏற்று தங்களின் திருமணத்தை நடத்திக் கொண்டனர்.
நாக்பூரில் இதழியலாளர்களாகப் பணியாற்றும் மணமகள் மற்றும் மணமகன் பங்கஜ் ஆகியோர் தங்களுடைய திருமணத்தை ஒரு வேறுபட்ட முறையில் நடத்திட விரும்பினர்.

பழைமையான திருமணச் சடங்குகளையும் தேவையில்லாத செலவீனங்களையும தவிர்த்து, நவி புத்தத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வலியுறுத்திய திருமண முறைப்படி செய்திட விரும்பினர். மேலும், மணமகள் இந்திய அரசமைப்பு சட்ட புத்தகத்துடன் வெகு விமரிசையாக மண அரங்கிற்கு வந்தார். இணையர் இருவரும் அரசமைப்புச் சட்டத்தின் மீது கைகளை வைத்து திருமண உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இத்தகைய வியப்பான திருமண முறை நாக்பூர் நகரம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது.
“1956ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், கவிஞர் வாமன் தாதா கர்பக் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் உயரிய புத்தநெறி சார்ந்த திருமணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
அத்தகைய வழிமுறையில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி திருமணம் செய்திட முடிவு செய்தோம்” என மணமகள் பிரான்ஜல் தெரிவித்தார். மணமக்கள் இருவரும் வெள்ளை உடை அணிந்து புத்தர், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உருவப் படங்களை வணங்கி ஒருவருக்கு மற்றவர் மாலை மாற்றி மணம் முடித்துக் கொண்டனர்.

புத்த நெறி சார்ந்து மணம் முடித்திட வேண்டும் என முடிவு செய்திருந்தாலும், உறுதி ஏற்கும்பொழுது சிறப்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் மணம் முடித்திட மணமகள் பிரான்ஜல் விரும்பினார்.
மண நிகழ்வுகள் அருமையாக நடைபெறும் இந்நாள்களில், அரசமைப்பு சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தி அருமையாக மணம் முடித்தோம். புத்தர், டாக்டர் பாபாசாகேப் ஆகியோரின் உருவப் படத்தின் முன்பு நின்று அவர்களை வணங்கி நின்றோம்.
திருமண நிகழ்வின்பொழுது, புத்த பிக்கு மணநிகழ்வு உறுதி மொழியினை எடுத்துரைக்க, அரசமைப்புச் சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு உறுதிமொழியினை மணமக்கள் எடுத்துக் கொண்டனர். நம் நாட்டில் மாபெரும் சொத்தான இந்திய அரசமைப்புச் சட்டமானது எங்களது திருமணத்திற்கு சாட்சியாக விளங்கியது. இதழியலாளர்களாகிய நாங்கள் அரசமைப்புச் சட்டம் எவ்வாறு பேச்சுரிமையினை, கருத்துரிமையினை பாதுகாத்து வருகிறது என்பதை நன்றாக அறிவோம்” என்று மணமகன் பங்கஜ் கூறுகிறார்.

மண விழாவிற்கு வந்திருந்தோர் மணமக்களின் கொள்கை, சிந்தனையுடனான செயல்பாடு பற்றி வெகவாகப் பாராட்டினர். “அரசமைப்புச் சட்ட கொள்கைகளை ஆதரித்தும், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் ‘திருமணம்’ உள்ளடக்கி திகழ்கிறது. அத்துடன் மணமக்கள் ‘சாதம்மா’ (Saddhamma) என்ற நன்னெறி நடத்தையினைப் பின்பற்றி வாழ்த்திட உறுதி கொண்டுள்ளனர்” என புத்த பிக்கு அதர்னியா நாத் புன்னோ தெரிவித்தார். இவ்வாறு தனித்தன்மையுடன் திருமணம் நடத்திட தங்களுக்கு வழிகாட்டிய புத்த நெறி அறிஞர்கள் சுபாஷ் ஷெண்டே மற்றும் நீடா டொங்ரே ஆகியோருக்கு நன்றியறிதலை மணமக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment