சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூபாய் 85 லட்சம் அபராதம் வசூல் சென்னை மாநகராட்சி நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூபாய் 85 லட்சம் அபராதம் வசூல் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

featured image

சென்னை, ஜூன் 4- சென்னை மாநகராட்சியின் அறிவுறுத்தல்களை மீறி சாலையில் மாடுகளை திரிய விட்ட மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.85லட்சம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளதாக மாநகராட்சி அதி காரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் நாளுக்கு நாள் மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை மாடுகள் முட்டும் நிகழ்வு அதிகரித்தது.

மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சாலைகளில் மாடுகளை திரிய விடும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் முதல் முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ.5ஆயிரமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.

இது குறித்து, மாநகராட்சி கூட்டத்தி லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநகராட்சியின் அறிவு றுத்தல்களை பின்பற்றாமல் மாட்டின் உரிமையாளர்கள் சாலைகளில் தொடர்ந்து மாடுகளை திரிய விட்டு வருகின்றனர். இதற்கு மேலும் கடிவாளம் போடும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாடு வளர்க்கும் நபர்களின், மாட்டுத் தொழுவங்களுக்கு உரிமம் பெறுவது அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி யின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் நாள் தோறும் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இதுவரை சாலையில் சுற்றித்திருந்த 3 ஆயிரத்து 309 மாடுகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துள்ளனர். மாநகராட்சியின் அறிவுறுத்தல்களை மீறி சாலையில் மாடுகளை திரிய விட்ட மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.85 லட்சத்து 69 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகை முழுவதும் சென்னை மாநகராட்சியின் கருவூ லத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment