‘நீட்’ தேர்வு தில்லு முல்லு அம்பலம் 40 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

‘நீட்’ தேர்வு தில்லு முல்லு அம்பலம் 40 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு

புதுடில்லி, ஜூன் 14- மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குநர் சுபோத் குமார் சிங் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:- நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், மோசடி, ஓ.எம்.ஆர். தாளை சேதப் படுத்துதல் போன்ற நேர்மையற்ற காரியங்களில் ஈடுபட்ட 63 மாண வர்கள் பிடிபட்டனர். அவர்கள் மீதான புகார்களை விசாரிக்க கல்வி மற்றும் தேர்வுகளில் நிபுணர்களான 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், 12 மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளும், 2 மாணவர்களுக்கு தலா ஓராண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீதி 40 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளன. நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை. நீட் தேர்வின் புனிதத் தன்மை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளப்படவில்லை.

1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்தது பற்றி விசாரிக்க ஒன்றிய அரசு 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. அக்குழு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதன் பரிந்துரை அடிப்படையில், 1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் அல்லது எந்த மாணவரும் பாதிக்கப்படாதவகையில் மாற்று வழிமுறை உருவாக்கப்படும்.

முழு மதிப்பெண் பெற்ற 67 பேரில், 44 பேருக்கு இயற்பியல் தேர்வு விடைத்தாள் மாற்றம் காரணமாகவும், 6 பேருக்கு நேர விரயம் காரணமாகவும் கருணை மதிப்பெண்கள் அளிக்கப் பட்டுள்ளன என்றார் அவர்..

No comments:

Post a Comment