ஒன்றியத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்ற போலி கருத்துக் கணிப்புகளால் சிறு, குறு முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

ஒன்றியத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்ற போலி கருத்துக் கணிப்புகளால் சிறு, குறு முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு!

featured image

நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை: ராகுல்காந்தி

புதுடில்லி, ஜூன் 7 போலி கருத்துக் கணிப்புகளின் எதிரொலியாக மிகப்பெரிய பங்குச் சந்தை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் சிறு, குறு முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை யகத்தில் நேற்று (6.6.2024) செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பங்குச்சந்தையில் முதலீடு செய் பவர்களுக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனையை வழங்கியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசியதாவது: “முதலீட்டு ஆலோசனை வழங்குவது அவர்களின் வேலையா? அதுமட்டுமில்லாமல் ‘செபி’ விசாரணையின் கீழ் இருக்கும் குழுமத்துக்கு சொந்தமான ஒரே ஊடகத்திற்கு ஏன் இரண்டு நேர்காணல்களும் கொடுக்கப்பட்டன?
போலி கருத்துக் கணிப்புகளுக்கும், தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பாஜகவுக்கும் என்ன தொடர்பு என்பதை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும்” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேட்டி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “ஜூன் 4 ஆம் தேதி பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என்று உறுதி அளித்திருந்தார்.
அதே போல ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், “என்னுடைய கருத்து என்ன வென்றால், ஜூன் 4-க்கு முன்பாகவே பங்கு களை வாங்கி விடுங்கள். பங்குச் சந்தை உச்சம் தொடப் போகிறது” என்று பேட்டி ஒன்றில் நேரடியாகவே தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. அடுத்தநாளே இந்திய பங்குச்சந்தை புள்ளிகள் திடீரென புதிய உச்சம் தொட்டது. சென்செக்ஸ் 76,739 புள்ளிகளையும், நிப்டி 23,339 புள்ளிகளையும் எட்டியது. முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
ஆனால், ஜூன் 4 ஆம் தேதி பாஜக கூட் டணி 293 இடங்களை மட்டுமே வென்றதால் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 4,389 புள்ளிகள், நிஃப்டி 1,379 புள்ளிகள் சரிந்தன. மொத்த அளவில் சென்செக்ஸ் 5.74%, நிஃப்டி 5.93% சரிந்தன. சிறு குறு முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment