இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள்ளும் – வெளியிலும்
மக்கள் ஆதரவைத் திரட்டி இலட்சியப் போரில் வெல்லவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தனிப்பெரும்பான்மையின்றி, மோடி தலைமையில் ஒன்றியத்தில் ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி நாடாளு மன்றத்திற்குள்ளும், வெளியிலும் ஒன்றுபட்டு நின்று, மக்கள் ஆதரவைத் திரட்டி இலட்சியப் போரில் வெல்லவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க. – தெலுங்கு தேசம் – அய்க்கிய ஜனதா தளம் முதலிய இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் சில கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட) புதிய அமைச்சரவை கடந்த 9.6.2024 அன்று பதவியேற்றுள்ளது.
பா.ஜ.க., தேர்தல் பிரச்சாரத்தின்போது 400 இடங்களைப் பிடிப்போம்; 370 தொகுதிகளுக்குமேல் பா.ஜ.க. தனித்து வெற்றி பெறுவது உறுதி என்று மேடைதோறும் பேசினர்.
2019 இல் பா.ஜ.க. பெற்ற இடங்கள் 303. 2024 இல் – தற்போதுள்ள நிலவரப்படி 240 இடங்கள்தான்!
முந்தைய 63 இடங்களை பா.ஜ.க. இழந்தது! தனித்த அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
வடமாநிலங்களில் – ஹிந்தி பிரதேசங்களில்கூட அவர்கள் எதிர்பார்ப்பு பலிக்கவில்லை.
‘ஜெய் சிறீராம்’ கோஷத்தை விட்டு ‘ஜெய் ஜெகன்னாத்’ கோஷத்தை முன்னெடுக்கும் மோடி!
அயோத்தியில் இராமன் கோவில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே, தேர்தலுக்கு மூலதனமாகும் என்ற நப்பாசையோடு, அதை அவசர அவசரமாகப் பிரதமர் மோடியே – ஸநாதன சங்கராச்சாரியார்களின் எதிர்ப்பையும் மீறி, கோலாகலமாகத் திறப்பு விழா நடத்தி, நாடு முழுவதும் அதை ஒளிபரப்பு செய்து, ஒரு விமான நிலையத்தைக்கூட அங்கே கட்டிய மகத்தான வித்தை பா.ஜ.க.வுக்குக் கைக் கொடுக்காதது மட்டுமல்ல, அயோத்தி உள்ளடங்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் (யாதவ்) தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி, அந்தப் பொதுத் தொகுதியில் வெற்றிக் கொடியைப் பறக்க வைத்தார். அதன் சுற்றுத் தொகுதிகள் அய்ந்திலும்கூட பா.ஜ.க. படுதோல்வி! அதனாலேயே, பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், இராமன் பெயரைக்கூட உச்சரிக்காமல் தவிர்த்தார்!
‘ஜெய் சிறீராம்’ என்பதற்குப் பதில் ஒடிசா கடவுளான ‘ஜெய் ஜெகன்னாத்’ கோஷத்திற்கு மாறினார்!
இராமனை அயோத்தி தொகுதி மக்கள் மட்டும் கைவிடவில்லை; பிரதமர் மோடியும்கூட கைவிட்டார்!
சம்பூகன் வெற்றியும், ராமன் தோல்வியும்!
‘‘சம்பூகன்கள்’’ வெற்றி – (பிரதமர் மோடியால்) இராமனது தோல்வி போல் ஆனது.
(அத்தோல்வி ஏன் என்பதற்குரிய தெளிவான விளக்கமும் சமூக ஊடகங்களில் வெளிவந்தது)
அதனால்தான் தனியே பா.ஜ.க. உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி, பிரதமர் வேட்பாளரை, தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, உட்கட்சிப் பிரச்சினை, ஆர்.எஸ்.எஸ்.க்குள்ள மன ஒதுக்கீடு வெளிப்படையாக – பனிப் போராகிய நிலையில், மெஜாரிட்டி எண்ணிக்கை, மற்ற சலசலப்பு – எதிர்குரல் ஏற்படக் கூடும் என்பதா? என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள, தெலுங்கு தேசம், அய்க்கிய ஜனதா தளம் கட்சியினரை விட்டே, முன்மொழிய வைத்து, மற்ற பா.ஜ.க. தலைவர்களை இணைத்து, வழிமொழிய வைத்தார் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன!
பா.ஜ.க.வின் இந்தத் தோல்விக்கு – போதிய பெரும்பான்மை கிடைக்காததற்குப் பிரதமர் மோடியின் அணுகுமுறையும், பிரச்சார முறையும்தான் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ்., மற்ற சில என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள கட்சிகளும் வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகின்றன!
எப்படி இருந்தபோதும், 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது!
அதில் பெரும்பான்மையான அனேகமாக முந்தைய பி.ஜே.பி. ஒன்றிய ஆட்சியில் யார் யார் அமைச்சர்களாக இருந்தார்களோ (பல அமைச்சர்கள் தோல்வியை தழுவியபோதும்கூட) – அப்படியே பழைய துறைகளையே அவர்களிடம் கொடுத்து, ‘பழைய சரக்கு, புதிய முத்திரை – லேபிளின்மூலம்’ என்றுதான் காட்டப்பட்டுள்ளது!
72 அமைச்சர்களுள் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு இடமில்லை!
72 பேர் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகூட இடம்பெறவில்லை.
இதை அவர்களது முக்கிய ஆதரவு கட்சிகளின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளம் – மற்றவை ஏற்றுக்கொள்ளுகின்றனவா? என்ற கேள்வி – விடை பெற முடியாத கேள்வியாக நிற்கிறது!
புதிய சட்ட அமைச்சர், ‘நாங்கள் பொது சிவில் சட்டத்தை அப்படியே அமலாக்குவோம்‘ என்று இப்போதே கூறுகிறார்!
மாநிலங்களுக்கிடையே நிதிப் பங்கீட்டில், இப்போது நாங்கள் புதிய ஆட்சியிலும் பாரபட்சம், ஓரவஞ்சனை காட்டுவோம் என்று பிரகடனப்படுத்தியே – ரூ.25,000 கோடியை உ.பி.,க்கும், தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.5700.44 கோடிதான். (இடையில் பெய்த மழை, புயலால் ஏற்பட்ட வெள்ள நிவாரணம்) மேலும் பல முக்கிய கோரிக்கைகள் எல்லாம் நீர் எழுத்துக்களாகி விட்டன.
இதன்மூலம் பெரிய மாற்றத்தை நாடோ, நாமோ எதிர்பார்த்து ஏமாந்துவிடக் கூடாது என்பதுதான் யதார்த்தமாகவே புலனாகிறது!
தமிழ்நாட்டில் 40–க்கு 40 என்ற நிலையால் ஏற்படும் பலன்!
‘‘40–க்கு 40 இடங்கள் பெற்றதனால், தமிழ்நாட்டில் என்ன பயன் விளையப் போகிறது’’ என்று பொறுப்பில்லாமல், தி.மு.க. கூட்டணியின் இந்த இமாலய வெற்றிச் சாதனையை மறைக்க விரும்பும் மன்னார்சாமிகளின் மண்டையில் ஓங்கி அடிப்பதுபோல, நம் முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ அரசின் வெற்றி நாயகர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
‘‘ஆளுங்கட்சிக்குக் கடிவாளம் போடுவதன்மூலம், பல கொள்கை கபளீகரங்களைத் தடுத்து நிறுத்துவோம்; ஜனநாயகப் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அது தெரியும்’’ என்றார்.
ஒன்றியத்தில் இளந்தலைவர் ராகுல் போன்றவர்கள் – எதிர்க்கட்சியாக உறுதிபட அவ்வப்போது மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டிட, சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியின் பணிகளின் தேவை – இனிமேல்தான் அதிகமாகும்!
மக்கள் ஆதரவைப் பெரிதாக்கி, இலட்சியப் போரில் வெல்லுவோம்!
தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் (மக்களவை – மாநிலங்களவை ஆகியவற்றில்) பல களங்களாகவும், தளங்களாகவும் கொண்டு, ஜனநாயகக் காப்புரிமைப் போரினை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் காத்திரத்துடன் நடத்திடவேண்டிய கடமைக்கே தேவை அதிகமாகிறது!
ஓநாய்கள் ‘சைவமாகி‘ விடும் என்று நம்பாமல், அவற்றின் வீச்சுக்கு, விஷமத்திற்கு இடம் தராத விழிப்புணர்வை அறவழியில், வாதாடவேண்டிய நேரத்தில் வாதாடி, போராடவேண்டிய காலங்களில் போராடியும், மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களின் பேராதரவு குன்றாது, நாளும் பெருகும் வண்ணம் ஒருங்கிணைந்து ஓரணியில் நின்று, ஓய்வறியா உழைப்பைத் தந்து வென்றிடுவோம். போர்க் களங்களில் பெறும் வெற்றியைவிட, இறுதி இலட்சியப் போரில் பெறும் வெற்றியே முக்கியம்! நிரந்தரமானது!!
அதை வலிமையுடன் செய்ய உறுதியேற்போம்!
சென்னை தலைவர்,
13.6.2024 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment