புதுடில்லி, ஜூன் 15 7 கட்டமாக நடைபெற்ற 18ஆவது மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4.6.2024 அன்று எண்ணப்பட்டன. வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என அனைத்தும் விதிகளின் கீழ் நேர்மையாக நடத்தப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் பெருமையாகக் கூறியது. ஆனால், 140–க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளின் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பூனம் அகர்வால் கூறியதாக “தி வயர்” செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் 2019 மக்களவைத் தேர்தலில், பதிவான இவிஎம் (வாக்குப் பதிவு இயந்திரம்) வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட இவிஎம் வாக்குகளுக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்தேன். 2019இல் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 இல் இந்த விவகாரம் உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதே போல 2024 மக்களவைத் தேர்தலிலும் இவிஎம் வாக்குகளில் பல்வேறு முரண்பாடான முடிவு களே அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான வாக்கு எண்ணிக்கை தரவை உன் னிப்பாக உற்றுநோக்கினால், கேரள மாநிலம் அட்டிங்கல், யூனியன் பிரதேசங்களான டாமன் & டையூ, லட்சத்தீவு உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் எண்ணப்பட்ட இவிஎம் வாக்குகளின் எண்ணிக்கைக்கும், பதிவான இவிஎம் வாக்குகளின் எண்ணிக்கைக்கும் மாறுபாடு உள்ளது. இந்த 3 தொகுதிகளைப் போன்று பெரும்பாலான தொகுதிகளில் பதிவான இவிஎம் வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. ஆனால் இதுபற்றி தேர்தல் ஆணையம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இந்த 3 தொகுதிகளை போன்று பெரும்பாலான தொகு திகளில் பதிவான வாக்குகளும் முழுமையாக எண்ணப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு சாதகம்!
140–க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதி களில் அதிக அல்லது உபரி வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டது ஏன்? என்பது குறித்தும், வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிக வாக்குகள் காணாமல் போனது எப்படி? என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. இது போக வாக்கு எண்ணிக்கை முரண்பாடு உள்ள தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
எடுத்துக்காட்டாக,
1. மகாராட்டிராவின் மும்பை வடமேற்கு பகுதியில் மொத்தம் 9,51,580 இவிஎம் வாக்குகள் பதிவாகிய நிலையில், 9,51,582 வாக்குகள் எண்ணப்பட்டன. அதாவது இரண்டு உபரி வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் ரவீந்திர தத்தாராம் வைகர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) வேட்பாளர் அமோல் கஜானனை வீழ்த்தினார்.
2. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதியில் 12,38,818 இவிஎம் வாக்குகள் பதிவாகின. ஆனால் 12,37,966 இவிஎம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்ட நிலையில், 852 வாக்குகள் எண்ணப்படவில்லை. பாஜகவின் ராவ் ராஜேந்திர சிங் 1,615 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
3. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மக்களவை தொகுதியில் 12,61,103 இவிஎம் வாக்குகள் பதிவாகின. ஆனால் 12,60,153 இவிஎம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டன. 950 வாக்குகள் எண்ணப்படாத நிலையில், பாஜகவின் பிரோஜ்ராஜ் நாக் வெறும் 1,884 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள் ளார்.
4. உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்கா பாத்தில் 10,32,244 இவிஎம் வாக்குகள் பதிவாகிய நிலையில், 10,31,784 இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டன. 460 வாக்குகள் எண்ணப்படாத நிலையில், பாஜகவின் முகேஷ் ராஜ்புத் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (2,678 வாக்குகள்) வெற்றி பெற்றார். இதுபோன்று பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகள் இடையே வித்தியாசம் உள்ள தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளது கடும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் நம்ப கத்தன்மை, நேர்மை உள்ளிட்ட விடயங்க ளிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment