தலையங்கம்
பொதுவுடைமை – பொதுவுரிமை
பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
‘குடிஅரசு’ 25.3.1944
கோயில் சாவியை வைத்து ஓர் அரசியலா?
அயோத்தியில் ராமர் கோயிலை வைத்து நடத்திய அரசியலை அடுத்து, ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயிலை வைத்து அரசியலை நடத்துகிறார் மோடி! இப்படிப் போகும் இடம் எல்லாம் ஒரு கோயிலை வைத்து அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு போய் விட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசியது இப்போது நாடு முழுவதும் பேசு பொருளாகி விட்டது.
ஒடிசா மாநிலத்தில் அய்.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த வி.கே. பாண்டியன்மீது அரசியல் ரீதியாகத் தாக்குதலை நடத்திய மோடி, அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆள்வதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதே கேள்வியை அமித்ஷாவும் கேட்டிருந்தார். இதன் இன்னொரு பகுதியாகத்தான் ஜெகன்நாதர் கோயில் கருவூல அறையின் சாவி இப்போது சர்ச்சையாகி உள்ளது.
உண்மையில் இந்த அறையில் என்ன உள்ளது? அதன் சாவி யாரிடம் உள்ளது? அந்தக் கோயிலில் கருவூல அறை என்று ஒன்று உள்ளதா? என்ற பல கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
“பூரி கெகன்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியைப் பற்றி வி.கே. பாண்டியனே விளக்கம் கொடுத்துள்ளார். சர்வ அதிகாரம் படைத்த ‘பிரதமர் மோடியே அந்தச் சாவியைக் கண்டுபிடித்துத் தரட்டும்’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.
மேலும், ‘அந்தக் கோயில் அறை கடந்த 40 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கின்றது. கடந்த 2018இல் ஒடிசா உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதற்காகக் கோயில் அறையைத் திறக்க முயன்ற போது சாவி கிடைக்கவில்லை. அதன் நிஜமான சாவிதான் இல்லை. ஆனால், அதன் நகல் சாவி இப்போது இருக்கிறது. அந்தச் சாவியை வைத்து அறையைத் திறக்கலாம் அல்லவா!
ஆனால், உயர்நீதிமன்ற அனுமதி இருந்தால் மட்டுமே அந்தச் சாவியை வைத்துத் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நிலைமை இப்படி உள்ள போது, பிரதமரே அவதூறாகப் பேசுவது நியாயமில்லை’ என்று பல விளக்கங்களை அளித்துள்ளார் பாண்டியன்.
இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிற ரகசிய கருவூல அறைக்குப் பெயர், “ரத்ன பண்டார்” அதில் மொத்தம் 7 அறைகள் உள்ளன. அதில் முதல் 2 அறைகள்தான் திறந்துள்ளன.
இந்த முதல் 2 அறைகள் எப்போது திறக்கப்பட்டது என்றால், 1964 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் 2 முறை திறக்கப்பட்டன. இதற்கு என்று ஒரு குழு உள்ளது. அவர்கள்தான் இந்த அறையைத் திறக்க முடியும்.
அந்தக் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு, பூரி ராஜா குடும்பத்தின் உறுப்பினர் இருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் உள்ளனர். மொத்தம் 16 பேரைக் கொண்ட குழு இது.
ஒடிசா மக்களின் நம்பிக்கை என்னவென்றால் – இந்த அறைகளைத் திறக்கவே கூடாது என்பதுதான் காரணமாம்! என்னே மூடநம்பிக்கை!
இதைப் போலவே ஜெகன்நாதர் கோயிலுக்கு இன்னொரு கருவூல அறையும் உள்ளது; அதற்குப் ‘பகாரா பண்டார்’ என்று பெயர். இதற்கு அடுத்து ‘பிகாரா பண்டார்’ என்று ஒரு அறை உள்ளது. இதை எல்லாம் தாண்டிப் போனால்தான் ‘ரத்ன பண்டார்’ கருவூல அறைக்குள் போக முடியும்.
முதலில் உள்ள 2 கருவூலங்களில் நிறைய ஆபரணங்கள், முத்துகள், வைரங்கள், வைடூரியங்கள், தங்கத் தகடுகள் எல்லாம் உள்ளன. அவை பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எல்லாம் தனிச் சட்டம் உள்ளது. ஒடிசா மாநிலம் உருவாவதற்கு முன்பே 1952இல் போடப்பட்ட சட்டம் இது!
இச்சட்டத்தின்படி ஒரு பதிவேடு உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அதில் கருவூல அறையில் உள்ளவை பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் அனைத்தும் பட்டவர்த்தனமாகப் பதிவாகி உள்ளன. இதில் மூடி மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. மேலும் நீதிபதிகள் கொண்ட குழு மேற் பார்வையில் தணிக்கை நடத்தப்பட்டு அதில் உள்ள நகைகள் பட்டியலிடப்பட்டு அனைவரது பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் பிரதமர் மோடி ஏன் அப்படிப் பேச வேண்டும்? ஏதோ மர்மம் இருக்கிறது என்று ஒரு திகிலைக் கிளப்பி, அதில் அரசியல் லாபக் குளிர் காய வேண்டும் என்ற மேஜிக் நிபுணர் அல்லவா மோடி?
பூரி கெஜபதி என்று சொல்லப்படும் ராஜாவுக்குத்தான் முதல் உரிமை. அடுத்து ஜெகன்நாதர் கோயில் நிர்வாகி பயன் படுத்தலாம். அடுத்து பண்டாரி எனச் சொல்லப்படுபவர் – இவர்கள் தான் கருவூல அறையின் சாவியைக் கையாள முடியும்.
அறையின் உண்மையான சாவி தொலைந்து போனது உண்மையே, அது இன்று நடந்தது அல்ல. சுதந்திரத்திற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகுதொலைந்துபோனது. கடுமையான சூறாவளியின் காரணமாக கோவில் பெட்டகங்கள் பாதிக்கப் பட்ட போது சாவியும் காணாமல் போனது. ஆனால் அதன் நகல் சாவி மூன்று பேரிடம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது.
இந்த சாவி விவகாரத்தை அந்த மக்களே பெரிதாக எடுத்துக்கொள்ளாத போது, தமிழரான பாண்டியன் மீதான பொறாமையின் வெளிப்பாடே தமிழர்களை திருடர்கள் என்று மோடி கூறியதாக கருதலாம்.
ஒரு பிரதமர் இவ்வளவுக் கீழிறக்கத்துக்குச் செல்லலாமா? வெள்ளத்தில் சிக்கிய ஆசாமிக்குத் துரும்பு கிடைத்தாலும் தூணாகத் தெரியும். தேர்தல் தோல்வி வெள்ளத்தில் தவிக்கிறார் மோடி.
No comments:
Post a Comment