பூமியைச் சுருட்ட முடியுமா? சித்திரபுத்திரன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

பூமியைச் சுருட்ட முடியுமா? சித்திரபுத்திரன்

உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம்.
பையன்: எனக்கு தெரியவில்லையே சார்.
உபாத்தியாயர் : ஆதிசேஷன் என் கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலை மேல் இருக்கின்றது. “பூமியை ஆதி சேஷன் தாங்குகிறான்” என்கின்ற பழ மொழிகூட நீ கேட்டதில்லையா மடையா?
பையன்: நான் கேட்டதில்லை சார். ஆனால் ஆதிசேஷன் என்கின்ற பெயர் மாத்திரம் ஒரு நாள் எங்கள் வீட்டில் ராமா யணம் படிக்கும் போது ஒரு சாஸ்திரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது ஆதி சேஷன் விஷ்ணுவின் படுக்கை என்றும், அந்த விஷ்ணு இராம அவதாரம் எடுத்த போது இந்த ஆதிசேஷன் லட்சு மணனாக அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக ஞாபகமிருக்கின்றது.
உபாத்தியாயர்: ஆமாம் அந்த ஆதி சேஷன் தான் பூமியைத் தாங்கிக் கொண்டி ருக்கிறான் தெரியுமா?
பையன்: இப்போது தெரிந்து கொண் டேன். ஆனால் ஒரு சந்தேகம் சார்…
உபாத்தியாயர்: என்ன சந்தேகம்? சீக்கிரம் சொல்.
பையன்: பூமியைத் தாங்கிக் கொண்டி ருக்கின்ற, ஆதிசேஷன் விஷ்ணுவுக்கு படுக்கையாய் வந்துவிட்டால் அப்போது பூமியை யார் தாங்குவார்கள்? தவிர லட்சு மணனாக உலகத்திற்கு வந்து விட்டபோது பூமியை ஆதிசேஷன் யார் தலையில் வைத்துவிட்டு வந்தார்? தயவு செய்து சொல்லுங்க சார்.
உபாத்தியார்: நீ என்ன ‘குடிஅரசு’ படிக் கிறாயோ! அது தான் அதிகப் பிரசங்கமான கேள்விகளை கேட்கின்றாய். பொறு! உனக்கு இந்த பரீட்சையில் சைபர் போடுகின்றேன்.
பையன் : இல்லவே இல்ல சார், நான் சத்தியமாய் குடி அரசைப் படிப்பதே இல்லை சார். ராமாயணம்தான் சார் கேட்டேன். தாங்கள் சொல்வதிலிருந்தே எனக்கு இந்த சந்தேகம் தோன்றிற்று சார்.
உபாத்தியார்: ஆதிசேஷன் தெய்வத் தன்மை பொருந்தியவன். ஒரே காலத்தில் பல வேலை செய்யக்கூடிய சக்தி அவனுக்கு உண்டு. அவன் பூமியையும் தாங்குவான். விஷ்ணுவுக்கு படுக்கையாகவு மிருப்பான். விஷ்ணு ராமனாக உலகத் திற்குப் போகும் போது லட்சுமணனாக கூடவும் போவான். தெரியுமா?
பையன் : இப்ப தெரிந்தது சார். ஆனால் ஒரு சின்ன சந்தேகம் சார். அது மாத்திரம் சொல்லிப் போங்கள் இனி நான் ஒன்றும் கேட்பதில்லை.
உபாத்தியார் : என்ன சொல் பார்ப்போம்.
பையன்: பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் சரி, அதை நான் ஒப்புக் கொள்ளு கின்றேன். அப்புறம் தாங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது சார். எனக்கு நிஜமாலும் தெரியவில்லை சார்.
உபாத்தியார் : என்ன சங்கதி சொல்லு; நான் கோபிக்கிறதில்லை.
பையன் மறுபடியும்: பூமியை ஆதி சேஷன் தாங்குகின்றான் சார் (தலையை சொரிந்து கொண்டு) ஆதிசேஷனை யார் தாங்கறாங்க சார்? அவர் எதன் மேலிருந்து கொண்டு தாங்கறாங்க சார். அதை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதும் சார். அப்புறம் ஒரு சந்தேகமும் இப் போதைக்கு இல்லை சார்.
உபாத்தியார்: போக்கிரிப்பயலே நீ ‘குடிஅரசு’ படிக்கிறாய் என்பது இப்போது எனக்கு உறுதியாச்சுது. பொறு, பொறு, பேசிக்கொள்கிறேன். வாயை மூடிக் கொண்டு போய் உட்கார், அதிகப்பிரசிங்கிப் பயலே!
பையன்: பேசாமல் உட்கார்ந்து கொண் டான். உபாத்தியாயரும் எஸ்.எஸ்.எல்.சி பரீட்சைக்கு அவனை அனுப்பவில்லை. இதைப் பற்றி கேள்வி கேட்பாரும் இல்லை. பள்ளிக்கூட மேனேஜரையும் வாத்தியார் சரிப்படுத்திக் கொண்டார்.

– குடிஅரசு –
கற்பனை உரையாடல் – 08.04.1928

No comments:

Post a Comment