சென்னை, மே 29- விடுதியில் லேப்டாப்பிற்கு, ‘சார்ஜ்’ போடும் போது, மின்சாரம் தாக்கியதில், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் சரணிதா, 32. இவருக்கும், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் உதயகுமார் என்பவருக்கும், 2016இல் திருமணமானது. எம்.டி., மருத்துவப் படிப்பின் இறுதியாண்டை முடித்த சரணிதா, அயனாவரத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், 25 நாட்கள் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
26.5.2024 அன்று காலை, 10:00 மணிக்கு, உணவு அருந்தி விட்டு விடுதி அறையில் இருந்தார். மதியம் கணவர் உதயகுமார், மனைவிக்கு பல முறை கைபேசியில் அழைத்தும் அவர் எடுக்காமல் இருந்துள்ளார். சந்தேகமடைந்த உதய குமார், விடுதியின் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சரணிதாவை அழைக்குமாறு கூறி யுள்ளார். அப்போது, சரணிதா அறைக்கு சென்ற ஊழியர்கள், பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு, ‘லேப்டாப்’ சார்ஜர் ஒயரை பிடித்தபடி, சரணிதா கீழே கிடந்தார். உடலில் உயிர் இல்லை, அவர் கை கருகியிருந்தது. தகவலறிந்து வந்த அயனாவரம் காவல்துறையினர், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில், லேப்டாப்புக்கு சார்ஜர் போடும் போது, மின்சாரம் தாக்கியதில் சரணிதா உயிரிழந்தது தெரிவந்தது. இதுகுறித்து, அயனாவரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment