உங்களையெல்லாம் சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்! நாகராஜ் - விஜயகுமாரி குடும்பம் முழுக்க முழுக்க கருப்புச் சட்டை அணிந்து இயக்கக் கொள்கைப்படி நடக்கக்கூடிய குடும்பமாகும்! பிரபாகரன் - மணிமேகலை வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

உங்களையெல்லாம் சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்! நாகராஜ் - விஜயகுமாரி குடும்பம் முழுக்க முழுக்க கருப்புச் சட்டை அணிந்து இயக்கக் கொள்கைப்படி நடக்கக்கூடிய குடும்பமாகும்! பிரபாகரன் - மணிமேகலை வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!

சென்னை, மே 26 உங்களையெல்லாம் சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்! நாகராஜ் – விஜய குமாரி குடும்பம் முழுக்க முழுக்க கருப்புச் சட்டை அணிந்து இயக்கக் கொள்கைப்படி நடக்கக்கூடிய குடும்பமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .
கடந்த 28.1.2024 அன்று சென்னை மதுரவாயல் சிறீகணேஷ் மகாலில் பிரபாகரன் – மணிமேகலை வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:

நாகராஜ் – விஜயகுமாரி
இல்ல மணவிழா
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய அன்புச் செல்வர்கள் பிரவீன் என்கின்ற பிரபாகரன் – மணிமேகலை ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்கின்ற இயக்க செயல்வீரர்களாக இருக்கக்கூடிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களே, செய்யாறு மாவட்டத் தலைவர் மானமிகு தோழர் இளங்கோவன் அவர்களே, செய்யாறு நகரத் தலைவர் தோழர் காமராஜ் அவர்களே, மதுரவாயல் பகுதி தலைவர் தோழர் வேலுசாமி அவர்களே, தலை மைக் கழக அமைப்பாளர்களில் ஒருவரான பன்னீர் செல்வம் அவர்களே, மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவரும், கழகத்தினுடைய புரவலர்களில் ஒருவருமான வேல்.சோ.நெடுமாறன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற செய் யாறு மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர் அவர்களே, ஆவடி மாவட்டத் தலைவர் கார்வேந்தன் அவர்களே,
காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தென்னரசு அவர்களே, ஆவடி மாவட்டச் செயலாளர் இளவரசன் அவர்களே, மகளிரணியைச் சார்ந்த செல்வி பெரியார் மாணாக்கன் அவர்களே,
அருமைத் தோழர் வெங்கட்ராமன் அவர்களே, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் அவர்களே, இந்நிகழ்வில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய பனிமலர் நாகராஜ் அவர்களே,
மற்றும் சிறப்பாக இங்கே குழுமியுள்ள அருமை இயக்கத் தோழர்களே, அனைத்து இயக்கப் பொறுப் பாளர்களே, இயக்கத்திற்கு அப்பாற்பட்ட சான்றோர் பெருமக்களே! மணமக்களை வாழ்த்த வரவிருக்கின்ற முக்கிய தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குடும்பத்தினுடைய மணவிழாவிற்கு அருமைத் தோழர்கள் நாகராஜ் அவர்களும், அவரு டைய வாழ்விணையர் அன்புத்தோழியர் விஜயகுமாரி அவர்களும் அழைத்த நேரத்தில், நான் தலைமைக் கழகத்தினரிடம் இந்த மணவிழாவிற்குத் தேதி கொடுங்கள் என்று சொன்னேன்.
இங்கே வரவேற்புரையாற்றிய இளங்கோ அவர்கள் சொன்னதைப்போல, அருமை நண்பர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்கள் சொன்னதைச் சுட்டிக்காட்டி யதைப்போல, நண்பர் நாகராஜ் அவர்களும், அவரு டைய வாழ்விணையர் விஜயகுமாரி அவர்களும், இந்த இயக்கத்தினுடைய அருமைச் செல்வங்களிலே ஒருவர் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களையெல்லாம் சந்திப்பதில்
எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்!
எனக்குப் பல்வேறு பணிகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி இம்மணவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று இங்கே வந்த தற்குக் காரணம் – ஏதோ சடங்கு, சம்பிரதாயமாக, அழைத்தார்கள், மணவிழாவிற்குத் தலைமை தாங்கி நடத்தினோம் என்று இல்லாமல், இது நம்முடைய குடும்பம்; இது ஒரு கொள்கைக் குடும்பம் என்ற முறையில், இம்மண விழாவினை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உங்களையெல்லாம் சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
நாகராஜ் அவர்களிடம் எந்தப் பணியைக் கொடுத்தாலும் சிறப்பாகச் செய்யக்கூடியவர். சேத்பட்டில் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இருந்த காலத்திலும் சரி, அதேபோல, அவருடைய வாழ்விணையர் அருமைச் சகோதரியாரும் சரி, எல்லோருமே கொள்கைப் பூர்வமாக வாழக் கூடியவர்கள்.

மணமக்கள்: பிரபாகரன் – மணிமேகலை
மணமகன் பிரபாகரன் அவர்கள் பொறியாளர். அதே போல, மணமகள் மணிமேகலை பி.காம் படித்திருக்கிறார்.
நாகராஜ் – விஜயகுமாரி ஆகியோருடைய கொள்கை வாழ்க்கையைவிட, இன்னும் ஒருபடி மேலே போயிருக்கிறார்கள் கொள்கையில் – இங்கே இருக்கின்ற மணமக்கள்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்று வள்ளுவர் சொல்வார்.
பிள்ளைகள் எப்படி இருக்கவேண்டும் என்று சொன் னால், தம்மைவிட, தம் பிள்ளைகள் அறிவாகவும், தெளி வாகவும் இருக்கவேண்டும். அதன்படி அவர்களைவிட, பேரப் பிள்ளைகள் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

நமது பேரன்கள்தான் குமரகுருபரர்கள்!
இன்று கைப்பேசி இல்லாதவர்களே இல்லை. கைப்பேசியில் அழைப்பு வந்தால் பேசுவதும் அல்லது யாரிடமாவது நாம் பேசுவதற்கும்தான் சிலர் பயன்படுத்து வார்கள். அதில் உள்ள பல பயன்களைப்பற்றி அறிந் திருக்கமாட்டோம். ஆனால், நம்முடைய பேரப் பிள்ளை கள் அதனையெல்லாம் அறிந்திருப்பார்கள். நமக்குத் தெரியவில்லை என்றால் உடனே அவர்கள், ‘‘தாத்தா, என்னிடம் கொடுங்கள்” என்று சொல்லி, அதனை செய் வார்கள். ஏனென்றால், அவர்கள் ‘‘குமரகுருபரர்கள்” ஆவார்கள்.
அதுபோன்று, ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை” என்று சொல்லக்கூடிய வகையில் திகழக்கூடிய நம்முடைய மணமக்களாகிய பிரபாகரன் – மணிமேகலை ஆகியோரைப் பாராட்டுகிறேன்.
அதைவிட இன்னும் அதிகமான பாராட்டுதலுக்குரிய வர்கள் யார் என்று சொன்னால், நம்முடைய நாகராஜ் – விஜயகுமாரி ஆகியோருடைய சம்பந்தியாக இருக்கக்கூடிய குடும்பத்தவர்களைத்தான்.

முழுக்க முழுக்க கருப்புச் சட்டை அணிந்து இயக்கக் கொள்கைப்படி நடக்கக்கூடிய குடும்பமாகும்!
ஏனென்றால், இம்மண முறையில் மணவிழா வினை நடத்துவது ஒன்றும் ஒரு பெரிய அதிசய மில்லை. எப்படி இருந்தாலும் இந்தக் குடும்பத்து இல்ல மணவிழாவினை நான்தான் நடத்தி வைப்பேன். வேல்.சோமசுந்தரம், செய்யாறு
பா.அருணாசலம் போன்றவர்கள் இந்தக் குடும்ப நிகழ்வுகளுக்கு வந்திருக்கிறார்கள்; முழுக்க முழுக்க கருப்புச் சட்டை அணிந்து இயக்கக் கொள்கைப்படி நடக்கக்கூடிய குடும்பமாகும்.
ஆனால், காதல் திருமணத்தை, ஜாதி மறுப்புத் திருமணத்தை ஒப்புக்கொண்டு, சங்கடமில்லாமல், மகிழ்ச்சியோடு இங்கே மணமகனின் பெற்றோர் அமர்ந்திருக்கிறார்கள் பாருங்கள், அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். ஏனென் றால், இந்தக் குடும்பத்திற்கு உரியவன் நான்.

தமிழரசன் – சிவகாமி அம்மையாரைப் பாராட்டுகிறோம்!
பெரியாருடைய பெருங்குடும்பம் நாடு தழுவிய அளவில் இருக்கிறது; உலகம் தழுவிய அளவில் இருக் கிறது. ஆகவே, அப்பேர்ப்பட்ட அய்யா தமிழரசன் – சிவகாமி அம்மையார் ஆகியோரைப் பாராட்டுகிறேன்.
இங்கே இருக்கக்கூடிய மணமக்கள் ஒருவருக்கொரு வர் தங்களைப் புரிந்துகொண்டவர்கள். இரண்டு பேருமே படித்தவர்கள்.
பெரியார் என்ன செய்தார்?
திராவிடர் கழகம் என்ன செய்தது? என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.
இதுபோன்ற கேள்விகளுக்குப் பொதுக்கூட்டங் களுக்கு வந்து விளக்கம் கேட்கின்ற வாய்ப்பு உங்களில் சிலருக்கு இருக்காது. ஆகவே, அதற்கான விளக்கத்தை இம்மணவிழாவில் சொல்கிறேன்.

பெரியார் என்ன செய்தார்?
பெரியார் என்ன செய்தார் என்றால், இங்கே இருக் கின்ற மணமக்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.
மணமகள் – மணமகன் ஆகியோரை அருமையாகப் படிக்க வைத்திருக்கிறார்கள் மணமக்களின் பெற்றோர்.
இன்னுங்கேட்டால், நாகராஜனைவிட, விஜயகுமாரி அம்மையார் அதிகம் படித்தவர். இதைச் சொல்வதினால், அவர்களுக்கிடையே சண்டை ஏதும் வராது. அது பெருமைதான் நாகராஜ் அவர்களுக்கு.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல் வார்கள். சுயமரியாதை பல்கலைக் கழகம் போன்றது இந்தக் குடும்பம்.
விஜயகுமாரி அம்மையார் அவர்கள், சர்வீஸ் கமிசன் தேர்வுக்காக நிறைய பேருக்கு பயிற்சி கொடுத்தவர். அதனால்தான், விஜயகுமாரி அம்மையார் அவர்கள் என் மனதில் பதிந்தவர்.
அதேபோன்று, நாகராஜ் அவர்கள், கழகத் தலைமை என்ன நினைக்கிறதோ, அதனை உடனே செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர்.
மணமகளான மணிமேகலை அவர்கள், படித்து தகுதியான ஒரு பொறுப்பில் இருக்கிறார்.
இவையெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார் காலத்திற்கு முன்பு, திராவிட இயக்கம் என்று சொல்லக்கூடிய நீதிக்கட்சி வருவதற்கு முன்பு, இந்த வாய்ப்புகள் இருக்குமா? என்பதை நினைத்துப் பாருங்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு….
இங்கே ஆண்கள் எல்லாம் நின்று கொண்டிருக் கிறீர்கள்; பெண்கள் எல்லாம் நாற்காலியில் அமர்ந் திருக்கின்ற காட்சியைப் பார்க்கிறேன்.
இதுபோன்று, நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் நாற்காலியில் அமர்ந்திருப்பதையும், ஆண்கள் நிற்கின்ற காட்சியையும் பார்த்திருக்க முடியுமா? என்றால், நிச்சய மாக இல்லை என்பதுதான் பதில்.
அப்படியே ஆண்களை நிற்க வைத்து, பெண்கள் நாற்காலியில் அமர்ந்திருந்தால், என்ன சொல்வார்கள் தெரியுமா?
‘‘இந்தப் பொம்பளைக்கு எவ்வளவு திமிரு பாருங்கள்; நாற்காலியில் உட்கார்ந்திருக்கா?” என்று சொல்வார்கள்.
இன்றைக்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. முதலில் அமருவதற்கு யாருக்கு நாற்காலி கொடுக்கவேண்டும் என்றால், பெண்களுக்குத்தான். அதுதான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நடைபெறுகிறது.

திராவிட இயக்கம் செய்த சாதனை!
பெண்களுக்குப் படிப்பு – பெண்களுக்கு சலுகை – பெண்களுக்கு வாய்ப்பு – பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு – எங்கே பார்த்தாலும், மேயராக பெண்கள் – நகராட்சித் தலைவர்களாக பெண்கள் – சட்டமன்ற உறுப்பினர்களாக பெண் கள் இருக்கிறார்கள்.
நூறாண்டுக்கு முன்பாக, திராவிட இயக்கம் தொடங்குவதற்கு முன்பாக இதுபோன்ற நிலை இருக்குமா? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இதுதான் திராவிட இயக்கம் செய்த சாதனை!
ஒரு துளி ரத்தம் சிந்தாமல், யாரையும் வதைக் காமல், எந்த சண்டையும் போடாமல், எந்த ஆயுதத் தையும் தூக்காமல் – அறிவாயுதத்தை மட்டுமே வைத்து, மக்களிடத்தில் திரும்பத் திரும்ப சொல்லி, சுயமரியாதைத் திருமண முறை செல்லும் என்றாக்கினார்கள்.

மக்கள் மன்றமா? நீதிமன்றமா? என்று கேட்டால், இறுதியில் வெல்லப்போவது மக்கள் மன்றம்தான்!
சுயமரியாதைத் திருமண முறை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அன்றைக்குச் சொன்னது. அன்றைக்குச் சொல்ல ஆரம்பித்த நீதிமன்றம், இன்றுவரையில், அதனை சொல்லி வருகிறது. நாங்கள், நீதிமன்றத்தோடு போராட்டம் நடத்தியவாறு உள்ளோம். மக்கள் மன்றமா? நீதிமன்றமா? என்று கேட்டால், இறுதியில் வெல்லப் போவது மக்கள் மன்றம்தான்.
மக்களுக்காகத்தான் நீதிமன்றம்; மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல.
காலுக்காகத்தான் செருப்பு; தலைக்காகத்தான் குல்லா; குல்லாவிற்காக தலையை மாற்ற முடியாது.
எனவே, இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அடைகி றேன்.

இந்த மண விழாவில் என்ன மாற்றம்?
மணமகன் – மணமகள் – இதில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனால், நம்முடைய நாட்டில், பெண்கள் படிக்கக் கூடாது; பெண்கள் எந்த நிகழ்விலும் முன்னிற்கக் கூடாது. பின்னால்தான் இருக்கவேண்டும். அவர்கள் பக்குவமடைந்த பிறகு, வெளிச்சத்தையே பார்க்கக்கூடாது என்றெல்லாம் முன்பு சொன்னார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 10, 12 ஆம் வகுப்புகளில் பெண்களே அதிகம் தேர்ச்சி பெறுகிறார்கள்!
இன்றைக்கு, பெண்கள் எல்லாம் நிறைய படித்திருக் கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பிலும் சரி, பனிரெண்டாம் வகுப்பிலும் சரி தேர்வு முடிவுகள் வெளிவரும்பொழுது, பெண்கள்தான் அதிக அளவில் தேர்ச்சியும், அதிக மதிப்பெண்களும் பெறுகிறார்கள்.
அதேபோன்று இந்த மணவிழாவில் நன்றியுரை கூறவிருக்கக் கூடிய பனிமலர் அவர்கள் எம்.எஸ்சி., படித்திருக்கிறார். பெரியார் பிறந்திருக்காவிட்டால், இந்நிலை ஏற்பட்டிருக்குமா?
இந்தக் குடும்பத்தில், இரண்டாவது தலைமுறை அல்லது மூன்றாவது தலைமுறைதான். சிறிது நேரத்திற்கு முன்பாக, சின்னக் குழந்தைகள் எல்லாம் என் பக்கத்தில் அமர்ந்து ஒளிப்படம் எடுத்தார்கள்.
அப்பொழுது நான் கேட்டேன், ‘‘ஏம்மா, என்ன படிக்கிறாய்?” என்று.
‘‘பர்ஸ்ட் ஸ்டேண்டர்டு” என்று பதில் சொன்னது.
‘‘எதிர்காலத்தில் என்னவாக ஆகப் போகிறாய்? என்று கேட்டேன்.
‘‘டாக்டராகப் போகிறேன்” என்று பதில் சொன்னது.
இதுபோன்ற சிந்தனை நூறு ஆண்டுகளுக்கு முன் நம்மில் யாருக்காவது வந்திருக்குமா? இதுபோன்ற பதில் சொல்லக்கூடிய பக்குவம் வந்திருக்குமா? அதுதான் திராவிட இயக்கமும், தந்தை பெரியாரும் செய்தது.

ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றதோ, அந்த உரிமைகள் எல்லாம் பெண்களுக்கும் கொடுக்கவேண்டும்!
நம்முடைய பெண்களை பிள்ளைகளை நல்ல அளவிற்குப் படிக்க வைக்கவேண்டும்; ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றதோ, அந்த உரி மைகள் எல்லாம் பெண்களுக்கும் கொடுக்கவேண்டும்.
திராவிட இயக்க ஆட்சியினால்தான், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை என்பது சட்டமானது. அதே போன்று படிப்புரிமை, உத்தியோக உரிமையெல்லாம் இருக்கின்றன.
விஜயகுமாரி அம்மையார் அவர்கள், தலைமை ஆசிரியராக ஆகி, தன்னுடைய பிள்ளைகளை மட்டு மல்ல, ஏராளமான பிள்ளைகளைத் தயார் செய்து, ஒவ் வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்ற பணியை செய்துகொண்டிருக்கின்றார்.
சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு!

இந்த மணமக்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வாழ்வார்கள். ஏனென்றால், சுயமரியாதை வாழ்வு என்பது சுகவாழ்வாகும்.
தந்தை பெரியார் அவர்கள் ஒன்றைத் தெளிவாகச் சொல்வார். நல்ல குடும்பமாக வாழ்க்கை முறை இருப்பதற்கு வேறு ஒன்றும் செய்யவேண்டாம்; சுயமரியாதை வாழ்க்கை என்பது என்ன? வரவுக்கு உட்பட்டு செலவழிக்கவேண்டும். கடன் வாங்கவேண்டிய அவசியமே இல்லை. கடன் வாங்கினால், அவர்கள் சுயமரியாதையோடு இருக்க முடியாது. ஏனென்றால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது; கடன் கொடுத்தவரைப் பார்த்தால், தலைகுனிந்து நிற்கவேண்டும். அதனால், வரவுக்கு உட்பட்டு செலவழிக்கவேண்டும் என்று சொல்வார்.
மூடநம்பிக்கை இல்லாத வாழ்க்கை சுயமரியாதை வாழ்க்கையாகும்.

மூடநம்பிக்கை இல்லாத வாழ்க்கை என்றால் என்ன?
தன்னம்பிக்கை இருக்கின்ற வாழ்க்கையாகும்.
ஆகவே, திட்டமிட்டு வாழவேண்டும் மணமக்கள். பெற்றோர்களுக்குக்கூட இவர்கள் மாப்பிள்ளை, பெண் பார்க்கும் பணியைக் கொடுக்கவில்லை. இவர்களே ஒருவருக்கொருவர் பார்த்து முடிவு செய்தார்கள்; பெற்றோரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
இன்றைக்கு இரண்டு பேரும் எந்த உணர்வோடு இருக்கிறீர்களோ, அதே உணர்வோடு வாழ்க்கை முழுவதும் இருக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
மணமக்களுக்கு அறிவுரையல்ல – வேண்டுகோள்தான்!
நான் பொதுவாகவே, மணமக்களுக்கு அறிவுரை சொல்வதில்லை. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள் அறிவுரையைக் கேட்பதற்குத் தயாராகவும் இல்லை; அது இன்றைக்கு வேண்டியதுமில்லை.
சில வேண்டுகோளை மட்டும் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
அன்பார்ந்த மணமக்களே, உங்களது பெற்றோர் உங்களை இந்த அளவிற்கு நல்ல நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
வாழ்க்கையில் எவ்வளவுதான் நீங்கள் உயர்ந்தாலும், பெற்றோரிடம் பாசம் காட்ட மறக்காதீர்கள். நன்றி காட்ட மறக்காதீர்கள்; மரியாதை காட்ட மறக்காதீர்கள்.
உங்களுக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள். தன்முனைப்பு இல்லாமல் வாழுங்கள்.
தேர்தலுக்கும், வாழ்க்கைக்கும், விளையாட்டுக்கும் ஒரு வேறுபாடு உண்டு.
தேர்தலிலும், விளையாட்டிலும் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்குத்தான் பதக்கம், பதவிகள் கிடைக்கும்.
ஆனால், வாழ்க்கையில் யார் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெற்றவர்களாவார்கள் என்பதை நன்றாக நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
கணவன் எஜமானன் – மனைவி அடிமை என்பது கிடையாது. இரண்டு பேருமே உற்ற தோழர்கள் என்பதுதான் பெரியாருடைய தத்துவமாகும்.
அண்ணா சொன்ன வரிகளை
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
அறிஞர் அண்ணா சொன்னார், ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை” என்று.
வாழ்க்கையில் நீங்கள் இந்த வரிகளை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அப்படி நினைவில் வைத்துக்கொண்டீர்களோயானால், உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.
ஆகவே, மணமக்களாக இருக்கக்கூடிய தோழர்களுக்கும், சிறப்பாக மணவிழாவினை ஏற்பாடு செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, மணமக்கள் வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சியினை உறுதிமொழி கூறி, நம் அனைவர் முன்னிலையிலும் நடத்திக் கொள்வார்கள்.
வாழ்க பெரியார்!
வாழ்க மணமக்கள்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

No comments:

Post a Comment