* நீட்சே
மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர். புனே நகரில் காலை நடைப் பயிற்சியில் இருந்தபொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பித்தனர். இந்தக் கொலை நடந்தது 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் நாள்; விசாரணையில் பல்வேறு திருப்பங்கள், உயர்நிலை நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்களின்படி நடைபெற்ற வழக்கில் 2024-ஆம் ஆண்டு மே திங்கள் 10-ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities [Prevention Act]) படியான சிறப்பு நீதிமன்றத்தில் ஏறக்குறைய பத்தாண்டு களுக்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அய்ந்து நபர்கள்:
1) சச்சின் அண்ட்யூர்
2) சரத் கலாஸ்கர்
3) வீரேந்திர சிங் தவாடே
4) சஞ்சீவ் புனேல்கர்
5) விக்ரம் பாவே
இவர்கள் அய்வரும் கோவா நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ஸநாதன் சன்ஸ்தா (Sanathan Sanstha) அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
“குற்றத்தைப் பார்க்கும் முன் குற்றப்பின்னணியைப் பார்க்க வேண்டும்; ஒருவன் ஒரு கொலை செய்தால் கொலைக்கான நோக்கத்தைப் பார்க்க வேண்டும்.
ஒருவனே பல கொலைகள் செய்தால் கொலை செய்தவனையே ஆராய வேண்டும்” என்பது குற்றவியலின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று. தபோல்கரை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்ந்து பின்னர் நடைபெற்ற பல கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தபோல்கரை அடுத்து, கோவிந்த் பன்சாரே (2015), எம்.எம்.கல்புர்கி (2015), கவுரி லங்கேஷ் (2017) ஆகியோர் அந்த முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். தபோல்கர் மராட்டிய மாநிலம் புனே நகரிலும், கோவிந்த் பன்சாரே கோல்காபூர் நகரிலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கருநாடக மாநிலம் தார்வாட் நகரில் எம்.எம்.கல்புர்கியும், பெங்களூரு நகரில் கவுரி லங்கேஷூம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தொடர் கொலை களுக்கு கொலை செய்தவர்களையும் தாண்டி கொலையினை நடத்தச் சொன்ன ஒருவர் அல்லது ஒரு அமைப்பு இருக்கிறது என்பது அய்ந்து கொலை களின் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீர்ப்பு
தபோல்கர் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முதல் இருவரான சச்சின் அண்ட்யூர் மற்றும் சரத் கலாஸ்கர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூபாய் 5 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வீரேந்திர சிங் தவாடே, சஞ்சீவ் புனேல்கர் மற்றும் விக்ரம் பாவே ஆகிய மூவரும் குற்றத்திலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர்.
தபோல்கரின் கொலை குறித்து புலன் விசாரணை தொடக்கத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து, பின்னர் சி.பி.அய் வசம் ஒப்படைக்கப்பட்டது. கொலைக்குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வீரேந்திர சிங் தவாடேதான் கொலைக்கான மாஸ்டர் மைண்ட் – ஆக (மூளையாக) இருந்துள்ளார் என்று புனே காவல்துறையும், சி.பி.அய்யும் தங்களது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
தவாடே ஒரு ணிழிஜி மருத்துவர்; ஸநாதன் சன்ஸ்தா அமைப்பின் கிளையான ஹிந்து ஜன் ஜாக்ருதி சமிதி அமைப்பின் மூத்த பொறுப்பாளர் ஆவார். 2004-ஆம் ஆண்டில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு தபோல்கர் சென்றிருந்த பொழுது அவருடன் தவாடே வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பதாக அரசு தரப்பு சாட்சி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சாட்சி, தபோல்கர் கொலை செய்யப்படுவதற்கு சில நாள்கள் முன்பு தனக்கு ஒரு கைத்துப்பாக்கி செய்து தருமாறு தவாடே கேட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி கொலையில் தவாடேவின் பங்கு குற்றப் பத்திரிகையிலும், வாக்குமூலத்திலும் குறிப்பிடப்பட் டிருந்த பொழுதிலும் சி.பி.அய். அமைப்பானது அதை, முறையாக நிரூபிக்கத் தவறிவிட்டது. இதுபற்றி பொதுவெளியிலும், பத்திரிகைச் செய்திகள் குறிப்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ ஏஜ் ஏடுகளில் பின்னர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதியே தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இவர் (தவாடே) மீது சந்தேகம் கொள்ள பெரும் வாய்ப்பு (lot of scope for suspicion) இருந்தும், குற்றம் சுமத்திய அரசு தரப்பானது ஆதாரங்களை நிரூபிக்கத் தவறிவிட்டது (the prosecution has failed to provide evidence for it) விடுவிக்கப்பட்ட மற்ற இருவரைப் பற்றியும் தீர்ப்பில் “உறுதியாக அவர்கள் மீது சந்தேகம் உள்ளது” (there is definitely suspicion) மேலும் “ஆனால் போதிய சாட்சியங்களை காட்டாத கார ணத்தால் விடுவிக்கப்படுகின்றனர்” (but due to lack of evidence they are being acquitted) எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை ஒரு நிலையில் விசாரித்து வந்த சி.பி.அய், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் கூறுகையில்,
“எதிர்ப்பாளர்களையும், ஸநாதன சன்ஸ்தா-வின் கொள்கை, வழக்கம் நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ளவர்களையும் தீர்த்துக் கட்டுவதுதான் தவாடே யின் திட்டம். தபோல்கரை கொலை செய்திட துப் பாக்கியை வாடகைக்கு வாங்கி தமக்கும், தபோல்கருக் குமிடையிலான கருத்து வேறுபாடுகளுக்காகவே பழி தீர்த்தது தவாடே தான்”.
மேலும் சி.பி.அய். வாதிடுகையில்,
“தவாடேயும் அவரது கூட்டாளிகளும், ஹிந்து எதிப்பாளர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஸநாதன் சன்ஸ்தா அமைப்பின் புனித நூலான ‘சாத்திரா தத்ம ஸநாதனா’ உபதேசங்களை கடைப் பிடிப்பவர்களாக இருந்துள்ளனர்” என்றும் குறிப் பிட்டது.
“ஸநாதன் சன்ஸ்தா – ஹிந்து ஜன் ஜாக்ருதி சமிதி அமைப்பினரும் கொலைக் குற்றம் சுமத்தப் பட்டவர்களும் தாம் விரும்பிடாத, சகித்திட இயலாத எந்தச் செயலுக்கும் கொடூரமான முடிவின் மூலம் வழி தேடுபவர்களாக இருக்கின்றனர். நாட்டில், மக்க ளிடையே அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை விளைவிப்பதில் தேவைக்கு அதிகமாகவே செயல் பட்டுள்ளனர். சமூகத்தில் ஒருவித பயங்கரவாதப் போக்கினை விளைவிப்பவர்களாகவும் இருந் துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபரும் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டவருமான புனேல்கர் ஒரு வழக்குரைஞர். 2008-ஆம் ஆண்டு தானே மற்றும் பனாவல் ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு வழக்குகளில் ஹிந்து அடிப்படைவாதிகள் சார்பில் வாதிட்டவர். 2017-இல் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்ற பிறகு துப்பாக்கியை அருகில் இருந்த ஒரு ஓடையில் எறிந்து வருமாறு புனேல்கர் அறிவுறுத் தியதாக அந்தக் கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவரது உதவியாளர் பாவே (அய்ந்தாவதாக குற்றம் சாட்டப்பட்டவர்) தபோல்கர் கொலையாளிகளுடன் இருந்துள்ளார். தபோல்கர் கொல்லப்பட்ட தெரு மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாக இருந்தும் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்கள் சார்ந்த ஆதாரங்கள் எதுவும் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவேயில்லை.
மந்தமாக இருந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டது
2013-இல் நிகழ்ந்த தபோல்கரின் கொலை – அதை அடுத்து கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைக் குற்றங்கள் நிகழ்ந்த பின்னர்தான் ஸநாதன் சன்ஸ்தா ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ள நிலை தெரியவந்தது. கருநாடகத்தில் நிகழ்ந்த இரண்டு கொலை நிகழ்வுகளின் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. சித்தராமையா முதலமைச்சராக இருந்தபொழுது விசாரணை தொடங்கியது. கருநாடக அரசின் முனைப்பில் 2016-ஆம் ஆண்டில் பதிவிடப்பட்ட வழக்கு காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் தான் தீவிர விசாரணைக்கு வந்தது. இடையில் தபோல்கர், பன்சாரே குடும்பத்தினர் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை முடுக்கி விடக் கோரி மனு செய்திருந்த நிலையில் விசாரணைக்கான ஏடிஎஸ் (ATS [Anti Terrorist Squad]) அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்றது.
கொலையாளிகளின் சார்பாக வாதிட்ட வழக் குரைஞர், கொலைச் செயலை நியாயப்படுத்தித்தான் வாதுரைத்தார். தபோல்கரை மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி என்பதாக இல்லாமல் ‘ஹிந்து விரோதி’ என்ற முத்திரையைக் குத்தி கொலையை நியாயப்படுத்திடும் வகையில் வாதம் இருந்தது – இது மிகவும் கண்டிக்கத் தக்கது.
ஸநாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘சாதக் என அழைக்கப் படுகின்றனர். 2008-ஆம் ஆண்டு முதல், குண்டு வெடிப்பு நிகழ்வுகள், பல்வேறு குற்றங்களில் சாதக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2011-இல் நடைபெற்ற ஒரு குண்டுவெடிப்பில் இரு ‘சாதக்’குகள் கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் பெற்றுள்ளனர்.
கோவாவில் கோலாகலமாக நடைபெறும் நரகாசுரன் திருவிழாவினை (தீபாவளிக்கு முந்தைய நாள்) ஸநாதன் சன்ஸ்தா அமைப்பினர் ஹிந்து எதிர்ப்பு நாளாகவே கருதுகின்றனர். இப்படிப்பட்ட ஸநாதன் சன்ஸ்தா அமைப்பைத் தடை செய்ய வேண்டுமென்று 2011-ஆம் ஆண்டிலேயே மகாராட்ட்டிரா தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு (Maharashtra Anti – Terrorist Squad) கொடுத்த அறிக்கை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இது நாள் வரை எந்த நடவடிக்கையும் அந்த அமைப்பினர் மீது எடுக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் தொடர்ந்து அந்த அமைப்பினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டே வந்துள்ளனர். தடை செய்யப்பட்டிருந்தால், மூடநம்பிக்கை ஒழிப்பு போராளிகள், சீர்திருத்த அறிஞர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் என பலரை இழந்திருக்க மாட்டோம்.
ஏன் வழக்கை நடத்துவதில் தாமதம்?
விசாரணை தொடக்கத்தில் காவல்துறை, சி.பி.அய். தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் கொலையாளிகள் மற்றும் கொலைக்கு தொடர்பாக இருந்தவர்கள் என வகைப்படுத்திக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல சி.பி.அய். அதிகாரிகள் எந்தக் காரணத்தினாலோ, அல்லது உயர்மட்டத்திலிருந்து வந்த அழுத்தத்தினாலோ, வழக்கை விரைந்து நடத்திட முன்வரவில்லை. இதனை தீர்ப்பளித்த நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தபோல்கர் வழக்கில் கொலை செய்தவர்கள் தண்டனைக்கு ஆளாகியிருக்கலாம். மூளையாகச் செயல்பட்டவர்கள் இன்னும் வெளியில்தான் உள் ளனர். மற்ற கொலை வழக்குகளும் நடைபெற வேண் டும்; தீர்ப்பு அளிக்கப்படவேண்டும்.
மேலும் வழங்கப் பட்ட தண்டனையை எதிர்த்து கொலையாளிகள் உயர்நிலை நீதிமன்றத்தில் முறையீடு செய்திடவும் வாய்ப்பு உள்ளது. கொலை செய்திட உண்மையில் திட்டமிட்டவர்கள் அல்லது அமைப்பினர் தண்டிக்கப் பட்டால் ஒழிய, இத்தகைய செயல்கள் முற்றுப்பெறாது. தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தபோல்கர் கொலை வழக்கு தீர்ப்பில் இருவர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். தபோல்கர் கொலை வழக்கு முடியவில்லை. அது தீவிரமாக தொடர்ந்து ஆராயப் பட வேண்டிய ஒன்று.
காந்தியார் கொலை வழக்கில் ஹிந்துத்துவ வாதிகளின் தொடர்பு இருந்தது. அவர்கள் உரிய சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டதைப் போலவே தபோல்கர் மற்றும் இதர மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளிகளின் கொலை வழக்கிலும் அவர்களது ஈடுபாடு உரிய சாட்சிகளுடன் உறுதிப் படுத்தப்படாதது அப்பட்டமாகவே தெரிகிறது.
No comments:
Post a Comment