காவல்துறை-பேருந்து நடத்துநர் மோதல் முடிவுக்கு வந்தது: ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

காவல்துறை-பேருந்து நடத்துநர் மோதல் முடிவுக்கு வந்தது: ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்

சென்னை, மே 26– நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுவதாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் 2 நாட்களாக அபராதம் விதித்தனர்.இந்தத் தொகையை தங்களதுபணத்தில் இருந்து செலுத்த வேண்டியிருப்பதாக பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முதலமைச்சர், போக்குவரத்து துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு தொழிற்சங்கத்தினர் தரப்பில் கடிதமும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் உள்துறைச் செயலர் பி.அமுதா, போக்குவரத்துத் துறைச்செயலர் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் சென்னை, தலைமைச் செயலகத்தில் 24.5.2024 அன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு எட்டப்பட்டது.
இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழக உயர்நிலை அதிகாரிகளுக்கு துறை சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி, காவலர்களின் பயணச்சீட்டு விவகாரத்தில் வாரண்ட் இருந்தால் கட்டணமில்லாமல் வழக்கம்போல பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற நடைமுறையையே கடைப் பிடிக்க வேண்டும். பேருந்துகளில் எந்தவித குறைபாடுமின்றி கவனிப்பதோடு, விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இதேபோல், போக்குவரத்து காவல்துறையினரும் தனிப்பட்ட முறையில் அபராதம் விதிக்க வேண்டாம் எனவும் வாரண்ட் வைத் திருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும் எனும் நடைமுறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் இருதரப் புக்குமான மோதல் போக்கு முடிவுக்கு வரும் என தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நாங்குநேரி நிகழ்வில் தொடர்புடைய காவலர் ஆறுமுக பாண்டி மற்றும் நடத்துநர் சகாயராஜ் ஆகிய இருவரும் பரஸ்பரம் சமாதானமாக தேநீர் அருந்தி பேசிக் கொள்ளும் காட்சிப் பதிவும் நேற்று வெளியானது. இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

 

No comments:

Post a Comment