பத்தாம் வகுப்பில் தோல்வி - கல்லூரியிலோ முதல் மாணவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 28, 2024

பத்தாம் வகுப்பில் தோல்வி - கல்லூரியிலோ முதல் மாணவி

featured image

“கேடில் விழுச் செல்வம் கல்வி
யொருவற்கு மாடல்ல மற்று யவை”

என்பது குறள். கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமே இல்லை என்பதே உண்மை. கடந்த பதினேழு ஆண்டுகளாக கிராமப்புற பகுதிகளில் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் சென்னையில் வசித்து வரும் Dr.கிரேஸி. இவரும் இவரது நண்பர் ராஜசேகரும் சேர்ந்து கேரிங் ஹாட்ஸ் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பினை துவங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி குறித்த வழிகாட்டல்களை செய்து வரு கிறார்கள். கல்வி குறித்தும் அதற்கான உதவித்தொகைகள் சலுகைகள் குறித்தும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தகவல்களை Dr..கிரேஸி பகிர்ந்து கொண்டார்.

திருச்சி அருகேயுள்ள காட்டூர் என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தார் கிரேசி. தந்தையின் திடீர் மறைவு மற்றும் வீட்டின் வறுமை சூழல் காரணமாக ஒன்பதாவது வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். பகுதி நேரமாக வேலை செய்து கொண்டே படித்ததால் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தார். ஒரு கல்வி உதவியாளர் (ஸ்பான்சர்) உதவியால் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற்று 11ஆவது வகுப்பில் சேர்ந்தார். எப்போதும் பகுதி நேர வேலையை விட இயலாத குடும்ப சூழல், அங்கிருந்த ஆசிரியர்கள் உதவியுடன் தான் 12ஆவது வகுப்பை மிகவும் சிரமப்பட்டு முடித்தார். கல்லூரியில் சேர சுத்தமாக பணமில்லை. படிப்பை தொடர இயலாத வீட்டு சூழல்.

அப்போது ஆசிரியர் திருமதி. லஷ்மி மற்றும் பாதிரியார் இன்னாசிமுத்து அவர்களும் கல்வி உதவித் தொகை குறித்த உதவிகள் பலவற்றை செய் தனர். ஒற்றை பெற்றோருடைய குழந்தை களுக்கான கல்விச் சலுகை குறித்து அங்கு தான் அறிந்து கொண்டார். அதன் பிறகு கல்வி உதவித் தொகை பெற்று கல்லூரிப் படிப்பை தொடர முடிந்தது. படிக்கும் காலத்தில் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வது, சுய முன் னேற்ற வகுப்புகளில் கலந்து கொள்வது, ஆங்கில மொழியறிவை வளர்த்துக் கொள்வது என தன்னை இச்சமூகத்தில் சுயமாக இயங்க ஆயத்தம் செய்து கொண்டார். “நான் கல்லூரியின் முதல் மாணவியாக தேர்வானது என்பது வாழ்வில் மறக்க முடியாதது. அதன் பிறகு பி. எட் , எம். எட் என படித்து மனோன்மணியம் சுந்தரனார் யூனிவர் சிட்டியில் முனைவர் (பி. எச். டி) பட்டம் பெற்றது வாழ்வில் மறக்க இயலாத தருணம்” என்கிறார்.

சில கேள்விகளுக்கு அவரின் பதில்கள்:

யாரெல்லாம் இந்த உதவித் தொகையை
பெற இயலும் ?

“கல்வி உதவித் தொகையை பொறுத்தவரை ஏராளமான திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்றிய அரசு கல்வி உதவித் தொகை மற்றும் மாநில அரசு கல்வி உதவித் தொகை இரண்டும் பெறலாம். முதலாம் தலைமுறை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் உண்டு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வியில் 100 சதவீத சலுகைகள் உண்டு. மெரிட் தகுதியில் 7.5 என்ற விகிதத்தில் கல்வி உதவித் தொகை பெற இயலும்.

தந்தையை இழந்த மற்றும் தாயை இழந்த பிள்ளைகளுக்கும் கல்வி உதவித் தொகை கிடைக்கும். அதே போன்று படுத்த படுக்கையாக இருக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற முடியும். இப்படியான திட்டத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் அய்ம்பது முதல் நூறு பிள்ளைகளுக்கு மேல் இலவச கல்வியை எங்களால் வாங்கித் தர முடிந்தது ரொம்பவும் நிறைவான விஷயம்” என்கிறார்.

பள்ளியில் பிளஸ் டு படிக்கும் போதே கல்லூரி படிப்பு குறித்த விஷயங்களை சொல்லத் துவங்கி விடுவோம். அரசு கல்லூரியில் படித்தால் கிடைக்கும் பயன்கள், தனியார் கல்லூரியில் படிக்க தேவையானது என்ன? குறித்த தகவல்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுவோம்.

மேலும் அந்த அந்தக் காலகட்டத்தில் பயன் தரக்கூடிய படிப்புகள் எவை யெவையென அறி வுறுத்துவோம். ஒரு காலத்தில், கணினி அறிவியல், தகவல் சைபர் செக்யூரிட்டி குறித்த படிப்புக்கு மதிப்பு என்றால், அடுத்த ஆண்டு வணிகவியலுக்கு மதிப்பு, தற்போது செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகளுக்கு தான் வாய்ப்புகள் அதிகம் என்று குறிப்பிடுகிறார்.

எஜுகேஷனல் கன்சல்டன்சி துவங்கியது எப்போது?

“நான் பி. எட் மாணவியாக இருந்த போது ஒரு நாள் எனக்கு பள்ளியில் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) குறித்து வழிகாட்டிய எனது ஆசிரி யரை சந்தித்தேன். அவர் நான் உனக்கு வழிகாட்டியது போல நீயும் மற்ற மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய உதவித் தொகை மற்றும் கல்லூரிப் படிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தேன்.

இதை கண்ட அந்த ஆசிரியர்கள் இதை ஏன் ஒரு அமைப்பினை ஏற் படுத்தி முறையாக செய்யக்கூடாது என கேட்டார். அப்போது தான் அந்த எண்ணம் தோன்றியது. அப்படி உருவானது தான் க்ரேஸ் கன்சல்டன்சி. அந்த ஆலோ சனை நிறுவனம் (கன்சல்டன்சி) மூலம் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே கல்வி குறித்தான நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். எங்கு படிக்கலாம்? என்ன படிக் கலாம்? எப்படிப் படிக்கலாம்? என்று மாணவ, மாணவிகளுக்கு வழி காட்டி னேன். அதற்கு கிடைக்கக்கூடிய கல்வி உதவித்தொகைகள், சலுகைகள், கல்லூரியில் படிப்பதற்கான செலவுகள் குறித்து நிறைய அலசி ஆராய்ந்து மற்ற வர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட் டேன்” என்று பெருமிதமாகக் கூறினார்.

No comments:

Post a Comment