ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1 : “நான் சூரியக் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்டவன் – எகிப்தின் மக்களைக் காக்க எனக்குச் சிறப்பு சக்தியை கடவுள் வழங்கி யுள்ளார்” என்று 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னன் துட்டன்காமன் கூறினான்.
அதையே 3000 ஆண்டுகளின் பின் மோடியும் கூறுகிறாரே! மக்கள் நம்புவார்களா?

– மா.ரத்தினசாமி, வேலூர்

பதில் 1 : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அவர்கள் கூறியதுபோல், அவருக்கும் ஒரு கோயில் கட்டி வழிபாட்டு ஸ்தலமாக்கி, 11ஆவது அவதார மகிமையாகப் பிரச்சாரம் செய்யலாம் – அயோத்தி இராமன் கோயில் பக்கத்திலேயே இடம் தேர்வு செய்யலாம்.
பரிதாபத்திற்குரிய அவரது மனநிலையைப் பற்றி எழுத வார்த்தைகளை இனித் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
என்னே தேர்தல் கொடுமை!
இதற்குமுன் எந்தப் பிரதமராவது இப்படி ‘சுயபுராணம்’ பாடியதுண்டா?

கேள்வி 2 : பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை பாஜக ஊடகங்கள் கூட புறக்கணித்து விட்டனவே?

– க.கருப்பன், திருத்தணி

பதில் 2 : நீங்கள் ஏன் அவரை – மக்கள் மறந்து புறக்கணித்தவரை – மீண்டும் நினைவூட்டி நல்ல நேரத்தை, வீணடிக்கிறீர்கள் என்று புரியவில்லை!

கேள்வி 3: சுதந்திரத்திற்காக காங்கிரஸ் தலைவர் கள் பெரும்பாடு பட்டிருக்கிறார்கள் என்று புதிய குரலில் மோகன் பாகவத் பேசியுள்ளாரே?

– தே.முரளிதரன், மதுரை

பதில் 3 : அது பிரதமர் மோடிக்கு அவர் கொடுத்த சூடு – உட்பொருள் அதுதான்! புரிந்துகொள்ளுங் கள். பனிப்போரின் ஒரு வெளிப்பாடு!

கேள்வி 4: தற்கால தமிழ்நாடு இளைஞர்களின் வாழ்க்கைச் சிக்கலுக்கு காரணம் நமது பெருமை மிகு கலாச்சாரத்தை ஏற்காமல் மேற்கத்திய கலாச்சாரத்தை ஏற்றதுதான் என்று தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பேசத் துவங்கி விட்டார் களே?

– சி.வெற்றிராஜன், மாமல்லபுரம்

பதில் 4 : நமது “பெருமைமிகு கலாச்சாரத்தில்” தொலைக்காட்சி உண்டா? என்று அந்த “பழைய பஞ்சாங்கங்களை”க் கேளுங்கள்!

கேள்வி 5: 10 ஆண்டுகளாக எத்தனையோ திட்டங்களை அறிவித்த மோடி அந்த திட்டங் களை நிறைவேற்றியதாக – ஒன்றைக்கூட பொது மேடையில் கூறி வாக்கு கேட்கவில்லையே – ஏன்?
– கோ.ஏகலைவன், நாமக்கல்
பதில் 5 : “சட்டியில் இருந்தால்தானே அகப்பை யில் வரும்” என்ற கிராமியப் பழமொழியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

கேள்வி 6: மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் தன்னுயிர் மாய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே?
– வே.நந்திதாசன், திண்டுக்கல்

பதில் 6 : நமது (மஹா) பாரதக் கலாச்சாரத்தின் புதுப்பிப்பு சூதாட்டம் – கடும் நடவடிக்கை தேவை – நீதிமன்றங்கள் இந்தக் கொடுமையை தவறாக நியாயப்படுத்த முன்வரக் கூடாது!

கேள்வி 7: அதிக பயணிகள் வரத்து இல்லாததால் அயோத்திக்கான விமான சேவையை நிறுத்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனவே? இராமனை மக்கள் கைவிட்டு விட்டார்களா?

– க.செங்கிஸ்கான், நெல்லை

பதில் 7 : இராமனை மக்கள் மறந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இராமனை வாக்கு வங்கியாக மாற்ற நினைத்த பா.ஜ.க. மோடிக்கு மிஞ்சியது ஏமாற்றமே என்பதற்கு இதுவும் ஓர் ஆணித் தரமான சாட்சியம்.

கேள்வி 8: போதைக்கு அடிமை, பிறகு ஹிந்து விரோதி, ஸநாதனவிரோதி, பிறகு மொழி விரோதி, பேராசைக்காரர்கள். தற்போது திருடர் கள். தமிழர்களுக்கு அடுத்து என்ன பட்டம் சூட்டப் போகிறார்களோ அமித்ஷா – மோடி அண்ட் கோ?

– தி.காளி, புதுக்கோட்டை

பதில் 8 : மனநல மருத்துவர்களிடம் கேட்க வேண்டிய இந்தக் கேள்வியை என்னிடம் கேட் கிறீர்களே, நியாயமா?

கேள்வி 9: தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான படுகொலைகள் தொடர்கதையாகி உள்ளதே – அவர்களுக்குள்ளேயே வெட்டிக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்களா?

– மு.இராபர்ட், சென்னை

பதில் 9 : தமிழ்நாடு அரசு, குறிப்பாக உள்துறை, காவல்துறை – நமது முதலமைச்சர் இதற்கென தனிப் படையை அமைத்து வேரோடு களையும் வகையில் சமூக விரோதிகளை வேட்டையாடி சிறையில் தள்ள வேண்டும்.

கேள்வி 10: 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்ததாக சாதனை எதுவுமே இல்லை – எல்லாம் விளம்பரம் – என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விட்டுள்ளாரே?

– கே.பிரபா, கன்னியாகுமரி

பதில் 10 : “மருத்துவருக்குத் தேவை மருத்துவம்” என்றுதான் மக்கள் சொல்வார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு இருக்கும் நன்றி உணர்வு கூட இப்படிப்பட்ட ‘பெருமக்களுக்கு’ ஏனோ இல்லாமற்போனது! வெட்கக் கேடு!!

No comments:

Post a Comment