பதிலடிப் பக்கம் : ஆர்.எஸ்.எஸில் ஜாதி வேறுபாடு இல்லையாம்! ‘தினமணி' சொல்லுவதை நாம் நம்ப வேண்டுமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

பதிலடிப் பக்கம் : ஆர்.எஸ்.எஸில் ஜாதி வேறுபாடு இல்லையாம்! ‘தினமணி' சொல்லுவதை நாம் நம்ப வேண்டுமாம்!

featured image

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
கவிஞர் கலி.பூங்குன்றன்

“சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸும்” என்ற தலைப்பில் வினய் ஹஸ்ருடித்தே என்பவரின் பெயரில் ‘தினமணி’ நாளேட்டில் (14.5.2024) நடுப்பக்கக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தக் கட்டுரையின் முக்கியப் புள்ளிகள் இரண்டு. ஒன்று ஆர்.எஸ்.எஸ்-சில் ஜாதிக்கு இடமில்லை. இரண் டாவது சமூக நீதிக்கும் எதிரானதல்ல ஆர்.எஸ்.எஸ். என்பதாகும்.
ஜாதிய கண்ணோட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸில் இடமில்லை என்பதற்கு இரு பெருமக்களை சாட்சிக் கூண்டில் நிறுத்துகிறது ‘தினமணி’.
முதலாமவர் காந்தியார். ஆர்.எஸ்.எஸ். அணி முகாமை பார்வையிட்ட காந்தியார் நற்சான்று பத்திரம் வழங்கி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். முகாமில் ஜாதி வேறுபாடோ, தீண்டாமை உணர்வோ இல்லாத சூழ லைக் கண்டு வியந்தார். வியந்தார் காந்தியார் என்று சொல்வதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். பற்றி காந்தியாரின் கணிப்பு எத்தகையதாக இருந்தது என்பதை விளக்கும் நிலைக் கண்ணாடியாகும்.
1934ஆம் ஆண்டு வார்தாவில் நடைபெற்ற ஆர். எஸ்.எஸ். பயிற்சி முகாமை காந்தியார் பார்வையிட்டது உண்மையே!
அதேபோல் 1947 செப்டம்பர் 10ஆம் நாள் டில்லி பங்கி காலனியில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களிடம் காந்தியார் பேசியதும் உண்மை. ஆனால் என்ன பேசினார் என்பதுதான் முக்கியம்.

இதோ காந்தியார் பேசுகிறார்:
“துரதிர்ஷ்டவசமாக இன்று இருந்து வருவதைப் போன்று இஸ்லாமிடமோ, அதைப் பின்பற்றுபவர்களி டமோ இந்து மதத்திற்கு எந்தச் சச்சரவும் இருப்பதற் கில்லை. தீண்டாமை என்னும் விஷம் இந்து மதத்தில் புகுத்தப்பட்டபோதே அதற்குச் சரிவும் ஆரம்பமாகி விட்டது. ஒன்று மாத்திரம் நிச்சயம். அதை நான் பகிரங் கமாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். தீண்டாமை உயிருடன் இருக்குமானால், இந்து சமயம் செத்துத்தான் ஆகவேண்டும். அதேபோல இந்தியாவில் இந்துக் களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று இந்துக்கள் நினைப்பதாக இருந்தால் இந்துக்களல்லாத வர்கள் – முக்கியமாக முஸ்லீம்கள் இங்கே வாழ விரும் பினால், இந்துக்களின் அடிமைகளாகத்தான் வாழ வேண்டும் என்று நினைத்தால், இந்துக்கள் இந்து மதத்தையே கொன்று விடுவார்கள். இதேபோன்று பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு மாத்திரமே நியாயமான உரிமை ண்டு என்று பாகிஸ்தான் நம்பினால், முஸ்லீம் அல்லாதவர்கள் தங்களுக்குத் தாழ்ந்தவர்களாகவும், தங்கள் அடிமைகளாகவே வாழமுடியும் என்று நம்பினால், இந்தியாவில் இஸ்லாமுக்குச் சாவுமணி அடித்து விட்டதாகவே ஆகும்” என்றார் காந்தியார் (காந்தி தொகுப்பு நூல் 9, பக்கம் 689-692)

ஆர்.எஸ்.எஸ். முகாமுக்குச் சென்ற காந்தியார் எதற்காக இந்தக் கருத்துக்களைக் கூற வேண்டும் என்பதை நுனி மூக்கு அளவுக்கு அறிவு உள்ளவர்களால் கூட புரிந்து கொள்ள முடியும்.
காந்தியார் ஆர்.எஸ்.எஸ். நடத்திய வார்தா பயிற்சி முகாமைப் பார்வையிட்டதும் உண்மைதான். காந்தி யாருடன் சென்ற சீடர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நல்ல சேவைகளைச் செய்கிறார்கள் என்று காந்தி யாரிடம் சென்னபோது காந்தியார் கூறிய கருத்து – காலத்தை வென்று நிற்கக் கூடியதும் – ஆர்.எஸ்.எஸின் பொய் முகத்தைக் கிழிப்பதும் ஆகும்.
“ஹிட்லரின் நாஜிப்படையும், முசோலினியின் பாசிசப் படையும் இதேபோல் தான் சேவை செய்தன என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று சொன்னாரே பார்க்கலாம்.
ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்டு, அங்கு ஜாதி வேறுபாடு இல்லை என்று காந்தியார் கூறியது போலவே அம்பேத்கரும் பாராட்டியதாக ‘தினமணி’ கரடி விடுகிறது.
“பகிஸ் கிருத் பாரத்” இதழின் ஆசிரியராக அண்ணல் அம்பேத்கர் இருந்தார். அதன் 4.11.1927 இதழில் என்ன எழுதப்பட்டு இருந்தது? இதோ:

“ரெஸ் நாயுடு என்ற மராட்டியர் கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்பு தீண்டத்தகாதவர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் அவர் இந்து மகாசபாவின் வேண்டுகோளை ஏற்று இந்து மதத்திற்குத் திரும்பினார் இந்து மதத்திற்குத் திரும்பிய பிறகு, உயர்ஜாதி இந்து மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பி னார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல், அவரது உயர்ஜாதி நண்பர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை
இந்து மதத்தில் கடினமான வாழ்க்கை வாழ்வதை வெறுத்து மீண்டும் கிறிஸ்தவத்திற்குத் திரும்புவது நல்லது என்று நினைத்து இந்து மதத்தைத் துறந்தார்.

கிறிஸ்தவராக மதிப்பு மிகுந்த இடத்தில் இருக்கும் ஒருவர் இந்துவாக மாறினால் மீண்டும் பழைய தீண்டாமை கொடுமையை அனுபவிக்கவேண்டும் ஆகவே ரெஸ் செய்த முட்டாள்தனத்தால் (இந்துவாக மாறியதால்) ஒன்று நிரூபணமாகியுள்ளது
மத்திய இந்தியா மற்றும் ராஜ்புதானாவில், மேக்வால் என்ற தீண்டத்தகாத வகுப்பினர் பித்தளை ஆபரணங் களைப் பயன்படுத்தினர். அந்த வகுப்புகளின் செல்வந் தர்கள் பித்தளை ஆபரணங்களை அணிவதற்கு வெட் கப்படுகிறார்கள். உங்கள் தகுதிக்கேற்ப ஆடை அணிய வேண்டும் என்று நினைப்பது இயல்பு. கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு இந்த மேக்வால் மக்கள் வெள்ளி ஆபரணங்களை அணியும் பழக்கத்தை தொடங்கினர்.

சிலர் தங்கத்தை அணியத்துவங்கினர் – இது உயர் ஜாதியினரைத் கோபத்தில் தூண்டியது
தீண்டத்தகாத மேக்வால்கள் வெள்ளி ஆபர ணங்கள் அணிந்தவர்கள் – உயர்ஜாதி இந்துக்களான தங்களை விட தாழ்ந்தவர்கள் என்றும், அதன் காரண மாகவே இந்த மேக்வால் ஜாதியை துன்புறுத்த ஆரம் பித்து விட்டார்கள்
என்று எழுதினார் அண்ணல் அம்பேத்கர்.
(குறிப்பு: கடந்த ஆண்டு குதிரை ஏறியதால் கொல்லப்பட்ட குஜராத் தாழ்த்தப்பட்ட இளைஞரும் மேக்வால் ஜாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.”)

“நான் இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று சொன்னதோடு, அதன்படியே பல லட்ச தாழ்த்தப்பட்ட மக்களோடு இந்து மதத்தி லிருந்து பவுத்தம் தழுவினார் அண்ணல் அம்பேத்கர்.
மக்களை ஏமாற்றும் வகையில் ஆர்.எஸ்.எஸ். பலவிதமான சான்றுகளற்ற வதந்திகளைப் பரப்பி வருகிறது. காந்தியார், ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டால் ஈர்க் கப்பட்டார் என்று கூறியது. அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்ததில் நம்பிக்கை வைத்திருந்தார் எனவும் ஆர்.எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறி யிருந்தார்.

அம்பேத்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தங் கள் நேரெதிரானவை. அம்பேத்கர், இந்திய தேசியம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தமோ பார்ப்பனியத்தன்மை வாய்ந்த இந்துமதக் கருதுகோள், இந்து ராஷ்டிரம் என்ற இரு தூண்கள் மீது நிற்கிறது.
இந்து மதத்தின் சித்தாந்தம் பற்றிய அம்பேத்கரின் கருத்து என்ன? அவர் இந்து மதத்தை பார்ப்பனிய இறையியல் என்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடும் துன்பத்தை அளிக்கின்ற ஜாதி அமைப்புதான் தற்போது நிலவும் இந்துமதம் என்பதன் சாரம் என்கிறார், அவர்.

ஆரம்ப காலத்தில், இந்து மதத்தினுள் இருந்தபடியே ஜாதிய அமைப்பின் தளைகளை உடைக்க அவர் முயற்சி செய்தார். சவதார் தலாப் இயக்கம் (தலித்துகள் பொதுக் குடி நீரை உபயோகப் படுத்தும் உரிமை), கலராம் மந்திர் போராட்டம் (கோயில் நுழைவுப் போராட்டம்) போன்றவற்றை முன்னெடுத்தார். பார்ப்பனிய, ஜாதிய, பாலின படிநிலை ஆதிக்கத்தின் அடையாளமான மனு ஸ்மிருதியை எரித்தார். இந்து மதம், பார்ப்பனியத்தின் மீதான அவரது விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. அதன் பயனாக, வெகு சீக்கிரத் தில் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதென்ற முடிவை எடுத்தார்.

‘இந்து மதத்தின் புதிர்கள்’ என்ற நூலில், (மகாராட்டிர அரசால் 1987-இல் வெளி யிடப் பட்டது) இந்து மதத்தைப் பற்றிய அவரின் புரிதல்களை, குறிப்பாக அதன் பார்ப்பனியத் தன்மையை விளக்கு கிறார். இந்த நூலில் அம்பலப்படுத்தப்படும் நம்பிக் கைகளை நாம் பார்ப்பனிய இறையியல் என்று அழைக் கலாம். இந்து மதம் என்பது காலத்தால் அழியாதது அல்ல என்பதை நான் மக்களுக்குப் புரிய வைக்க விரும்புகிறேன். பார்ப்பனர்களால் எவ்வாறு ஏமாற்றப் படுகிறோம் என்பது குறித்து சுயமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதும், அவ்வாறு ஏமாற்றுவதற்குப் பார்ப்பனர்கள் பயன்படுத்தும் உத்தி களின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதுமே இந்த நூலை எழுதுவதற்கான இரண்டாவது நோக்கம்.

1935-களில், தான் ஒரு இந்துவாக இறக்கப் போவ தில்லை எனப் பகிங்கரமாக அறிவித்த காலத்திலிருந்தே அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து விலக ஆரம்பித் திருந்தார். 1936இல் சீக்கிய மிஷனரி நடத்திய மாநாட் டில் கலந்து கொண்டார். அக்காலகட்டத்தில் அவர் சீக்கியத்தைத் தழுவும் யோசனையில் இருந்தார். 1936இல் அம்பேத்கர் ஜாதி ஒழிப்பு எனும் நூலையும் எழுதி வெளியிட்டார். அது லாகூரில் நடந்த ஜாதி ஒழிப்பு இயக்க (ஜாத் பத் தோடக் மண்டல்) மாநாட்டில் பேசுவதற்காகத் தயாரிக்கப்பட்ட, ஆனால், பேசுவதற்கு மறுக்கப்பட்ட தலைமையுரையாகும். அதன் கடைசிப் பகுதியில், அம்பேத்கர் இந்து மதத்தை விட்டுவிட இருக்கும் தீர்க்கமான முடிவை வலியுறுத்தியிருப்பார்.
இந்நூலை “ஜாதியை ஒழிக்க வழி” என்ற பெயரில் முதன் முதலில் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். (1936).
பொதுக் குளம் மற்றும் கிணறுகளில் தாழ்த்தப் பட்டோர் நீர் எடுப்பதை மறுத்த தீண்டாமைக்கு எதிராக 1927-இல் மகாராட்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில், மஹத் எனுமிடத்திலுள்ள சாவ்தார் ஏரியில் குடிநீர் பருகும் போராட்டத்தை அம்பேத்கர் தலைமையேற்று நடத்தியதைச் சித்தரிக்கும் ஓவியம்.

அம்பேத்கர் சொல்கிறார், “நான் முடிவு செய்து விட்டேன். என்னுடைய மதமாற்றம் என்பது எதை விடவும் உறுதியானது. எனது மதமாற்றமானது எந்த பொருள் ஆதாயத்துக்குமானது அல்ல. தீண்டத்தகா தவனாக இருப்பதன் காரணமாக, நான் சாதிக்க முடி யாதது என்று எதுவும் இல்லை. எனது மதமாற்றமானது முழுக்க முழுக்க எனது ஆன்மீக நோக்கிலானது. இந்து மதம் எனது மனசாட்சிக்கு உகந்ததாக இல்லை. இது எனது சுயமரியாதைக்கும் ஏற்றதாக இல்லை. எவ்வாறா யினும், உங்களின் (அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தின்) மதமாற்றம் என்பது பொருள் மற்றும் ஆன்மீக ஆதாயத்திற்கானது ஆகும். பொருள் ஆதாயத்திற்காக மதம் மாறுவது குறித்துச் சிலர் பரிகசித்துச் சிரிக்கலாம். அவ்வாறு சிரிப்பவர்களை முழுமுட்டாள்கள் என்று அழைப்பதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை” (Ambedkar – Salvation).

ராமன், ஆர்.எஸ்.எஸ். சொல்லிக்கொண்டிருக்கும் கலாச்சார தேசியத்தின் அடையாளமான கடவுளாக இருக்கிறார். கடவுள் ராமனைப் பற்றி அம்பேத்கர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். “சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரிய வில்லை. தன்னுடைய பேரும் புகழுமே பெரிதென அவன் நினைத்திருக்கிறான். அரசாளும் மன்னன் என்ற முறையில் அவ்வித அவதூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ, அதையும் செய்ய வில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. மேலும், காட்டிலுள்ள வால்மீகியின் ஆசிரமத்தில் அந்தச் சிறுவர்கள் (லவா, குசா) 12 ஆண்டுகள் வளர்ந்து, வாழ்ந்து வந்தனர். வால்மீகியின் ஆசிரமம் ராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு நெடுந்தொலைவில் ஒன்றுமில்லை. இந்த 12 ஆண்டுகளில் ஒரு தடவையாவது இந்த உதாரண புருஷனான ராமன், பாசமிக்க தந்தை, சீதை என்ன வானாள், அவள் செத்தாளா, பிழைத்தாளா என்பதைப் பற்றி விசாரிக்கக்கூட இல்லை; காட்டுமிராண்டியைக் காட்டிலும் கேவலமாய் நடந்து கொண்ட இந்த இராம னோடு மீண்டும் மனைவியாய் சென்று வாழ்வதைக் காட்டிலும் சாவதே நல்லது என்று சீதை முடிவு செய்திருக்கிறாள்.”

அம்பேத்கரின் கனவான ஜாதி ஒழிப்பு என்பது இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் நிறைவடை யாமலேயேதான் இருக்கிறது. இந்தியாவில் ஜாதி என்பது ஒரு முக்கியமான அம்சமாக நீடிப்பதற்கு சமூ கத்தில் இயங்கும் பல்வேறு காரணிகளும் பாத்திர மாற்றுகின்றன. அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற கருத்துக்கு மாறாக, ஆர்.எஸ்.எஸ்.-இன் அரசியல் பல்வேறு ஜாதிகளுக்கிடையே நல்லிணக்கம் என்பதை வலியுறுத்துகிறது. இதன் பொருட்டு, சமாஜிக் சமஸ்தா மன்ச் (சமூக நல்லிணக்க மன்றம்) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். சமூகப் பிரச்சினை களில் ஆர்.எஸ்.எஸ்.-இன் அணுகுமுறை அம்பேத் கரின் அணுகுமுறைக்கு நேரெதிரானதாக இருந்தது
ஆர்.எஸ்.எஸின் அரசியல் சித்தாந்தத்திற்கு இதயமாக இருப்பது இந்துத்துவம் அல்லது இந்திய தேசியமாகும். அம்பேத்கர், தனது பாகிஸ்தான் குறித்த கருத்துகள் எனும் நூலில் இப்பிரச்சினை குறித்து ஆழமாக எழுதியுள்ளார். அதில், இந்து தேசம் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தாக்கத்தின் மூலவரான சாவர்க்கர் மற்றும் முசுலீம் தேசியம் எனும் சித்தாந்தத்தின் மூல வரும், பாகிஸ்தானை முன்னிறுத்தியவருமான ஜின்னா ஆகிய இருவரின் கருத்துகளையும் அம்பேத்கர் விசாரணைக்கு உட்படுத்துகிறார்.

இது கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு தேசமா, இரு தேசங்களா என்ற பிரச் சினையில் திரு.சாவர்க்கரும், திரு.ஜின்னாவும் எதிர் நிலையை எடுக்கவில்லை. இரண்டு பேருமே முழுவ துமாக உடன்படுகிறார்கள். உடன்படுவது மட்டுமல்ல, ஒரு முஸ்லிம் தேசம், ஒரு இந்து தேசம் என்று இரண்டு தேசங்கள் இருப்பதாக இருவருமே வலியுறுத்து கிறார்கள். எத்தகைய நிபந்தனைகளின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் உருவாக்கப்படவேண்டும் என்பதில் மட்டும்தான் இருவரும் வேறுபடுகிறார்கள்.
ஜின்னா, இந்தியாவை பாகிஸ்தான், இந்துஸ்தான் என இரண்டு துண்டுகளாகப் போட்டு, முசுலீம் தேசம் பாகிஸ்தானையும், இந்து தேசம் இந்துஸ்தானையும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். சாவர்க் கரும், இந்தியாவில் இரண்டு தேசங்கள் இருப்பது உண்மைதான் என்று ஏற்றுக்கொண்ட போதிலும், அதை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்கிறார். இரண்டு தேசத்தவரும் ஒரே நாட்டில், ஒரே அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் வாழலாம். ஆனால், அந்த அரசியலமைப்புச் சட்டமானது இந்து தேசம் தனக்கே உரித்தான மேலாண்மையைக் கொண்டிருக்கும் வகையிலும், முஸ்லிம் தேசம் அதற்குக் கீழடங்கி ஒத்துழைக்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்பது சாவர்க்கரின் கருத்து. (பாகிஸ்தான் மீதான கருத்துகள், மூன்றாம் பிரிவு, 7-ம் அத்தியாயம்).

ஆனால், அம்பேத்கர் ஒருங்கிணைந்த இந்தியாவை முன்மொழிந்தார். “1920 முதல் 1937 வரையில், மாண்டேக் செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தின் கீழ் இந்தியாவின் பெரும்பான்மையான பிராந்தியங்களில் இசுலாமியர்களும் பார்ப்பனரல்லாதவர்களும் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரும் ஒரே குழுவாக ஒன்று பட்டு சீர்திருத்தத்துக்காகப் பணியாற்றவில்லையா? இந்து, முஸ்லிம் சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற் படுத்தவும் இந்து ராச்சியம் என்ற அபாயத்தை ஒழிக்கவுமான பயனுள்ள வழி இதில் இருக்கிறது. திரு.ஜின்னா எளிதாக இந்தப் பாதைக்கு வந்திருக்கலாம். இதில் வெற்றி பெறுவதென்பது அவருக்கு கடினமாக இருந்திருக்காது.” (பாகிஸ்தான் மீதான கருத்துகள், பக்.359 )

இந்து ராஜ்ஜியம் என்ற கருத்தை அம்பேத்கர் முழுமையாக எதிர்த்தார். பாகிஸ்தான் அவசியமா? என்ற அத்தியாயத்தில் அவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “இந்து ராச்சியம் என்பது வரும் பட்சத்தில், அது இந்நாட்டிற்கு ஆகப்பெரும் பேரழிவாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்துக்கள் என்னதான் சொன்னாலும், இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகத்தான் இருக்கும். இதன் காரணமாக அது ஜனநாயகத்துடன் பொருந்தி வரவே முடியாது. இந்து ராஜ்ஜியத்தை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்” என்றார் அண்ணல் அம்பேத்கர்.

ஓர் எடுத்துக்காட்டு அம்பேத்கரின் இதழான ‘ஜனதா’வில் ஜனவரி 13.1934 அன்று வெளியானது
அதன் தமிழாக்கம் இதோ
ஜனவரி 13, 1934 அன்று, பி.டி. நாக்பூரைச் சேர்ந்த தலித் பிரமுகர் ஷெலாரேவின் அனுபவத்தை அப்படியே எழுத்தில் வெளியிட்டது. நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவுகளில் (ஷாகாக்கள்) உணவின் போது ஜாதிப் பிரிவினை தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவது குறித்து எழுதி இருந்தது.
ஷகாக்களில் இத்தகைய நடைமுறைகள் பற்றி ஆர்எஸ்எஸ் தலைமை அறிந்திருப்பதாகவும், அதை அகற்ற குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதுவும் எடுக்கப் படவில்லை என்றும் ஷெலாரே கூறினார்.
மேலும், ‘தேசியவாதிகள்’ (ராஷ்டிரிய) போன்ற வார்த்தைகள் கேலிக்கூத்து மற்றும் போலித்தனமானது என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

அம்பேத்கரின் செய்தித்தாளில் ஆர்.எஸ்.எஸ். பற்றிய இந்த அரிய குறிப்பு, அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான முகத்தை அன்றே தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.
அண்ணல் அம்பேத்கரை துணைக்கழைக்கும் ‘தினமணி’ கட்டுரை – ஆர்.எஸ்.எஸில் ஜாதி வேறு பாடுக்கு இடமில்லை என்ற எழுத எப்படித் துணிந்தது?
ஆர்.எஸ்.எஸில் ஜாதிக் கண்ணோட்டம் இல்லை என்று பேசும் தினமணிக்கு ஒரு கேள்வி.
1981 பூனாவில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ஊர்வலத்தில் பிறப்பின் அடிப்படையில் வருணம் – ஜாதி பேசும் மனுதர்ம நூலை அலங்கரித்து எடுத்துச் சென்றது ஏன்? இதில் வெட்கக்கேடு என்னவென்றால் மனுதர்மத்தை எரித்த “அம்பேத்கர் படத்தையும் ஊர்வலத்தில் எடுத்துச் சென்றதுதான்.” (Economical Political Weekly, dt. 6.3.1982)
இன்றைய சூழலில், ஆர்.எஸ்.எஸின் ஜாதிய கோட்பாடு எடுபடாது என்பதால் ‘தினமணி’ வகைய றாக்கள் ஆர்.எஸ்.எஸைக் காப்பாற்றும் தந்திர முயற்சியே இது.

ஆர்.எஸ்.எஸ். குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் எப்படி எப்படியெல்லாம் வருணத்தையும், ஜாதியையும் ‘போர்க்குணத்தோடு’ தூக்கி நிறுத்துகிறார்.
“ஜாதிப் பிரிவினைதான் நமது சமுதாயப் பல வீனத்தின் அடிப்படைக் காரணம் என்றால், ஜாதி என்ற பிரிவினை இல்லாத சமூகத்தினர் தோற்றதைவிட மிக எளிதாக நம் சமுதாயத்தினர் தோற்றுப் போயிருக்க வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்ர்கர் குறிப்பிடுவதற்குப் (‘ஞானகங்கை’ பாகம் 2 – பக். 44, 45) பொருள் விளக்கம் வேண்டுமா தினமணியே?
அலெக்சாண்டர் படை எடுத்து வந்த நிலையில், தமது ஒற்றன் மூலம் ‘எதிர் முகாமில் என்ன நடக்கிறது?’ என்பதை அறிந்து வர அனுப்பி வைத்தார்.

ஒற்றன் சென்று துல்லியமாக அறிந்து வந்து, எதிர்ப்படையினர், உண்ணுவது, உறங்குவது வரை எல்லாம் தனித்தனியாக ஜாதி அடிப்படையில் தான் நடக்கின்றன. எனவே அவர்களை வெல்லுவது எளிது என்று ஒற்றன் கூறியதை எண்ணினால் கோல்வால்கர் கருத்து எவ்வளவு தவறானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
முல்லாவால் எழுதப்பட்ட ‘இந்துச் சட்டம்’ என்ற நூலில் ‘ஜாதி இல்லை’ என்று சொல்கிறவன் இந்துவாக இருக்க முடியாது என்று சொல்லப்பட்டுள்ளதே! இந்து ராஜ்யம் அமைப்பதுதான் தன் கொள்கையென்று வரிந்துக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எசுக்கு ஜாதிக் கண்ணோட்டம் இல்லை என்று எழுதிட ‘அசாத்திய துணிவு’ தான் வேண்டும். கேட்பவன் கேணையனாக இருந்தால், ‘எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது’ என்று சொல்வான் என்பதுதான் நினைவிற்கு வருகிறது.

No comments:

Post a Comment