தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

தந்தை பெரியார்

விடுதலை’ பத்திரிகைக்கு 25 ஆண்டு நிரம்பி 26ஆவது ஆண்டு துவங்கிவிட்டது.
“விடுதலை” ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வந்ததால் அது மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ. 3000 நஷ்டத்தில் நடத்தப்பட வேண்டிதாய் நிகழ்ந்து வந்தது ,
நஷ்டத்திற்குக் காரணம் கடவுள், மதம், புராணம், ஜோசியம் முதலிய மூடநம்பிக்கை சம்பந்தமான விளம்பரங்களையும், சினிமா முதலிய ஒழுக்கக்கேடும் மூடநம்பிக்கைக் கதைகளையும், பத்திரிகையில் போடாமல் பகிஷ்கரித்து வந்ததேயாகும்.

விடுதலை நிலை
மற்றும், இன்றைய தினம் நமது நாட்டில் ஏராளமான பத்திரி கைகள் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் முதல் 5லட்சம் ரூபாய் வரை இலாபம் தரக்கூடிய தன் மையில் நடந்து வருகின்றன என்று சொல்லக் கூடுமானாலும் அவைகள் பெரிதும் எந்தவிதமான விஷயங்களையும் விளம்பரம் செய்யத் துணிந்து விளம்பரங்களைப் பெற்றுப் பிரசுரிப்பதாலும் தனக்கென்று ஒரு கொள்கையும் இல்லாமல் வியாபார முறையில் நடத்தப்பட்டு வருவ தாலுமே அப்படிப் பட்ட.. இலாபம் அடைய முடிகிறது. மற்றும் பத்திரிகை நிர்வாகமும் நல்லமுறையில் நடத்தப்பட்டு வருவதும் காரணமாகும். அப் பத்திரிகை களின் போக்கும் எல்லாத் தர மக்களையும் கவரும்படியான போக்காக இருப்பதுமாகும்.
“விடுதலை” பத்திரிகைக்கு ஏற்பட்டுவரும் நஷ்டத் திற்கு மேற்கண்ட காரணங்களோடு நிர்வாகக் குறைவும் கவலையற்ற தன்மையால் ஏற்பட்டு வந்த பணச் சேதம் பண்டங்களின் சேதங்களும் ஆகும்.
இவைகளை உத்தேசித்து 10 ஆண்டுக்கு முன்ன தாகவே “விடுதலை”யை நிறுத்திவிட்டு – ஒரு வாரப் பத்திரிகையைத் துவக்கி நேரில் நிர்வாகம் வைத்து நடத்தலாம் என்றும் கருதினேன். பத்திரிகாலயச் சிப் பந்திகளின் முயற்சி காரணமாய்த் தொடர்ந்து நடத்தப் பட வேண்டிய தாய் விட்டது. அதன் பயனாய் இரட் டிப்பு நஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதாகி விட்டது.

இயக்கத்தின் ஆதரவு
“விடுதலை”க்கு இயக்க மக்கள் ஆதரவு மிகக் குறைவு என்று தான் சொல்லவேண்டும். பொதுமக்கள் ஆதரவு மிகமிகக் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் அதாவது இயக்க. மக்கள் ஆதரவும், பொது மக்கள் ஆதரவும், விளம்பர வருவாயும், நல்ல நிர்வாகமும், பாதுகாப்பும் இல்லாத ஒரு பத்திரிகை மாதம் 3000 ரூபாய் நஷ்டத்தில் நடந்து வருகிறதென்றால் அந்த நஷ்டம் ஒரு பெரிய தொகை நஷ்டமல்ல என்றே சொல்லவேண்டும். பொருள் நஷ்டம் இந்த அளவில் இருந்தாலும் அதன் பலன் அலட்சியப்படுத்தக் கூடிய தாய் அல்லாமல் பாராட் டத்தக்கதாய் இருந்து வருகிறது. என்பதில் அய்யமில்லை.

விடுதலையின் தலையாய பணி
எப்படி எனில் ஒழுக்கக் கேடானதும் மூட நம்பிக் கைகளை வளர்க்கக் கூடியதும் தமிழ் மக்களுக்கு சமுதாயத்திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடளிக்கக் கூடியதுமான காரியங் களை வெளியாக்கி – அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை ‘விடுதலை’. ‘விடுதலை’ ஒன்றே ஆக இருப்பதால் அத்துறைகளில் அது செய்துவந்த பணி நல்ல அளவுக்குப் பயன்பட்டு வந்திருப்பதோடு ‘விடுதலை’ பத்திரிகை இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை “ஏன்?” என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும், முதலாவது “விடுதலை” யில் வரும் செய்திகளை நமது தமிழ்நாட்டு அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளும் நல்லவண்ணம் கவனித்து ஒரு அளவுக்காவது பரிகாரம் செய்து வந்திருப்பதுடன் கவனம் செலுத்தும்படியான நிலையும் ஏற்பட்டு வந்திருக்கிறது. மற்றும் ‘விடுதலை’ பத்திரிகையான து மற்றப் பத்திரிகைக்காரர்கள் யாரும் இருட்டடிக்கும் செய்திகளையும், வெளியிடப் பயப்படும் செய்தி களையும் தைரியமாய் வெளியாக்கி மக்கள் கவனத் தையும் அரசாங்க கவனத்தையும் திருப்பும் படியாகச் செய்து வந்திருக்கிறது. இது மாத்திரமல்லாமல் ‘விடுதலை’ பத்திரிகையானது மற்ற எல்லாப் பத்திரிகைக்காரர்களையும் ஒரு அளவுக்காவது யோக் கியமாய் நடக்கும்படியாயும் அதிகமான அக்கிரமமும் அயோக்கியத் தனமும் செய்யவிடாமல் தடுத்தும் வந்திருக்கிறது. இவற்றையெல்லாம் விட ‘விடுதலை’ பத்திரிகையானது பார்ப்பன ஆதிக்கத்தையும் அவர் களது அட்டூழியங் களையும் வளர விடாமல் செய்வ தற்கு நல்ல பாதுகாப்பாய் இருந்து வந்திருக்கிறது?
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உறுதுணை விடுதலையே!
“விடுதலை” பத்திரிகை பார்ப்பனரல்லாத தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது விழிப் புக்கு நல்லதொரு துணைவனாகவே இருந்து வந் திருக்கிறது. இன்னும் பல அதிசயக் காரியங்கள் செய் திருக்கிறது , செய்து வருகிறது!

தமிழர் நிலை
இப்படியெல்லாம் இருந்தும் தமிழ்மக்களிடம் அது பெற வேண்டிய நிலையை அடையாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்றால் அது தமிழ் மக்களுடைய தன்மையைக் காட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் விடுதலை நஷ்டம் தாங் காமல் அதை நிறுத்திவிட்டு முன் நான் நினைத்தது போல் திருச்சியில் ஒரு வாரப்பத்திரிகை துவக்கலாம் என்று முடிவு செய்து கொண்டிருந்த நேரத்தில் நண்பர் வீரமணி அவர்கள் தனது வாழ் நாளை சுயநலமற்ற பொதுத் தொண்டில் செலவிட விரும்புவதாக முன்வந்தார்.
தோழர் வீரமணியின் சேவை
வீரமணி அவர்கள் எம். ஏ. பி. எல், பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக்கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழில் வளர்ந்த தோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, ரூ. 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம்பெற்று வரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தை யும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன் படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் ‘விடுதலை’ ஆசிரியராகவும் பயன் படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைத்துவிட்டேன். ‘விடுதலை’ பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இது தான் காரணம்.
இனி ‘விடுதலை’க்கு உண்மையான பிரசுரகர்த்தா வாகவும் ஆசிரியராகவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார்.
எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கிறார் என்றால் ‘விடுதலை’யை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் ‘விடுதலை பத்திரிகைக் காரியாயலத்தையும் அச்சு இயந்திரங் களையும் மாதம் 1-க்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்குக் கேட்டுக்கொண்டிருந்த நிலை யில் அதை வாடகைக்குக் கொடுப்பதைவிட நிறுத்தி விடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டு கோளும் அறிவுரையும் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன் வந்தார். ஆகவே ‘விடுதலை’ யின் 25ஆவது ஆண்டுத் துவக்கத்தில் லட்ச ரூபாய்களை “விடுதலை” நடப் புக்காக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன் வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத் தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி ‘விடுதலை’ வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப் படுகிறது.
இதற்குப் பொதுமக்கள் இல்லாவிட்டாலும் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் நம் மக்களிடம் எந்த குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது, கிடையவே கிடையாது. அது இல்லாவிட்டாலும் நம்பிக்கைத் துரோகம், செய்யாமலாவது இருப்பது என்பது அரிது! மிகமிக அரிது! ஆதலால் “விடுதலை”க்கு பொதுமக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு பல தொல் லைகள் ஏற்பட்டும் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இது எனக்கு அனுபவம்.

இயக்க தோழர்கட்கு வேண்டுகோள்
ஆனால் இயக்கத் தோழர்களை, எனது இயக்கத் தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கும் இயக்கத்துக்கும் கத்தி தீட்டும், தீட்டி வெளியேறிய.! தோழர்களைத் தவிர்த்து மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் – அதுவும் இயக்கத்தால் தங்கள் நலனுக்கு எந்தவித பலனும் அடையாமல் அவர் களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தை செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தெண்டர்களான இயக்கத் தோழர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.
“விடுதலை” பத்திரிகை நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்ல நிலையில் நஷ்ட மில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால் இப்போது இருப்பதைவிட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டாக வேண்டும். இதற்குப் பெரிதும் தஞ்சை மாவட் டத்தையே நம்பி இருக்கிறேன்.
ஒரு, ஆண்டுக்குள் மேலும் 5,000 சந்தா பெருகி ஆகவேண்டும், அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது உ.டனடியாக 2 மாதத்தில் 2,500 சந்தா அதிகமாகச் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும்.
இன்று நமது இயக்கம் இதுவரை இருந்த அளவை வி.ட உச்ச நிலையில் இருக்கிறது. இது உண்மை என்பது மெய்ப்பிக்க வேண்டுமானால் இதுதான் பரீட்சை. ஆதலால் நான் வீரமணி அவர்களைப் பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசையோடு ‘விடுதலை’யின் 25ஆவது ஆண்டில் அதை மறுபிறவி எடுக்கும்படி அவரிடம் ஒப்புவிக்கிறேன்.
இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை நிறை வேற்றி எங்களைப் பெருமைப்படுத்தி விடுதலையை வாழவைத்து வீரமணி அவர்களையும் உற்சாகப் படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்.
நாளை முதலே தோழர்கள் இந்தக் காரியத்தில் இறங்கி செயல்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என் பதை காட்டுவதற்கு ஆக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தா சேர்த்துத் தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

‘விடுதலை’யின் சேவையை எடுத்து விளம்புங்கள்!
நமது இயக்கம், நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள். இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக்குங்கள்.
அதிகாரிகளை, அரசாங்கச் சிறிய உத்யோகஸ்தர் களை வியாபாரிகளை, விவசாயப் பொதுமக்களை, தைரியமாய் அணுகுங்கள். வெட்கப்படாதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் இன உணர்ச்சியையும் சமுதாய நலன் உணர்ச்சியையும் பரீட்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக்குறைவு நேர்ந்து விடாது.
இரண்டு மாத காலம் 60 நாள்களில் 2500 சந்தா; தினம் 42 சந்தா; 13 மாவட்டங்களில், 100 வட்டங்கள், (தாலு காக்கள்) பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தா வீதமாகும். இதுகூட. நம் கழக முயற்சிக்கு ‘விடுதலை’ மறுபிறப்புக்கு கைகூடவில்லை என்றால் நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று இந்த வேண்டுகோளை விண்ணப் பமாக தமிழ் நாட்டு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
(6.6.1964 “விடுதலை” தலையங்கம்)
குறிப்பு: ‘ ‘விடுதலை” ஏடு நீதிக்கட்சி வாரம் இரு முறை ஏடாக 1.6.1935இல் துவங்கப் பட்டது. நாளேடாக பின்னர் வரத் தொடங் கியது. இதனைக் கணக்கிட்டு 1964இல் “வெள்ளி விழா” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment