– கலி.பூங்குன்றன் –
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
‘குடிஅரசு’ (1.9.1940) இதழில் பத்திராதிபர் அ.பொன்னம்பலனார் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ‘விடுதலை’பற்றி திருவாரூர் மாநாட்டில் தந்தை பெரியார் பேசியதை எடுத்துக்காட்டியுள்ளார்.
‘‘‘விடுதலை’க்குப் பணம் கொடுங்கள் என்று நான் உங்களுக்குத் தொந்திரவு கொடுக்கவில்லை. ஆனால், ஒவ்வொருவரும் அதை வாங்கிப் படியுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்” என்று பெரியார் சொன்னார். படிக்கவேண்டியதும் மிக அவசியம்தான். ஆனால், பத்திரிகை வெளியானால்தானே ஒருவர் வாங்கிப் படிக்க முடியும். ஆதலால், உடனே முன்வந்து உதவுங்கள். ஆங்காங்கு ‘விடுதலை’ நஷ்ட ஃபண்டு வசூலித்து அனுப்புங்கள்; நான் உங்களிடம் நேரில் வசூலுக்கு வந்தால், மன வருத்தப்படாமல், கூடியதை தயவு செய்து உதவுங்கள்.”
– அ.பொன்னம்பலம், பத்திராதிபர்,
‘குடிஅரசு’, 1.9.1940.
‘விடுதலை’யின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சந்தாக்களை கழகத் தேனீக்கள் பறந்து பறந்து சேகரித்துக் கொண்டுள்ளனர்.
‘நாங்கள் இணையத்தில் படித்துக் கொண்டு இருக்கிறோமே!’ என்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள் என்று கழகச் செயல்வீரர்கள் சொல்லுகின்றனர். அவர்களுக்குச் சமாதானம் – அ.பொன்னம்பலனாரின் அறிக்கையில் இருக்கிறது. ‘விடுதலை’ அச்சிட்டு வெளி வந்தால்தானே வலைதளத்திலோ, இணைய தளத்திலோ படிக்க முடியும்.
விளம்பரங்கள் இல்லாமல், பாமர மக்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காக சினிமா, கிரிக்கெட், சோதிடம், ஜாதகப் பலன்கள், ஆன்மிகக் குப்பைகளை வெளியிடாமல், மக்களுக்கு அறிவையும், தன்மானத்தையும், சமத்துவத்தையும், சமதர்மத்தையும், பெண்ணுரிமையையும், ஜாதி ஒழிப்பையும் தன் உயிரில் சுமந்து, ‘விடுதலை’ என்னும் தந்தை பெரியாரின் பேராயுதம் கொல்லுப்பட்டறையில் வார்த்து எடுக்கப்பட்டதுபோல் வந்து கொண்டு இருக்கிறது.
90 ஆண்டு ‘விடுதலை’க்கு 62 ஆண்டு ஆசிரி யராக இருந்து உலக சாதனை படைத்துவரும் நமது தலைவர் அவர்களிடம், ‘விடுதலை’ பிறந்த நாளில் (ஜூன் 1) வரும் சனியன்று சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் விழாவில் ‘விடுதலை’ சந்தாக்களை வாரி வழங்குவீர், தோழர்களே!
நாம் திரட்டும் சந்தா, நம் மக்களை வாழ வைப்பதோடு, நமது தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆயுள் நீட்டிப்புக்கு விலைமதிக்க முடியா அருமருந்து என்பதை மறவாதீர்! மறவாதீர்!!
No comments:
Post a Comment