புதுடில்லி, மே 25- மக்களவை 5-ஆம் கட்ட தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளனர். தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் (23.5.2024) வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தேர்தல் நடைபெற்று வருகிறது. 5-ஆம் கட்டமாக, உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு கடந்த 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 8.95 கோடி பேர் (ஆண்கள் 4.69 கோடி, பெண்கள் 4.26 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 5,409) வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 5-ஆம் கட்ட தேர்தலில் 62.2 சதவீத வாக்குகள் பதிவாகி யுள்ளன. இதில் ஆண்கள் 61.48 சதவீதமும், பெண்கள் 63 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.
பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் லடாக் யூனியன் பிரதேசத்திலும் ஆண்களைவிட பெண்களின் வாக்குப்பதிவு அதிகமாகும்.
குறிப்பாக ஜார்க்கண்ட், பீகாரில் இந்த இடைவெளி அதிகமுள்ளது. ஜார்க்கண்டில் 58.08 சதவீத ஆண்கள் வாக்களித்திருக்கும் நிலையில், அதைவிட அதிகமாக 68.65 சதவீத பெண்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி யுள்ளனர். பீகாரில் ஆண்கள் வாக்குப்பதிவு சதவீதம் 52.42-ஆகவும், பெண்கள் வாக்குப்பதிவு சதவீதம் 61.58-ஆகவும் உள்ளது.
ஒடிசாவின் கந்தமால் மக்களவைத் தொகுதியில் இரு வாக்குச் சாவடிகளில் நேற்று முன் நாளில் (23.5.2024) மறுவாக்குப்பதிவு நடைபெற்றதால், மொத்த வாக்குப்பதிவு சதவீதத்தில் மேலும் மாற்றமிருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் 5-ஆம் கட்டத் தேர்தலின்போது 51 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 64.16 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மக்களவைக்கான முதல்கட்ட தேர்தலில் 66.14 சதவீதமும் (கடந்த முறை 69.43%), இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதமும் (கடந்த முறை 69.64%), மூன்றாம் கட்டத்தில் 65.58 சதவீதமும் (கடந்த முறை 68.4%) வாக்குகள் பதிவாகின. முதல் மூன்று கட்டங்களிலும் கடந்த முறையைவிட வாக்குப் பதிவு குறைந்த நிலையில், நான்காம் கட்டத்தில் வாக்குப் பதிவு அதிகரித்தது. நான்காம் கட்ட தேர்தலில் 69.16 சதவீத வாக்குகள் பதிவாகின. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.65 சதவீதம் கூடுதலாகும்.
No comments:
Post a Comment