குஜராத் அரசின் மெத்தனத்தால் ஏற்பட்டது: உயர்நீதிமன்றம் கண்டனம்
ராஜ்கோட், மே 28 குஜராத்தில் விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 28 உயிர்கள் பலியாகின. இந்நிலையில், இந்த வழக்கை தாமாக எடுத்து விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், மாநில அரசை சரமாரியாக விமர்சித்தது. நீங்களும் (அரசு) அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். தூக்கத்தில் இருந்தீர்களா? என விமர்சித்தது.
குஜராத் மாநிலத்தின், ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் மிகப்பெரிய கேளிக்கை விளையாட்டு அரங்கம் உள்ளது. தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விளையாட்டு அரங்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகள், பொழுதுபோக்கு தளங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை இருக்கின்றன.
33 பேர் பலியான தீ விபத்து
இந்த விளையாட்டு அரங்கில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த 25.5.2024 அன்று திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ சற்று நேரத்துக்குள்ளாக விளையாட்டு அரங்கம் முழுவதும் பரவியது. இந்தப் பயங்கர தீ விபத்தில் சிக்கி தற்போது வரை 9 குழந்தைகள் உள்பட 28 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த தீ விபத்து ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை என்பதால் சிறுவர்கள், சிறுமியர்கள், பெண்கள் என பலரும் விளையாட்டுத் திடலுக்கு வருகை தந்து இருந்தனர். தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடியும், உணவு விடுதிகளுக்குச் சென்று உணவுகளை ருசித்தும் மகிழ்ச்சியாய் பொழுதை கழித்து கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.
என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்றிதழை விளையாட்டு மண்டலத்தை நடத்தி வந்த நிறுவனம் பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய அனுமதியின்றி இரண்டரை ஆண்டுகளாக டிஆர்பி கேமின் ஜோன் நிறுவனம் இயங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது. தீ அணைப்பு துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல் எப்படி இவ்வளவு பெரிய விளையாட்டு அரங்கு இயங்கி வந்தது என்பதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே டிஆர்பி கேமின் ஜோன் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் மீது ராஜ்கோட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யபட்டுள்ளனர். 4 பேர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாட்டையே அதிர வைத்த இந்த விளையாட்டு திடல் தீ விபத்து விவகாரத்தை தாமாக முன்வந்து குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது.
விசாரணையின் போது, உரிய அனுமதியின்றி இரண்டரை ஆண்டுகளாக டிஆர்பி கேமின் ஜோன் நிறுவனம் இயங்கி வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ராஜ்கோட் விபத்தைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள அனைத்து விளையாட்டு திடல்களும் உரிய விதிகளை பின்பற்றி இயங்குகிறதா என ஆய்வுகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment