பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,
ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம் செய்யப்பட்டதாம். இதற்காகப் பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.
ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயனத் தாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின்றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்தப் பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் சிறீமான்கள்சி.ராஜகோபாலாச்சாரியார், எஸ்.சீனிவாசய் யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார் களாகவும் விபூதி பூசினார்களானால் சிறீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள்,கே. நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் சிறீமான்கள் மதனமோகன மாளவியாவாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை. இவைகளுக்குச் சற்று தாமதமானாலும் சிறீமான் ஆதிநாராயண செட்டியா ராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக் கான பேருக்குப் பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்!! பெரிய அக்கிரமம்!!!
எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களைப் பார்ப்பன மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்குப் பறிகொடுக்காமல் அவர்களுக்குச் சகல உரிமை களும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய கடமையாகும்.
No comments:
Post a Comment