முப்பெரும் விழா - தமிழர் தலைவர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

முப்பெரும் விழா - தமிழர் தலைவர் கி.வீரமணி

featured image

காவி ஆட்சியின் கொடுமையை உணர்ந்த மக்கள் எல்லா மாநிலத்திலும் இருக்கிறார்கள்; இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டும்தான், தென்னாட்டில் மட்டும்தான்
பி.ஜே.பி.,க்கு, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இடமில்லை என்று சொன்ன நிலை இருந்தது
நாடு முழுவதும் அதே நிலைதான் -நாட்டின் தலைநகரான டில்லியிலேயே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இடமில்லை!
அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை!

உடையார்பாளையம், மார்ச் 17 காவி ஆட்சியின் கொடு மையை உணர்ந்த மக்கள் எல்லா மாநிலத்திலும் இருக் கிறார்கள். இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டும்தான், தென்னாட்டில் மட்டும்தான் பி.ஜே.பி.,க்கு, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இடமில்லை என்று சொன்ன நிலை இருந்தது. இப்பொழுது நாடு முழுவதும் அதே நிலைதான். நாட்டின் தலைநகரான டில்லியிலேயே அவர்களுக்கு இடமில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உடையார்பாளையத்தில் முப்பெரும் விழா!

கடந்த 10-3-2024 அன்று மாலை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில், படங்களைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
15-4-2024 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:

‘‘உங்கள் வேலை என்ட்ரி டூட்டி;
எங்கள் வேலை சென்ட்ரி டூட்டி!’’

என்னுடைய பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அவ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற் றார். நாங்கள் ஒருபோதும் கோட்டைக்குள் வர வேண்டும் என்று நினைக்கமாட்டோம்; என்ன விலை கொடுத்தேனும் எங்கள் வேலை காவல் காக்கின்ற ஒரே வேலைதான்.
நான் முதலமைச்சரை வைத்துக்கொண்டே சொன்னேன், ‘‘உங்கள் வேலை என்ட்ரி டூட்டி; எங்கள் வேலை சென்ட்ரி டூட்டி” – உள்ளே உங் களை அனுப்பிவிட்டு, நாங்கள் வெளியில் நின்று பாதுகாக்கின்ற பணிதான் எங்களுடையது” என்றேன்.

இந்தப் பணியைத்தான் அன்றைக்கு முன் னோட்டமாக செய்தவர்கள் – அவர்கள் போட்ட அந்த அடித்தளத்தின்மீதுதான் நாம் இவ்வளவு துணிச்சலாக இருக்கிறோம்.
எந்த ஒரு சிறிய செய்தியை சொன்னால்கூட, அதில் மிகக் கவனமாக இருக்கின்றோம்.
இப்பொழுது உள்ள பிரதமர் போன்று, அன்றைய பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு நடிக்கத் தெரியாது!

வாஜ்பேயி அவர்கள் கிராமத்திற்குப் போகிறார்; ஒரு அம்மையார் பெரிய அளவில் கிராமத்தில் சாதனை செய்திருக்கிறார். அவருடைய பெயர் சின்னப்பிள்ளை. அந்த சின்னப்பிள்ளை அம்மையாரின் காலில், பிரதமர் வாஜ்பேயி அவர்கள் விழுந்தார். இப்பொழுது உள்ள பிரதமர் போன்று, அன்றைய பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு நடிக்கத் தெரியாது.

‘‘நடிப்பிற்கு ஆஸ்கார் பரிசு கொடுக்கிறோம்” என்று சொன்னால், அந்தப் போட்டியில் இன்றைய பிரதமர் மோடிதான் முதலில் வருவார், அதிலொன்றும் சந்தேக மேயில்லை.

அவரிடம் அவார்டு வாங்குகிறார்கள் பாருங்கள், அவர்களுடைய காலில் விழுகிறார் பிரதமர் மோடி. எங்கேயும் விழுவார். கடைசியாக விழப் போவது எங்கே என்றால், தமிழ்நாட்டில்தான்.

சின்னப்பிள்ளை அம்மையாருக்கு வீடு கொடுக்கி றேன் என்று சொன்னார்கள்; அந்த அம்மையாருக்கும் வயதாகிக் கொண்டே போயிற்று.
‘வீடு’ என்றால், மேலே கையைக் காட்டினார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்று அவர்கள் சொல் வார்கள்.
எங்களுக்கு இது; சின்னப்பிள்ளை அம்மையாருக்கு அது என்றார்கள். இதுவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை போன்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக – இந்தச் செய்தியைக் கேட்ட நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாவட்ட ஆட்சியரை அழைத்து, அந்த அம்மையாருக்கு உடனடியாக வீடு கட்டிக் கொடுங்கள் என்று சொன்னார்.

சொன்னதையும், சொல்லாததையும் சேர்த்து செய்யக்கூடிய ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி!

இன்றைக்கு சொன்னதையும், சொல்லாததையும் சேர்த்து செய்யக்கூடிய ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி.
யாரோ சொன்னதை, இவர் செய்கிறார். நாங்கள் சொன்னதைதான் செய்வோம் என்பதில்லை; நாங்கள் சொன்னதையும் செய்வோம்; நீங்கள் செய்யாததையும் நாங்கள் செய்வோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சி நடக்கிறது.
ஆகவேதான், மிகுந்த நம்பிக்கையோடு நம் குடும்பங் கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு இருக் கிறது. இப்படிப்பட்ட ஆட்சி கிடைப்பதென்பது அரி தென்பதால் அதனைப் பற்றிவிடவேண்டும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்று சொல்வதுபோன்று, எங்களைப் போன்ற பற்றற்றவர்கள் அதனைப் பற்றிக் கொண்டிருப்பதினுடைய நோக்கம் எங்களுக்காக அல்ல – உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக!

எல்லோருக்கும் வழிகாட்டக் கூடிய அளவிற்கு ஆற்றலும், திறமையும் உள்ளவர்கள்!

நம்முடைய பிள்ளைகள் படித்துவிட்டு, அமெரிக்கா விலும், லண்டனிலும், மற்ற வெளிநாடுகளிலும் பணி யாற்றுகிறார்கள். அறிவில் நாம் எவருக்கும் குறைந்த வர்கள் அல்ல. எல்லோருக்கும் வழிகாட்டக் கூடிய அளவிற்கு ஆற்றலும், திறமையும் உள்ளவர்கள் என்று காட்டியிருக்கிறோமோ – அதேபோன்றுதான் இந்தப் பாராட்டு விழா!

ஆகவே, அத்துணை பேருக்கும், அவர்களின் பெயர் களை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.
நம்முடைய நீலமேகன் அவர்களோடு உரையாடிக் கொண்டு வரும்பொழுது, இந்த மாவட்டத்தில் முந்திரி பருப்பு விளைச்சல் அதிகம். நான் இங்கே வரும்பொழு தெல்லாம், எனக்கு முந்திரி பருப்புதான் கொடுப்பார்கள்.
அய்யாவிற்கு முதன்முதலில் எடைக்கு எடை முந்திரிப் பருப்பு கொடுத்தது இரும்புலிக்குறிச்சியில்தான்!
நம்முடைய சர்வாதிகாரிபற்றி சொன்னார்கள். அய்யாவிற்கு முதன்முதலில் எடைக்கு எடை முந்திரிப் பருப்பு கொடுத்தது இரும்புலிக்குறிச்சி யில்தான். எல்லாப் பொருள்களும் கொடுத்திருக் கிறார்கள்.

முந்திரி பருப்புக்குப் போதுமான அளவிற்கு விலை இல்லை. அதுகுறித்து நாங்கள் பேசிக்கொண்டு வந் தோம்.
அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார்,

‘‘சிந்திரித் தொழிலும் சிறக்கிறது வடக்கே – முந்திரித் தொழில் சிதைகிறது தெற்கே” என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எழுதிய வாசகம் அது.
இங்கே சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அய்யா வழக்குரைஞர் கு.சின்னப்பா அவர்கள் இருக்கிறார்; கா.சொ.க.கண்ணன் அவர்களும் இருக்கிறார்.எல்லோருக்கும் சட்டத் திட்டத்தை வகுக்கக் கூடியவர் இருக்கிறார். நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம் போல் இருக்கக் கூடிய சூழ்நிலையில், இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், இதற்குப் பாதுகாப்பு ஏற்படுத்துவது நம்முடைய பணி யாகும். விவசாயப் பணி அல்லவா! விவசாயப் பணியை சூத்திரர்கள் பணி என்றார்கள்.

‘‘திராவிட முந்திரி விவசாயிகள்
பாதுகாப்பு அமைப்பு!’’

எனவே, இதற்கு ஒரு பாதுகாப்பு வரவேண்டும் என்றால், ‘‘திராவிட முந்திரி விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பு” என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, அதில் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கவேண்டும்.
தென்னாற்காடு மாவட்டத்தில், முதன்முதலில் வேர்க் கடலைக்காக – ‘‘கிரவுன்நெட் மார்க்கெட்டிங் கமிட்டி” என்ற ஓர் அமைப்பை கூட்டுறவுத் துறையில் உருவாக்கி நடத்தினார்கள்.

அதன்மூலமாகத்தான், குறைந்த நிலையை நிர்ண யித்தார்கள். ‘‘உடும்பு வேண்டாம்; கை வந்தால் போதும்” சொல்லக்கூடிய அளவிற்கு இருந்த நிலையை மாற்றி னார்கள். அதேபோல, இங்கு அதை செய்யவேண்டிய நிலை இருக்கிறது.
குறைந்தபட்ச நிர்ணய விலையை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு வேண்டிய வாய்ப்பு வசதிகளை செய்துகொடுக்கவேண்டும். முந்திரி பருப்பினை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஆய்வினை செய்வதற்குத் தயாராக இருக்கிறது!

அதற்கு எந்தவிதமான ஆய்வுகள் செய்யவேண்டு மானாலும், பல பல்கலைக் கழகங்கள் தயாராக இருக்கின்றன. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் அந்த ஆய்வினை செய்வதற்குத் தயாராக இருக்கிறது. பாலிடெக்னிக் தயாராக இருக்கிறது.

இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய இயற்கை வளம் மூலமாக, தொழில்வளம் பெருகவும் – பிற மாவட்டங் களில் இருப்பவர்களுக்கும் வேலை வாய்ப்பினைக் கொடுக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பை உருவாக்கலாம். அதற்கும் இந்த நாளிலே உறுதியேற்போம்!
அதற்குவேண்டிய பணிகளைச் செய்வோம். ஏனென் றால், மக்கள் குரல் எங்கே கேட்கிறதோ, எங்கே நியாயங் களை நாம் எடுத்துச் சொல்லுகிறோமோ, அதனைப் பற்றிக்கொண்டு செய்யக்கூடிய ஆற்றல், இன்றைய நம்முடைய திராவிட மாடல் ஆட்சியினுடைய திராவிட நாயகர் – எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஒப்பற்ற முத லமைச்சர் அவர்களுடைய தலைமையில் இவ்வாட்சி நடக்கின்ற காரணத்தினால், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடக்குமா? என்று கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

‘‘ஒரே தேர்தல், ஒரே தேர்தல்” என்று சொன்னார்கள்; இதற்கு முந்தைய தேர்தலைத்தான் ஒரே தேர்தல் என்று அவர்கள் சொன்னார்களா? அல்லது இப்பொழுது நடக்கக் கூடிய தேர்தலைத்தான் ஒரே தேர்தல் என்று சொல்கிறார்களா? என்று தெரியவில்லை.
தேர்தல் ஆணையர் திடீர் திடீரென்று காணாமல் போய், ஒரே ஒரு தேர்தல் ஆணையர்தான் இருக்கிறார்.
ஒரே தேர்தல், ஒரே அரசு, ஒரே கலாச்சாரம் எல்லாம் ஒரே, ஒரே, ஒரே என்று போய், இப்பொழுது ஒரே தேர்தல் ஆணையர். அவர்கூட நாளைக்கு என்ன ஆவார் என்று தெரியாது.

இப்படியெல்லாம் இருக்கக்கூடிய சூழலில், நம்மு டைய நிலை மிகத் தெளிவாக இருக்கவேண்டும்.

பிரதமர் மோடி கொடுக்கும் ‘கேரண்டீ’
அது சாதாரண ‘டீ’ அல்ல!

எனவேதான், இந்த நேரத்தில் உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்வதெல்லாம், தமிழ்நாடு – புதுச்சேரியை சேர்த்து 40-க்கு 40 என்பது உறுதியானது என்பது மட்டுமல்ல நண்பர்களே – பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது – ஏற்கெனவே அவர் பல டீக்கடைகளை தயார் செய்தார். ஆனால், இப்பொழுது அவர் கொடுக்கின்ற ‘டீ’ இருக்கிறதே, நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள் தொலைக்காட்சிகளில் – ‘கேரண்டீ’ அது சாதாரண ‘டீ’ அல்ல.
டில்லியில் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள் – இந்த கேரண்டீக்காகத்தான்; ஏற்கெனவே நீங்கள் சொன் னீர்கள் – குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கி றோம்; விவசாயிகளின்மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுகிறோம் போன்ற பல கேரண்டீக்களைக் கொடுத்தீர்கள்- ஆனால், சொன்னபடி செய்யவில்லையே என்பதற்காகத்தான்.
ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுகிறோம்; ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுப்போம் என்ற வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்கட்டும்.

எதைப்பற்றியும் நம்முடைய பிரதமர் மோடி கவலைப்படமாட்டார்!

விவசாயிகள், தலைநகர் டில்லிக்கே வரக்கூடாத என்ற அளவில், இரும்பு வேலித் தடுப்புகளை ஏற்படுத்தி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுகிறார்கள். விவசாயி கள் பலியாகியிருக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றி நம்முடைய பிரதமர் மோடி கவலைப்படமாட்டார்.
மணிப்பூர், பக்கத்தில்தான் இருக்கிறது. ஆனால், நம்முடைய பிரதமர் அவர்கள், யானைமீது ஏறி, பைனாகுலர் வைத்துக்கொண்டு யார் வருகிறார்கள் என்று பார்க்கிறார்.

எந்தக் கட்சி பா.ஜ.க. கூட்டணிக்கு வரும் என்று பைனாகுலர் வைத்துப் பார்க்கிறார்கள்!

அவர் ஏன் பைனாகுலர் வைத்துப் பார்க்கிறார் என்றால், எந்தக் கட்சி நம்முடைய கூட்டணிக்கு வருகிறது என்று தேடுகிறாரோ, என்னவோ? சாதாரண மாகப் பார்த்தால் அவருக்குத் தெரியவில்லை. இந்நிலை அவர்களுக்குத் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருந்தது. இப்பொழுது கிழக்கே, வடக்கேயும் இதே நிலைதான். காஷ்மீருக்கு இவர் சென்றபொழுது, அதிகாரிகள், அரசு ஊழியர்கள் எல்லாம் வந்தாகவேண்டும் என்று ஆணை போட்டு இருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் சூழ்நிலை இருக்கும்பொழுது, தேர்தலை நடத்தித்தான் ஆகவேண்டுமா? அல்லது வேறு ஏதாவது வித்தையை உண்டாக்கலாமா? என்று நினைக்கிறார்கள்.

வித்தையிலேயே மோடி வித்தைதான் மிகச் சிறப்பான வித்தை. ஆகவே, அந்த வித்தையைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள்.
நாடு முழுவதும் அதே நிலைதான்!

காவி ஆட்சியின் கொடுமையை உணர்ந்த மக்கள் எல்லா மாநிலத்திலும் இருக்கிறார்கள். இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டும்தான், தென்னாட்டில் மட்டும்தான் பி.ஜே.பி.,க்கு, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இடமில்லை என்று சொன்ன நிலை இருந்தது. இப்பொழுது நாடு முழுவதும் அதே நிலைதான்.
நாட்டின் தலைநகரான டில்லியிலேயே அவர்களுக்கு இடமில்லை; பஞ்சாபில் அவர்களுக்கு இடம் இல்லை. சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில், தேர்தல் ஆணைய அதிகாரியைக் கையில் போட்டுக்கொண்டு, ‘‘பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்” என்று சொல்ல வைத்தார்கள். ஆனால், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணைய அதிகாரியினுடைய காதைப் பிடித்துத் திருகி, நடவடிக்கை எடுத்து, சண்டிகர் மேயர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்தான் என்று ஆணி அடித்தாற்போல் சொல்லிற்று.

அதனால்தான் தேர்தல் கூட்டணி என்பது ஓரணியாக வந்தாலும்கூட, இன்னொரு பக்கம் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறி.

இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய மண் –
திராவிட மண்தான்- பெரியார் மண்தான்!

எது நடந்தாலும், இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய மண் – திராவிட மண்தான்- பெரியார் மண்தான் – அந்த மண்ணைப் பக்குவப்படுத்துவதற்காக உழைத்தவர்கள்தான் – தியாகம் செய்தவர்கள்தான் – உடையார்பாளையம் வேலாயுதங்களும், உழைத்த தமிழ்மறவர் பொன்னம்பலனார்களும்.
எனவே, அவர்களின் பெயரால் சூளுரைப்போம் –
புதியதோர் ஒன்றிய ஆட்சி உருவாக்க ஒத்துழைப்போம்!
அவர்களுடைய தியாகம் வீண் போகாது!
மீண்டும் மீண்டும் புதிய புதிய உணர்வுகளை உருவாக்குவோம்!

சமூகநீதியும், சுயமரியாதையும், பகுத்தறிவும் என்றைக்கும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மாணவர் ஒருவர் எழுதிய கவிதை!

அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் படிக்கின்ற அறிவு நிதி என்பவர் மேடையில் கவிதை ஒன்றை வாசித்தார்.
‘‘ஆண்டவனும் மாண்டவனும்
மண்ணிலே இல்லை!
அதைத் தெரிஞ்சுக்காமல்
வாழ்பவன் மனிதன் இல்லை!
கருவறையில் இருப்பதெல்லாம்
கடவுள் இல்லை!
அதைக் கண்டவன்தான்
கடவுளென்று சொல்வதுமில்லை!
பாதி உடம்பில் நூலைப்போட்டு
வாழத்தான் பார்ப்பான்
அவன் பாமரனைப் பணிய வைத்து
வேடிக்கைப் பார்ப்பான்!
தளபதியின் தலைமையில்
ஓரணியாய் நிற்போம்!
ஆரியனா, திராவிடனா
மோதியே பார்ப்போம்!
வெல்லுவது யாரென்று
இறுதியில் பார்ப்போம்!”

ஆசிரியர் வேலாயுதம் மண் எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள். தமிழ் மறவர் உருவாக்கிய உணர்வு எப்படிப்பட்டது என்பதைப் பார்த்தீர் களா?
இப்படித்தான் அந்த உணர்வுகள் இருக்கும். இது ஆயிரங்காலத்துப் பயிர் – இதை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது, பெயர்க்க முடியாது.
எனவேதான், அவர்கள் வாழ்கிறார்கள், மறையவில்லை!

 

 

No comments:

Post a Comment