ஜாதி, மத உணர்வுகளுக்கும், போதை பழக்கத்திற்கும் மாணவர்கள் ஆளாகக் கூடாது! : மாணவர்களிடையே தமிழர் தலைவர் உரை
சென்னை, மார்ச் 13 சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி வீரமணி பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 12.03.2024 அன்று காலை 10:30 மணியிலிருந்து மாலை 5:30 வரை நடைபெற்ற ஊடகத்துறைக் கல்வி தொடர்பான ஒரு நாள் பயிற்சிக்காக திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் தமிழ்த் துறையிலிருந்து இருபால் மாணவர்கள் 49 பேர் கலந்து கொண்டனர். பேராசிரியர் முனைவர் ஜெயசித்ரா, முனைவர் அன்பரசன், பெ.சுனந்தன் ஆகியோர் மாணவர்களுடன் வந்திருந்தனர்.
காலை 10:30 மணிக்கு வருகை தந்த மாணவர்களை கழகத்தின் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் வரவேற்று ஒரு நாள் பயிற்சியாக இங்கு என்னென்ன வகுப்புகள் நடைபெற உள்ளன. யார் யார் பாடங்களை பயிற்றுவிக்க உள்ளனர் என்று விவரித்து வகுப்பாசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார். முதல் வகுப்பாக “ஊடகமும், ஊடகக் கல்வியின் அவசியமும்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர், கல்வி யாளர், சன் செய்திகள் மேனாள் செய்தி வாசிப்பாளர் பேராசிரியர் அபுல்ஃபைஸ் பாடம் நடத்தி நுட்பமான சில கருத்துகளை மாணவர் களிடம் கலந்துரையாடியபடி பாடம் நடத்தினார். அதைத் தொடர்ந்து, பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் பொறுப்பாளர் தமிழ் கா. அமுதரசன் தமிழ்த்துறை மாணவர்கள் என்ப தால் குறுகிய வட்டத்திற்குள் இலக்கு நிர்ணயித்துக் கொள்ளாமல் அய்.ஏ.எஸ் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக் காட்டிப் பேசினார். அதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட உண்மை சரிபார்க்கும் வல்லுநர் முரளிக்கிருஷ்ணன் சின்னத்துரை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட ஏராளமான வாய்ப்புகள் தமிழ்த்துறை மாணவர்களுக்கு காத்திருப்பதைச் சுட்டிக்காட்டி பாடம் நடத்தினார்.
அதைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மாணவர்களிடையே உரையாடினார். அதில் ஜாதி, மத உணர்வுகளுக் கும், போதைப் பழகத்திற்கும் ஆட்படக் கூடாது என்று வலியுறுத்திப் பேசினார். மேலும் அவர், திராவிடர் இயக்கத்தின் கல்வி சாதனை களை, பயிற்சியில் கலந்துகொண்டிருக்கும் மாணவர் களை வைத்தே தெளிவுபடுத்தினார். வகுப்பு முடிந்தவுடன் பேராசிரியர் ஜெயசித்ரா ஆசிரிய ருக்கு கைத்தறி ஆடையணிவித்து மகிழ்ந்தார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின், எடிட்டோரியல், அச்சகம், பெரியார் காட்சியகம், பெரியார் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் நேரிடையான பயிற்சி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் கழகத் தின் வெளியிடப்படும் இதழ்களை அறிமுகம் செய்வித்துப் பேசினார். ஒவ்வொரு இதழின் நோக்கம், தன்மை, வேறுபாடுகள் குறித்து விளக்கினார். இறுதியாக கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாணவர் களுக்கு பெரியாரையும், திராவிடர் இயக்கத் தையும் அறிமுகம் செய்து வைத்தார். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் துணைத் தலைவர் கழக இதழ்களுடன் சான் றிதழ் வழங்கி வாழ்த்தினார். பேராசிரியர் ஜெய சித்ரா இந்த ஒரு நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்த அனை வருக்கும் தனித்தனியாக நன்றி கூறினார்.
அச்சகப் பிரிவு மேலாளர் சரவணன், அச்சக மேற்பார்வையாளர் பிரபாகரன், உடுமலை வடிவேல், வை. கலையரசன், சோ. சுரேஷ், எம்.ஆர்.ராதா மன்றம் பொறுப்பாளர் ரங்கநாதன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment