ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1: தேர்தல் அறிக்கை என்பது எப்படி இருக்கவேண்டும்?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 1 : 1. பின்னால் பொறுப்புக்கு வரும்போது தவறாமல் செயல் மலர்களாக மலரக்கூடியதாக இருக்க வேண்டும்.
2. கொள்கை, லட்சியங்களுக்குரிய திட்டங்களின் வெளிச்சங்களாக இருக்க வேண்டும்.
3. மக்கள் நலம் சார்ந்ததாக, அது ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதி, மனிதர்களின் சமத்துவமும், சரித்திரமும் போட்டி போடவேண்டியதாக அமைய வேண்டும்.
வித்தைகள் காட்டுவதாக இருக்கக் கூடாது!

கேள்வி 2: பிரதமர் மோடி இப்பொழுது அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறாரே, அதற்கு என்ன காரணம்?
– நா.கந்தன், தென்காசி
பதில் 2 : பொதுத் தேர்தலில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கியாக வேண்டுமே, தமிழ்நாட்டில், ‘நோட்டாவை’த் தாண்ட வேண்டுமே என்ற கவலையால்தான் அவர் அடிக்கடி வருவதோடு ஒவ்வொரு முறையும் நிதானத்தை இழந்து வருவது அவரது உரைகள் மூலம் தெளிவாகிறதே!

—-

கேள்வி 3: தந்தை பெரியார், பதவிக்கு ஆசைப்படாமல், தொண்டு செய்தார். ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் தொண்டைவிட, முதலில் பதவிக்கு ஆசைப்படுவது குறித்து…?
– செல்வம், செங்கல்பட்டு
பதில் 3 : அதனால்தான் அவர் பெரியார்! அவருடன் மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கலாமா – அதுவும் இன்றைய அரசியலில்.


தான் வகித்த 29 பதவிகளை – அந்நாளில், ஒரே தாளில் ‘ராஜினாமா’ எழுதிக் கொடுத்த தொண்டுக்கு எது நிகர்? துவக்கத்தில் அவர் கண்ட சுயமரியாதை இயக்கத்திற்கு அவரது சொந்தப் பணத்தைச் செலவு செய்து, மறையும்போது அவ்வளவு சொத்தையும் பொது அறக்கட்டளையாக்கி, சொந்த பந்தம் பாராது மக்களுக்கு என்று ஆக்கியவர் ஆயிற்றே!
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அய்யாவின் அடிச்சுவட்டையே பின்பற்றியவர் அல்லவா?

கேள்வி 4: மதுவை ஒழிக்க முடியவில்லை; இப்போது போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாகி வருகிறதே, இதில் ஈடுபடும் சமூக விரோதிகளைத் தண்டிப்பது எப்படி?
– கி.வெங்கடேசன், கள்ளக்குறிச்சி
பதில் 4 : 1. பிரச்சாரம். 2. கடுமையான தண்டனை. என்றாலும் எளிதல்ல. துறைமுகங்கள், விமான நிலையங்கள் வழி, சாவு ஊர்தியில் கூட வலம் வருகிறதே. எனவே, கடுமையான நடவடிக்கைகள் மூலமே தடுக்க முடியும்!

கேள்வி 5: ‘இந்தியா’ கூட்டணிக்கு முகம் தேவை என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறாரே?
– கே.அசோக், மதுரை


பதில் 5 : அது அவர் கருத்து; இப்போதுள்ள முகங்களே போதும்; யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதே சரியான நடைமுறை – தேர்தல் பணி! பொது எதிரியை அடையாளம் காட்டினால் மற்றவை தானே அமையும்.

கேள்வி 6: இளைஞர் – வாலிபர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில் 6 : பரிணாமத்தின் பல பெயர்கள் அவ்வளவே! எல்லா இளைஞர்களும், வாலிபர்களும் போதிய உழைப்புடன் இருந்தால் ஒரே நாணயம் போன்றவர்கள். வயது சரியான அளவுகோல் அல்ல!

கேள்வி 7: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்பொழுதெல்லாம் சாலையில் நின்று பூ மழை பொழிவதற்கு ஆட்களைப் பணம் கொடுத்து அழைத்து வருகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக அவாளின் ‘இனமலரே’ செய்தி வெளியிட்டுள்ளதே?
– கு.ஜெகன், கும்மிடிப்பூண்டி
பதில் 7 : பூக்கடைக்காரர்களாவது மோடி ஆட்சியில் செழிக்கட்டும்!

கேள்வி 8: “தி.மு.க.வை அழிப்பேன், ஒழிப்பேன்” என்று பிரதமர் கூறுவது அவர் வகிக்கும் உயர் பதவிக்கு அழகா?
– எஸ். பத்ரா, சுங்குவார்சத்திரம்
பதில் 8 : அழகல்ல; தரமும் அல்ல! இப்படி சவால் விட்டவர்கள்தான் கடைசியில் காணாமல் போயிருக்கிறார்கள். பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

கேள்வி 9: தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கட்சிகள் பிரிந்திருப்பது, தி.மு.க. கூட்டணிக்குக் கிடைக்கும் வாக்கு வங்கியை சிதறடிப்பதற்குத்தானா?
– மு.அப்பு, உதகை
பதில் 9 : தி.மு.க. கூட்டணி காலத்தின் கட்டாயம்! நீங்கள் சற்று மாற்றியும் யோசிக்கலாமே!

No comments:

Post a Comment