புதுடில்லி, மார்ச் 6 “தனது சந்தேகத் துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்ப தற்காக நாட்டின் மிகப் பெரிய வங்கியை மோடி அரசு பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங் களை வெளியிட கூடுதல் அவகாசம் வேண்டி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஅய்) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ள தேர்தல் பத்திங்கள் குறித்த விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக் குள் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை வெளியிட ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி எஸ்பிஅய் வங்கி உச்ச நீதிமன்றதில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. எஸ்பிஅய்-யின் இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தேர்தல் பத்திரங்களைப் பொறுத்த வரை அது வெளிப்படைத் தன்மை இல்லாதது. ஜனநாயக விரோத மானது என்பதே காங்கிரசின் நிலைப்பாடு. மோடி அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலமாக செய்த தங்களின் சந்தேகத் துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய வங்கியை பயன்படுத்துகிறது. மோடி அரசின் கருப்புப் பணத்தை மாற்றும் திட்டமான தேர்தல் பத்திரம் திட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறுவது, சட்டவிரோதமானது எனக் கூறியிருந்த உச்சநீதிமன்றம் நன்கொடையாளர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், பாஜக அந்தத் தகவல்கள் ஜூன் 30 ஆம் தேதிக்கு பின்னர் வெளியிடப்படுவதையே விரும்புகிறது. தற்போது இருக்கும் மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எஸ்பிஅய் வங்கி ஜூன் 30 ஆம் தேதி தகவல்கள் பறிமாறப்படுவதை விரும்புகிறது.
இந்தத் திட்டத்தின் மூலமாக பாஜகதான் அதிக பலனடைந்துள்ளது. இந்த மறைமுகமான தேர்தல் பத்திரங்களுக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டாளிகளுக்கு நெடுஞ்சாலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட பாஜகவின் நிழல் உறவை அரசு வசதியாக மறைக்கப் பார்க்கிறதா?
நன்கொடை வழங்கியவர்களின் 44,434 தானியங்கித் தரவுகளை 24 மணி நேரத்தில் வெளியிட்டு, அதை பொருத்தியும் பார்க்க இயலும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், எஸ்பிஅய்க்கு ஏன் கூடுதலாக 4 மாதங்கள் தேவைப்படுகிறது?
தேர்தல் பத்திரம் திட்டம் வெளிப்படைத் தன்மை இல்லாதது, ஜனநாயக விரோதமானது, சமநிலையை சீர்குலைக்கிறது என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது. ஆனால் மோடி அரசு, பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகமும் பாஜகவின் கஜானாவை நிரப்புவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம் மூலம் எதிர்க்கட்சிகளை எல்லா சூழ்நிலைகளிலும் அழிக்கவே நினைக்கிறது. பாஜக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அழிக்க எஸ்பிஅய் வங்கியை பயன்படுத்த நினைக்கிறது” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரி கூறுகையில், “தேர்தல் பத்திரங்கள் மீதான மோசடியில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி தப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. நாட்டின் பொதுத் தேர்தலுக்கு முன்பு, யாரெல்லாம் (கட்சிகள்) யாரிடமிருந்து என்னவெல்லாம், எவ்வளவு எல்லாம் பெற்றார்கள் என்பதை மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment