167 ஆண்டுகால வரலாறு படைத்த சென்னை பல்கலைக் கழகம் தத்தளிக்கிறது! - தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

167 ஆண்டுகால வரலாறு படைத்த சென்னை பல்கலைக் கழகம் தத்தளிக்கிறது! - தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி

featured image
♦ 167 ஆண்டுகால வரலாறு படைத்த சென்னை பல்கலைக் கழகம் தத்தளிக்கிறது!
♦ தமிழ்நாடு ஆளுநர் தலையீட்டால் துணைவேந்தரே இல்லாது நடக்கும் சென்னை பல்கலைக் கழகம்!
♦ ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து
பல்கலைக் கழகங்கள் செம்மையாக நடைபெற நிரந்தரத் தீர்வு காண வேண்டுகோள்!
நிதி நெருக்கடியிலிருந்து மீட்ட முதலமைச்சருக்கு நன்றி!
தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
சென்னை பல்கலைக் கழகத்தை நிதி நெருக்கடி யிலிருந்து காப்பாற்றிய தமிழ்நாடு முதலமைச் சருக்கு நன்றி! சென்னை உள்ளிட்ட பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டில் குழப்பங்கள் நீக்கப்பட்டு, ஆளுநர்கள் தலையிடாத நிலையை உருவாக்கிட, ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து, பல்கலைக் கழகங்கள் செம்மையாக நடைபெற நமது முதலமைச்சர் ஆவன செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக் கழகங்களுக் கெல்லாம் தாய்ப் பல்கலைக் கழகம் சென்னை பல்கலைக் கழகம்!
தொடக்கத்தில் (1857) பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் – இந்தியாவில் நிறுவப்பட்ட மூன்று பல்கலைக் கழகங்களில் இது ஒன்றாகும்.
167 ஆண்டு வரலாறு படைத்த 
சென்னை பல்கலைக் கழகம்!
167 ஆண்டுகளாக இயங்கிவரும் இப்பல்கலைக் கழகம் உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக, அதன் ஆற்றல் வாய்ந்த துணைவேந்தர்களாக டாக்டர் சர்.ஏ.லட்சுமணசாமி (முதலியார்), கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தரவடிவேலு, டாக்டர் மால்கம் ஆதிக்ஷேய்யா போன்ற பல கல்வி அறிஞர்கள் இருந்த பெருமைக்குரிய பல்கலைக் கழகம்.
இப்பல்கலைக் கழகத்தில், அண்மைக்காலத்தில் காவி ஆட்சி ஆளுநர்கள் வேந்தர்கள் என்ற ஒரு வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமிழ்நாடு உயர்கல்வித் துறையை தங்களது ஆதிக்கத் துறை போல் நினைத்து, மக்களால் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் போன்ற பொறுப்பில் உள்ளவர்களை, உரிய அதிகாரத் துடன் செயல்படவிடாமல், ‘‘தானடித்த மூப்பாகவே” தன்னிச்சை ராஜ்ஜியத்தை நடத்தி, காவிக் கொள்கை யாளர்களைக் தேடிக் கண்டுபிடித்து, துணைவேந்தர் களாக நியமிக்கும் ஒரு மரபு மீறிய செயலை, தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக (கலைஞர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்ததற்குப் பிறகு -எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான காலத்திலிருந்து) நடத்தியதின் விளைவுதான், நிர்வாகக் குளறுபடிகளும், சென்னை பல்கலைக் கழகம் மட்டுமல்ல, பல தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தொடங்கி, சேலம் பெரியார் பல்கலைக் கழகம் வரை தொடர் கொடுமையாகவே நீடிப்பது மிகப்பெரிய அவலமாகும்.
தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் 
நடத்தும் ஆளுநர்
இதற்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர் நியமனம் பற்றிய சட்ட வரைவு – மசோதாவை – இன்று தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசு போலவே அரசமைப் புச் சட்ட விதிகளுக்கும், மரபுகளுக்கும், மாண்புகளுக்கும் விரோதமாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, எல்லாவற்றிலும் தமிழ்நாடு அரசுக்கு எதிரான ஓர் எதிரிக்கட்சித் தலைவர்போல் சட்டமன்றத்திற்குள்ளும், வெளியேயும் நடந்து வருவது நாடறிந்த அரசியல் அநியாயங்களில் முதன்மையானது!
இதற்கு முழு உந்து சக்தி எங்கே இருந்து இன்று ஓய்வு பெற்ற பதவியாளர்களுக்கு வருகிறது என்பதும் உலகறிந்த உண்மையாகும்.
இவ்வளவு பிரபலமான சென்னை பல்கலைக் கழகத்தில், நிதி நெருக்கடி ஏற்பட்டு, கடந்த 9 ஆண்டு களாக வருமான வரி கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, பல்கலைக் கழகத்தின் வங்கிக் கணக்குகளின் செயல்பாட்டை சில வாரங் களுக்குமுன் வருமான வரித் துறை முடக்கியது.
இதனால் பேராசிரியர்களுக்கு, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல், சென்னை பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்திற்குச் சிக்கல் ஏற்பட்டது.
துணைவேந்தர் நியமனக் குழுவும் – 
ஆளுநரின் குறுக்குச்சாலும்!
துணைவேந்தர் பதவி நியமன தேடல் குழு, நியமனக் குழு போன்றவற்றில் ஒரு குறுக்குச்சால்விட்டு, சட்ட விரோதமாக ஆளுநர் செய்ததால், புதிய துணைவேந்தர் இன்றி, ஒரு கமிட்டி நிர்வாகம் தொடருகிறது!
சென்னை பல்கலைக் கழகம் இதுவரை தனது அலுவலர்களுக்கு, பேராசிரியர்களுக்கு, ஓய்வு பெற்றவர் களுக்கு மாதாந்திர ஓய்வூதிம் உள்பட நிறுத்திய வரலாறே கிடையாது!
இதுகுறித்து வேந்தர் என்று மார்தட்டும் ஆளுநர், வேடிக்கை பார்த்தது தவிர, ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதாகத் தெரியவில்லை.
இந்த நிலைமைகளுக்குக் காரணம், இவர்கள் பல்கலைக் கழகத்தைக் காவி மயமாக்க களமாடியதே, முக்கியமாகும்!
சென்னை பல்கலைக் கழகத்தின் கண்ணீரைத் துடைத்த இரக்கக் குணம் படைத்த நமது முதலமைச்சர்!
பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவின் உடன் பிறந்த சகோதரரான பேராசிரியர் நட்டா என்பவரை, சென்னை பல்கலைக் கழகத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையில் ஒரு உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டு, சென்ற சில ஆண்டுகளில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவருக்கு அமைச்சருக்கு அளிக்கப் படும் அளவுக்கு வரவேற்பைத் தந்தார், விடைபெற்றுச் சென்ற துணைவேந்தர் கவுரி என்பவர். (இவர்மீது வழக்கும் உள்ளது).
இந்த நிதிச் சிக்கலை ஏன் இந்த ‘‘மேதைகள்” தீர்க்க உதவிடவில்லை?
இப்போது பல்கலைக் கழகத்தின் கண்ணீரைத் துடைக்க, நமது முதலமைச்சர் அவர்களது ஆணைப்படி, உயர்கல்வித் துறை அமைச்சர் பிறப்பித்த ஓர் ஆணை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் துன்பத்தை நீக்கும் வகையில், உயர்கல்வித் துறை அதிகாரிகள் விவேகத்துடன் கூடிய வேக நடவடிக்கை எடுத்து – வருமான வரித் துறை முடக்கிய பல்கலைக் கழக வங்கிக் கணக்குகள் மார்ச் ஒன்றாம் தேதி மதியம் விடுவிக்கப்பட்டது. மூச்சுத் திணறலை ஆக்சிஜன் குழாய்மூலம் தீர்த்த நல்வாய்ப்பு!
நீதிபதி – கல்வியாளர் கொண்ட குழு தேவை!
வரலாறு காணாத இந்த நெருக்கடி திடீரென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி போல் ஆனதை – உடனடி சிகிச்சையை தமிழ்நாடு அரசு, அதன் முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் மூலம் செய்ததின் விளைவு – மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து அது பொது நோயாளிகளின் பகுதிக்கு (General Ward) வந்த நோயாளியாக குணப்படுத்தப்பட்டு வருவதைப் போன்ற நிலை வந்துள்ளது. இது முதல் கட்டம்தான்!
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி செலுத்தும் வேளையில், இப்படிப்பட்ட அவலத்தை, ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ ஒரு நிரந்தரத் தீர்வு காண ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, அனுபவமும், விரிந்த உள்ளமும் உள்ள கல்வியாளர்களைக் கொண்ட குழு போட்டு,  குறிப்பிட்ட கால வரையறைக்குள் சென்னை பல்கலைக் கழகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் காவியடிக்கப்பட்டு வரும் பல்கலைக் கழகங்களையும் காப்பாற்ற முடியும்!
உயர்கல்வி சீரழிவிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றவேண்டும்!
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அரசு உத்தரவிற்குக் கீழ்படியாமை, குற்றவாளிகளை ஆளுநர் காப்பாற்றிடும் அரசியலில் அதீதம் நடைபெறுகிறது.
உயர்கல்வி மாணவர்களின் கல்வி இப்படி இத்தகையவர்களால் சீரழிக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?
முதலமைச்சர் அவர்களின் இரக்க இதயத்திற்கும், உடனடி நடவடிக்கைக்கும் பெற்றோர், மாணவர்கள், பல்கலைக் கழகப் பணியாளர்களின் சார்பில் நமது நன்றி!
அடுத்தகட்ட நடவடிக்கை அவசியம், அவசரம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 
4-3-2024 

No comments:

Post a Comment