தொடர்வோம் அன்னையை!
– கவிஞர் கலி.பூங்குன்றன்
அன்னை யாரெனக்
கேட்டால்
அன்னை மணியம்மையைத்தான்
அன்புக் கரங்கள்
காட்டும்!
சுயநல வாழ்வில்
சொக்கவில்லை
சுக வாழ்வின்
சுரங்கத்தைத்
தேடி அலைவது
பொதுவாக
மனிதப் புத்தியின்
பாலபாடம்!
படிப்பையும் துறந்து
வாலிப வசந்தத்தையும்
காலில் மிதித்து –
மானுடத்தைக் காக்க
மகத்தான தலைவர் ஒருவர்
தள்ளாத வயதிலும்
தத்துவ மழையை – அதோ
பொழிந்து கொண்டுள்ளாரே!
பொழுதெல்லாம்
பொதுத் தொண்டெனும்
புலி வேட்டை
ஆடுகிறாரே!
அவருக்குக்
குறைந்தபட்சம் – ஒரு
கைத்தடியாகவாவது
இருப்போம் என்ற எண்ணம்
யாருக்கு வரும்?
அந்தப் பெண்ணைத் தவிர?
இது ஓர் உலக
அதிசயம்!
புத்தக மூட்டையைச்
சுமந்தார்
அவர் போகுமிடமெல்லாம்
சுழன்றார்!
முதுமை நோய் அந்தத்
தலைவரை
விரட்டி விரட்டி
துன்புறுத்திய போது – அதனைத்
துரத்தியடித்தார்
தூய பணிவிடையால்!
தொண்ணூற்று
அய்ந்துவரை
தோள் கொடுத்துத்
தலைவரை வாழவைத்து
தன்பணி முடிந்ததென்று
அறுபதுக்கு முன்பே
பறந்தது அந்தத்
தாய்ப் பறவை!
கழுத்தினில் ஒரு
சரடு இல்லை
காதினில் தோடுமில்லை.
சாதாரண கருப்புடை
கையிலோ ஒரு துணிப்பை!
எல்லா மிருந்தும்
ஏதுமற்றவர்போல்
எளிமையின்
வலிமையைக்
காட்டினார்!
எங்கள் அம்மா
மணியம்மா!
பிறந்த நாள்
மார்ச்சுப் பத்து
பின் தொடர்வோம் – அவர்தம்
புறநானூற்றுப்
பாதையை!
No comments:
Post a Comment