பல நெருக்கடியான, அடுக்கடுக்கான பணிச் சுமைகள் காரணமாக ‘வாழ்வியல் சிந்தனைகள்’ மூலம் வாசக உறவுகளோடு முன்பு போல கலந்துறவாடவில்லையே என்ற ஏக்கப் பெரு மூச்சு என்னுள் எழத்தான் செய்கிறது!
என்ன செய்வது – காலத்தை எவ்வளவு நாம் கட்டிப்பிடித்தாலும் அது எளிதில் நம் பிடிக்குள் அகப்படுவதில்லை; அன்பு ஒன்றுதான் அப்படி நம்முள் வந்து அகப்பட்டுக் கொண்டு, நம் பிடியை தனது இருப்பிடமாக்கிக் கொள்ளும் கருணை காட்டுகிறது!
அதனால்தான் வடலூர் வள்ளலார் என்னும் கருணையின் முழு உருவம் பொருத்தமாக ஒரே வரியால்
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!” என்று ஓங்கி முழங்கினார்! காலம் பிடிக்கு சிக்காதது. என்றாலும் ‘வாழ்வியல் சிந்தனை’க்கு இடமின்றி இருந்தால் வாசகர்களின் அன்புக்கோபத்திற்கும் ஆளாக நேரிடுமே என்பதால், விட்டதை விட்டதாக ஆக்காமல், தொட்டதாகவே இனியும் இருப்பதில் எனக்கே ஒரு தனி மகிழ்ச்சி உண்டே!
உலகப் புகழ் வாய்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ரகுராம் ஜி. ராஜன் – அவருடன் பென்சில்வேனியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ரோகித் லாம்பா அவர்கள் இணைந்து – இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் குறித்த ஒரு புதிய பார்வையை அளிக்கும் அருமையான நூலை – படிக்கப் படிக்கச் சுவையாக உள்ள நூலை”Breaking the Mould : Reimagining India’s Economic Future” என்ற தலைப்பில் அருமையாக எளிதில் எவருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளார்.
அருமை ஆங்கிலத்தில் உள்ள இதுபோன்ற புத்தகங்கள் தமிழில் வந்தால், ஆங்கிலத்தில் படிக்க வாய்ப்பற்றவர்கள் தமிழில் படித்து பல சிக்கலான பொருளாதார விதிகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமே என்று எண்ணியதுண்டு.
அந்தக் குறையை மும்பை நண்பர் PSV குமாரசாமி அவர்கள், “பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம்” என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக எழுதி, “மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளதை. அறிந்தேன்! – படித்தேன்!! – சுவைத்தேன்!!!
யான் பெற்ற இன்பம் எம் வாசகர் பெற்றால்தானே எமக்கு என்றும் மன நிறைவு ஏற்படும் என்பதால் இதன் சில பகுதிகளை மட்டும் எடுத்துக்காட்டுகிறேன்.
ஏராளமான படித்த இளைஞர்கள் வேலை, வேலை என்று அலைவதும், கிட்டாததால் விரக்தி அடைவதும், மன இறுக்கத்திற்கு ஆளாகி, தவறான குறுக்கு வழிகளில் – சட்ட விரோதச் செயல்களைக் கூடச் செய்து தங்களது வயிற்றைக் கழுவி வாழும் கொடுமையான நிலை இன்று உள்ளது!
கல்வி என்ற கருவியும், தன்னம்பிக்கை, கடும் உழைப்பும் இருக்கும் எவரும் வேலை கேட்பதை விட்டு விட்டு “வேலை கொடுக்கும்” வகையில் உயர்ந்து முன்னேறிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாகிவிட முடியும்.
அந்நூல் முன்னுரையில் அந்த பொருளாதார நிபுணர்கள் முஸ்தபா என்ற கேரள இளைஞரின் வறுமை ஒழிந்த வாழ்வின் மலர்ச்சியை கற் பனையாக அல்ல – நடந்த நிகழ்வினை அப்படியே அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
இதைப் படித்து, சோதனைகளைத் தங்களது வாழ்வில் உயரப் பயன்படுத்திக் கொள்க!
சிறு சிறு ஏமாற்றங்கள், நஷ்டங்கள், இருள் சூழ்ந்த மேகக் கூட்டங்கள் எப்போதும் ஓரிடத் திலேயே இருப்பதில்லை – கலையும் – பரந்த வெளிச்சம் கிட்டும் என்பதை நடந்த நிகழ்வு மூலம் சுட்டுகிறார்கள். படியுங்கள்.
தன்னெழுச்சியோடு தன்னம்பிக்கை பெற்று தன் நிலையின் உச்சத்தைத் தொட தவறாதீர்கள்.
அந்த முன்னுரையில்
“அய்.டி.ஃ பிரெஷ் ஃபுட் நிறுவனமும் கல்வியின் சக்தியும்” என்ற துணைத் தலைப்பில் உள்ள ஒரு சிறு பகுதி.
I.D. Fresh Food Company (Kerala)
இதில் I.D. என்பது என்ன தெரியுமா? I – Idly, D- Dosai சுவை நாக்கைத் தொடுகிறதல்லவா படியுங்கள்.
“அய்டி ஃபிரெஷ் ஃபுட்’ நிறுவனமும் கல்வியின் சக்தியும்
பாரம்பரியமான தோசை மாவு உற்பத்தித் தொழிலில் கூடச் சேவையைப் பிணைக்க முடியும் என்பதை அய்டி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனம் நிரூபித்துள்ளது. இதன் இணை நிறுவனரான பி.சி. முஸ்தபா ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். நாம் இன்னும் அதிகமாகப் பார்க்க விரும்புகின்ற புதிய இந்தியாவிற்கான ஒரு கச்சிதமான எடுத்துக்காட்டாக அவர் விளங்குகிறார். அவருடைய அப்பா, கேரளத்திலுள்ள வயநாடு என்ற இடத்தில் ஓர் இஞ்சித் தோட்டத்தில் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்கு இஞ்சியை மண்ணுக்குள்ளிருந்து தோண்டி யெடுத்துக் கழுவி, அதை வண்டிகளில் ஏற்ற வேண்டிய வேலை அவருடையது. முஸ்தபா ஒரு சிறுவனாக இருந்தபோது, மூன்று வேளை உணவு என்பதுகூட அவருக்கு ஓர் எட்டா கனவாகத்தான் இருந்தது. அவர்களுடைய கிராமத்திற்கு அருகே ஒரே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதில் படித்து வந்த முஸ்தபா, ஆறாவது வகுப்பில் தேறாமல் போனதால் தன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, தன் அப்பாவுடன் தோட்ட வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.
சில நாட்கள் கழித்து, முஸ்தபாவின் கணித ஆசிரியரான மேத்யூ, தோட்டத்திற்கு வந்து அவரைத் தனியாக அழைத்துப் பேசினார். “நீ உன் வாழ்க்கை முழுவதும் இப்படி ஒரு தொழி லாளியாகவே இருந்துவிட விரும்புகிறாயா? அல்லது, படித்து வாழ்க்கையில் முன்னேறப் போகிறாயா? வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், மீண்டும் பள்ளிக்கு வந்து சேர்கின்ற வழியைப் பார்,” என்று அவர் அக் கறையுடன் முஸ்தபாவை அதட்டிவிட்டுச் சென்றார். அதனால், முஸ்தபா மீண்டும் பள்ளிக்குச் சென்று ஆறாவது வகுப்பில் சேர்ந்தார். அவர் தன்னைவிட இளையவர்களுடன் சேர்ந்து படிக்க வேண்டியிருந்ததால், அவர்களுடைய கிண்ட லுக்கும் கேலிக்கும் அவர் ஆளானார். அப்போது, ஆசிரியர் மேத்யூ. முஸ்தபாவுக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கினார்: “உனக்குத் தன்னம் பிக்கை குறைவாக இருக்கும்போது, சிறிய வெற்றிகளில் கவனம் செலுத்து!” அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட முஸ்தபா, முதலில் கணிதத்தில் மட்டும் தன் கவனத்தைக் குவித்து, அதில் வகுப்பிலேயே முதலாவதாக வந்தார். அதைத் தொடர்ந்து, மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்வதை நிறுத்தினர். அது அவருடைய தன்னம்பிக்கையை உயர்த்தியது. அடுத்து அவர் தன் வகுப்பிலேயே முதல் மாணவராக வந்தார். சிறந்த மதிப்பெண்களுடன் பள்ளிப் படிப்பை முடித்த அவர், இறுதியில், பெரிதும் மதிக்கப்பட்டக் கல்வி நிறுவனமான, கோழிக்கோடு நகரத்திலுள்ள தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்து பயின்று, கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
(தொடரும்)
No comments:
Post a Comment