பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
பெண்களை வம்புக்கு இழுக்கும் குருமூர்த்தி
(21.2.2024 ‘துக்ளக்’ இதழில் திருவாளர் எஸ்.குருமூர்த்தி எழுதிய பதில்களுக்குப் பதிலடிகள் இங்கு)
கேள்வி: பெண்ணுரிமைவாதிகளால் யாருக்கு லாபம்?
பதில்: பெண்ணுரிமைவாத அமைப்புகளுக்கு கொள்ளை லாபம்.
கேள்வி: பெண்ணால் சாதிக்க முடியாதது எது?
பதில்: வரம்பை மீறிய ஒரு பெண்ணால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.
நமது பதிலடி: சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி என்ன பேசினார்? “இந்தியா வில் பெண்மை உள்ள பெண்கள் 30%தான் உள்ளனர்” என்று கூறி பெண்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வில்லையா? (ஆகஸ்டு 25, 2019)
இவரின் மகா பெரியவாள் சங்கராச்சாரியார், வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று பேட்டி கொடுத்து மொத்தடிபடவில்லையா?
பெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ள வர்கள் என்று இவாளின் மனுதர்மம் கூறவில்லையா? (மனுதர்மம் – அத்தியாயம் 9, சுலோகம் 19).
பக்திச் சிறையில் மாட்டித் தவிக்கும் பெண்கள் பகுத்தறிவு பெற்றால், இந்தக் கூட்டத்திற்கான முடிவுரை வெடித்துக் கிளம்பாதா?
– – – – –
கேள்வி: சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி என்று அனைவரும் நம்பி இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றது குறித்து?
பதில்: ஏதோ சூது நடந்திருக்கிறது என்று தோன்று கிறது. வீடியோவில் தேர்தல் அதிகாரியின் செயல்க ளைப் பார்த்தால், அவருக்கும் அதில் பங்கு இருப்பது போலத் தோன்றுகிறது.
நமது பதிலடி: பா.ஜ.க. எந்தத் தில்லு முல்லுகளையும் செய்து ஜெயிக்கும் என்று துக்ளக் கூட்டமே வேறு வழியின்றி ஒப்புக் கொண்டுள்ளது.
– – – – –
கேள்வி: ராமபிரானைக் கண்டு திராவிட மாடல் அரசு ஏன் அலறுகிறது?
பதில்: பிள்ளையாரை திராவிடம் உடைத்தது, தமிழ கமெங்கும் பல்லாயிரக்கணக்கில் பிள்ளையார் கோவில் கள் உருவாகின. ராமருக்கு திராவிடம் செருப்பு மாலை போட்டது. நாட்டின் அரசியலையே ராமர் மாற்றி, உலக அளவில் பிரபலமாகி விட்டார். திராவிடம் எதை எதிர்த்தாலும் அது அசுர வளர்ச்சி பெறுகிறது. அதனால் தான் ராமரைக் கண்டு திராவிட மாடல் அரசு அலறுகிறது.
நமது பதிலடி: 1971இல் சேலத்தில் ராமனுக்குச் செருப்பு மாலை போட்டது தி.க. என்று புரளியைக் கிளப்பினார்களே! அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டில் – எந்தத் தேர்தலிலும், எந்தக் கட்சியும் பெற்றிராத அளவுக்கு – திமுக 184 இடங்களை அல்லவா பெற்றது! இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியற்றது என்று ஆச்சாரியார் (ராஜாஜி) ஒப்பாரி வைக்கவில்லையா?
– – – – –
கொலைகார பார்ப்பனர்கள்
கேள்வி: தி.மு.க. நடத்தும் மாநாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் அரைகுறை ஆடையுடன் பெண் களை ஆட விடுவதும் திராவிட மாடல்தானா? கனி மொழிக்கு இதில் உடன்பாடு உண்டா?
பதில்: “அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல, நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல; மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்; கணவனை இழந்த ஒரு பெண்மணியும், மனைவியை இழந்த ஒரு தலைவரும் மணிக்கணக்கில் என்ன செய்தார்கள்; நாடாவை அவிழ்த்து…” என்றெல்லாம் முன்னணித் தலைவர்களே பேசி வளர்த்த கட்சி, பெண்களை முழு ஆடையுடன் எப்படி பார்க்க விரும்பும்? தி.மு.க. பதவிக்கு வந்த பிறகு மாவட்ட வாரியாக நடத்திய கலைநிகழ்ச்சிகளில் பெண்கள் உடையை கழட்டும் காட்சிகள் நடக்கிறது என்று என்னிடம் ஓ.வி.அளகேசன் கூறி, தமிழகம் எங்கு போகிறது என்று தெரியவில்லையே என்று அங்கலாய்த்தார். பெண்கள் உடையை கழட்டும் நிகழ்ச்சியை நடத்துவது தி.மு.க.வுக்கு புதிது அல்ல. அதை கனிமொழி ஒருவரால் திருத்த முடியுமா? அவருக்கு ஈடுபாடு இல்லை என்றாலும் வேறு என்ன செய்வார் அவர்.
நமது பதிலடி: கோயில்களில் விழா என்ற பெயரில் ஆடும் டப்பாங் குத்துகளும், அரைகுறை ஆடையுடன் ஆடும் ஆட்டங்களும் கண்ணுக்குத் தெரியவில் லையா? கோயில் கோபுரங்களிலும், தேர்களிலும் பொறிக்கப்பட்டுள்ள ஆபாச நிர்வாண உருவங்களைப் பார்த்த பிறகும் பார்ப்பனர்களுக்கு இப்படி எல்லாம் எழுதிட எங்கிருந்து தைரியம் வந்ததாம்?
– – – – –
கேள்வி: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர், பிரதமர் கள் தண்டனை பெறுவது தொடர்கதை ஆவது ஏன்?
பதில்: முகலாய பரம்பரையில் தந்தை, சகோதரர் களைப் படுகொலை செய்து, சிறையில் அடைத்து, ஆட்சிக்கு வருவது சகஜமான விஷயம் (1). பாகிஸ்தான் முகலாய பரம்பரைப்படி நடக்கும் நாடு.
(1) https://www.news9live.com/knowledge/how-did- mughal-emperors-die-what-does-history- say-about- their-deaths-know-details-here-194877
நமது பதிலடி: சுங்கப் பேரரசு எப்படி வந்தது? புஷ்யமித்திர சுங்கன் என்ற பார்ப்பான் மவுரியப் பேரரசன் பிரகத்திர மவுரியனை கொலை செய்து, ராஜ்ஜியத்தை கைப்பற்றவில்லையா?
தமிழ்நாட்டில் சுந்தர சோழன் மகன் ஆதித்த கரி காலனை கொன்றவர்கள் யார்? ரவிதாசன், பரமேசு வரன், சோமன், தேவதாசன் ஆகிய பார்ப்பனர்கள் தானே! கொலைகாரர்களைத் தண்டிக்க உடையார் குடி சிவன் கோயிலில் விசாரணை நடத்தப்படவில்லையா? கொன்றவர்கள் பார்ப்பனர்கள் – அவர்களை விசாரித்தவர்களும் பார்ப்பனர்கள் அடங்கிய குழு தானே! தண்டனை என்ன தெரியுமா? 32 பசுக்கள், 12 குடம் பொன், ஆடைகள் மற்றும் பணியாட்களையும் கொடுத்து எல்லை வரையில் பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்லப்படவில்லையா? உடையார்குடி கல்வெட்டு இன்னும் சாட்சியம் கூறுகிறதே! இந்த யோக்கியதை உள்ளவர்கள்தான் முகலாய பரம்பரை யில் வந்த சகோதரர்களைப் படுகொலை செய்ததைப் பற்றி வித்தாரம் பேசுகின்றனர்.
– – – – –
கேள்வி: கேரள நீதிமன்றம், பா.ஜ.கட்சியின் நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் என்பவரை கொலை செய்த வழக்கில், (பி.எஃப்.அய். அமைப்பைச் சேர்ந்தவர்க ளுக்கு) 15 பேர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங் கியது பற்றி?
பதில்: அவரது மனைவி, பெற்றோர், குழந்தைகள் முன்பு அவரை கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்தவர்களுக்கு, குறைவான தண்டனை வழங்க முடியாது என்று கூறியிருக்கிறது நீதிமன்றம்.
நமது பதிலடி: குஜராத்தில் மோடி ஆட்சியின் போது சிறுபான்மை சமுதாய இஸ்லாமியர்கள் குடும்பம் குடும்பமாகக் கொலை செய்யப்படவில்லையா? பெஸ்ட் பேக்கரி கொலையை எளிதில் மறந்து விட முடியுமா? பேக்கரி அடுப்பில் விறகுக் கட்டையைப் போல கட்டி அந்த அடுப்பில் தூக்கி எறிந்து எரித்துச் சாம்பலாக்கவில்லையா? அதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனரா?
பில்கீஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை காவிக் கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்யவில்லையா? அவரது மூன்று வயது குழந்தையை தாயின் முன்பே அடித்துக் கொல்லவில்லையா? அந்தப் பெண்ணின் குடும்பத்தாரையே படுகொலை செய்து ‘தாகம்’ தீர்க்க வில்லையா?
இந்தக் குற்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை குஜராத் பிஜேபி அரசு தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்யவில்லையா? உச்சநீதிமன்றம் தலையிட்டு, விடுதலயானவர்கள் முழுத் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று சொன்னதன் பெயரில் தலைமறைவான குற்றவாளிகள் சரண் அடையவில்லையா?
– – – – –
கேள்வி: ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதே?
பதில்: 1993 வரை ஞானவாபி மசூதிக்குள் சென்று, ஹிந்துக்கள் வழிபட்டு வந்ததை உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தபோது முகலாம் சிங் தடை செய் தார். அந்தத் தடையை நீக்கி, வழிபாட்டை அனுமதித் திருக்கிறது நீதிமன்றம். நீதிமன்றம் ஹிந்துக்களுக்கு புதிதாக எந்த உரிமையையும் அளிக்கவில்லை.
நமது பதிலடி: பழனி முருகன் கோயிலுக்குள் மற்ற மதத்தினர் போகக் கூடாது என்று ஆக்கப்பட்டுவிட்டதே!
பழனி முருகன் கோயில் யாருக்குச் சொந்தமானது? சித்தர் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலை தானே பழனி முருகன் சிலை. அவர் பரம்பரையைச் சார்ந்த பண்டாரத்தாரே பூசை செய்து வந்தனர். இப்பொழுது அந்தக் கோயிலைப் பார்ப்பன அர்ச்சகர்கள் கைப்பற்றியது எப்படி? நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் படைத் தலைவனாக இருந்த இராமப்பையன், பழனி கோயிலுக்குச் சென்றபோது ‘சூத்திரர்களாகிய’ பண்டாரத்தாரிடம் பிரசாதம் வாங்க மறுத்து, வெளியிலிருந்து பார்ப்பனர்களைக் கொண்டு வந்து திணித்த தில்லு முல்லுகளை மறைக்க முடியுமா?
வேளாங்கண்ணிக் கோயிலுக்கும், நாகூர் தர்கா வுக்கும் மற்ற மற்ற மதத்தவர்கள் உள்ளே செல்வதால், அந்தக் கடவுள்கள் எல்லாம் சாகாதபோது – ஹிந்துக் கோயில்களுக்குள் பிற மதத்தவர் சென்றால் மட்டும் கடவுள் செத்துப் போய் விடுவாரா?
திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கும் சீரங்கம் ரங்கநாதனுக்கும் தங்கத் தால் பூணூல் போட்டு வைத்திருக்கும் கும்பலாயிற்றே!
அதாவது கடவுளும் பார்ப்பானும் ஒரு ஜாதி – எவ்வளவு போக்கிரித்தனமும் – சூழ்ச்சியும் புதைந்து கிடக்கிறது – பார்த்தீர்களா?
– – – – –
கேள்வி: ‘புத்தர், வள்ளுவர், அவ்வையார், வள்ளலார் படங்களை வெளியிட்டு, இவர்கள் ஸநாதன எதிர்ப்பாளர்கள்’ என்று விடுதலை சிறுத்தைகள் விளம்பரம் செய்திருக்கிறதே?
பதில்: “பிராமணன் என்பவன் ஆன்மிகத்தால் உயர்ந்தவன்” என்று கூறினார் புத்தர் (1). “அந்தணர் என்போர் அறவோர்” என்று கூறினார் வள்ளுவர் (2). “ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்” என்று பாடினார் ஔவையார் (3). “அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி” (அந்தணர் என்றால் ஒழுக்க நெறிகளில் சிறந்து விளங்குவோர்) என்றார் வள்ளலார் (4). இதில் யார் சனாதனத்துக்கு எதிர்ப்பாளர் என்கிறார் திருமாவளவன்?
(1) Buddhism and Hinduism Wikipedia,
(2) திருக்குறள் அறத்துப்பால் நீத்தார் கடன் குறள் – 30, (3) கொன்றைவேந்தன், (4)https://www.vallalarspace.com/VallalarVarugai/Articles/2817
நமது பதிலடி: ஸநாதனம் என்றால் வருணாசிரமம் என்று தானே குருமூர்த்தியின் மகா பெரியவாள் – காஞ்சி சங்கராச்சாரியர் சந்திர சேகேரேந்திர சரஸ்வதி – ‘தெய்வத்தின் குரலில்’, ‘சனாதன தர்மமே சங்கரர் தரும் நெறி’ என்ற தலைப்பில் பக்கம் 282இல் குறிப் பிட்டுள்ளாரே!
இந்த வருணாசிரம தர்மத்தை எதிர்த்தவர்கள் தானே புத்தர், அவ்வையார், வள்ளலார், இதனைத் தானே ‘விடுதலைச் சிறுத்தைகள்’ விளம்பரம் செய் கிறார்கள். இதில் குற்றங்கூற என்ன இருக்கிறது?
No comments:
Post a Comment