அகில இந்திய அபேதவாதிகள் நிருவாகக் கமிட்டிக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு அலகாபாத்துக்குச் சென்றிருக்கும் அபேதவாதிகள் அலகாபாத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினார்கள். அப்பொழுது காங்கிரஸ் லட்சியத்தையும், அபேதவாதிகள் லட்சியத்தையும் ஒப்பிட்டு, இந்தியா சுதந்திரம் பெறுவதோடு காங்கிரஸ் லட்சியம் கைகூடி விடுமென்றும், ஆனால் சமூக, பொருளாதார விடுதலை பெற்ற பிறகே அபேதவாதிகள் லட்சியம் கைகூடுமென்றும் அபேதவாதிகள் பேசினார்களாம்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் பேசுகையில், அபேதவாதிகள் தமது கொள்கைகளை விளக்கிப் பேசுகையில் காங்கிரஸையோ, இதர கட்சிகளையோ தாக்கிப் பேசக்கூடாதென்றும் மற்றக் கட்சிகளுக்கும் இயங்க உரிமையுண் டென்றும் கூறினாராம். தென்னாட்டுச் சுற்றுப் பிர யாண காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி ஒழியுமட்டும் நான் போராடுவேன்; ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்தே தீருவேன் என வீரம் பேசிய ஜவஹர்லாலுக்கு இப்பொழுது மனமாற்ற மேற்பட்டிருப்பதற்குக் காரணம் என் னவோ தெரியவில்லை.
காங்கிரஸை அபேதவாதிகள் கண்டித்தது அவருக்குப் பிடிக்காததனால் அவர் அவ்வாறு கூறினாரா? அல்லது இதர கட்சிகளின் மீதும் அவருக்குக் கருணை பிறந்து விட்டதா? காங் கிரஸ் ஒன்றுதான் வாழவேண்டும், இதர கட்சிகள் எல்லாம் ஒழிய வேண்டும் என்று கூறுவோர், அரசியல் ஞானமே இல்லாத அடி முட்டாள்களாவர். பல திறப்பட்ட கட்சிகள் இருந்தால்தான் தேசம் நலம் பெறும். ஒரு கட்சியே இருக்க வேண்டுமென்று கூறுவது ஒரு மாதிரி “பாசிஸ்டு” நியாயமாகும். காங்கிரஸ் இப்போது ‘பாசிஸ்ட்’ இயக்கமாகவே உருமாறி வருகிறது. வரப் போகும் தேர்தலில் காங்கிரஸ்காரர் ‘பாசிஸ்ட்’ முறைகளையே பின்பற்றப் போகிறார்கள். அபேதவாதிகள் காங்கிரஸைத் தாக்கிப் பேசியதை, தாங்க முடியாத ஜவகஹர்லால் மற்றக் கட்சிகளை அனாவசியமா கவும். அற்பத்தனமாகவும் தாக்கிப் பேசுவது என்ன நீதியோ தெரியவில்லை. அலகாபாத் கூட்டத்தில் இதர கட்சியாருக்கும் இயங்க உரிமையுண்டென்று ஒப்புக்கொண்ட பண்டித ஜவஹர் லால் அவ்வவிப்பிராயத்தை உறுதியுடன் கடைப்பிடித்து இனி மேலாவது ஒழுகுவாரா?
– ‘விடுதலை’ – 4.11.1936
No comments:
Post a Comment